100வது படம் அல்லூரி சீதாராம ராஜு.. டோலிவுட்டில் மகேஷ் பாபு தந்தை கிருஷ்ணா நடத்திய சாம்ராஜ்யம்!
ஹைதராபாத்: ஆர்ஆர்ஆர் படத்தின் கிளைமேக்ஸில் ராம்சரண் அல்லூரி சீதாராம ராஜுவாக மாறும் அந்த அதிரடியான கதாபாத்திரத்தில் அப்பவே அப்படி நடித்து தெலுங்கு ரசிகர்களை திக்குமுக்காட செய்திருந்தார் டோலிவுட்டின் மூத்த நடிகர் கிருஷ்ணா.
டோலிவுட் சூப்பர்ஸ்டார் கிருஷ்ணா உடல்நலக்குறைவு காரணமாக காலமான செய்தி ஒட்டுமொத்த திரைத்துறையையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
மகேஷ் பாபுவின் அப்பா 350 படங்களுக்கு மேல் நடித்து சினிமாவில் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தையே நடத்தி உள்ளார்.

350 படங்கள்
1965ம் ஆண்டு வெளியான தேனே மனசுலு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் கிருஷ்ணா. அடுத்த ஆண்டு கண்ணே மனசுலு படத்தில் நடித்தார். ஆனால், அவரது 3வது படமான கூடாச்சாரி 116 படம் தான் அவருக்கு முதல் வெற்றியை தேடித் தந்தது. பிரைவேட் மாஸ்டர், லக்ஷ்மி நிவாசம், பெடட்டா, கங்கா மங்கா, ராமராஜ்யம்லு பீமராஜு, இன்ஸ்பெக்டர் ருத்ரா, தாதாகிரி, சுகுமாருடு, ஸ்ரீஸ்ரீ என மொத்தம் 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் கிருஷ்ணா.

100வது படம்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஸ்ரீராகவேந்திரா திரைப்படம் 100வது படமாக அமைந்ததை போல டோலிவுட்டின் மூத்த நடிகர் கிருஷ்ணாவுக்கு 100வது படமாக அல்லூரி சீதாராம ராஜு படம் அமைந்தது. மகேஷ் பாபுவின் சரிலேரு நீக்கெவ்வரு படத்தில் அவருடைய அப்பா சுதந்திர போராட்ட வீரரான அல்லூரி சீதாராம ராஜுவாக அப்பவே அப்படி நடித்து தெலுங்கு சினிமா ரசிகர்களை உணர்ச்சி பொங்க வைத்தவர்.

ஒரே வருடத்தில் 18 படங்கள்
350 படங்கள் நடிப்பது எல்லாம் சாதாரண விஷயமில்லை. நடிகர் கிருஷ்ணா 1972ம் ஆண்டு மட்டும் ஒரே வருடத்தில் அதிகமாக 18 படங்களில் நடித்து பெரிய சாதனை செய்துள்ளார். பண்டட்டி காபுரம், மஞ்சி வாலக்கி மஞ்சு வாடு, இன்ஸ்பெக்டர் பார்யா உள்ளிட்ட படங்கள் அந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றன.

தமிழில் கந்தசாமி
மகேஷ் பாபுவும் அவரது அப்பாவும் மற்ற மொழி படங்களிலோ இந்தி படங்களிலோ நடிப்பதை கொஞ்சமும் விரும்பவில்லை. மகேஷ் பாபு எப்படி ஸ்பைடர் எனும் ஒரே ஒரு தமிழ் படத்தில் ஹீரோவாக நடித்திருந்தாரோ அதே போல கந்தசாமி எனும் படத்தில் சிபிஐ உயர் அதிகாரியாக கிருஷ்ணா ஒரே ஒரு தமிழ் படத்தில் மட்டுமே நடித்துள்ளார்.

உயரிய விருதுகள்
2009ம் ஆண்டு இந்திய அரசின் உயரிய விருதான பத்ம பூசன் விருது நடிகர் கிருஷ்ணாவுக்கு வழங்கப்பட்டது. ஆந்திரா பல்கலைக் கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது. அல்லூரி சீதாராம ராஜு படத்தில் நடித்ததற்காக நந்தி விருதை வென்றார். என்டிஆர் தேசிய விருது 2003ல் வழங்கப்பட்டது. 1997ல் ஃபிலிம்ஃபேர் வாழ்நாள் சாதனையாளர் விருது இவருக்கு வழங்கப்பட்டது. வாழ்ந்தா இப்படியொரு வாழ்க்கையை வாழணும் என சிங்கமாக வாழ்ந்து மறைந்துள்ளார் தெலுங்கு சூப்பர்ஸ்டார் கிருஷ்ணா.


Click it and Unblock the Notifications











