வெற்றிமாறனுக்கு இதுகூடவா தெரியாது..குவியும் கண்டனம் - தொடங்கியது பஞ்சாயத்து
சென்னை: வெற்றிமாறன் அடுத்ததாக இயக்கும் படத்துக்கு வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் தலைப்புக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
கோலிவுட்டின் முக்கியமான இயக்குநராக வலம் வரும் வெற்றிமாறன் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டோரை வைத்து விடுதலை படத்தை இயக்கியிருக்கிறார். இரண்டு பாகங்களாக விடுதலை உருவாகியிருக்கிறது. இதன் முதல் பாகம் வரும் மார்ச் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

வெற்றிமாறனின் அடுத்தடுத்த திட்டங்கள் என்ன?
விடுதலை படத்தை முடித்த பிறகு வாடிவாசல் ஆரம்பிக்கப்படும் அதன் பிறகு வடசென்னை 2 ஆரம்பிக்கப்படும் என ட்ரெய்லர்&இசை வெளியீட்டு விழாவில் வெற்றிமாறன் அறிவித்திருந்தார். சூழல் இப்படி வடசென்னை 2ஐ படமாக இயக்குவதற்கு பதில் வெப் சீரிஸாக உருவாக்க அவர் திட்டமிட்டிருக்கிறார் என கூறப்பட்டது. ஆனால், வடசென்னை 2 படமாகத்தான் உருவாகும் என கூறப்படுகிறது. இருப்பினும் வெற்றிமாறன் வெப் சீரிஸ் ஒன்றை இயக்கவிருக்கிறார் என தற்போது உறுதியாகியிருக்கிறது.

அமீர் வெளியிட்ட நிலமெல்லாம் ரத்தம் அப்டேட்
செங்களம் என்ற வெப் சீரிஸ் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய அமீர், "வெற்றிமாறன் இயக்கத்தில் நிலமெல்லாம் ரத்தம் என்ற படத்தில் நடிக்கிறேன்" என உறுதிப்படுத்தியிருந்தார். அதேசமயம் இது வெப் சீரிஸாக உருவாக இருக்கிறதா இல்லை படமாக உருவாக இருக்கிறதா என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. அது கூடிய விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிலமெல்லாம் ரத்தத்துக்கு பிரச்னை
இந்நிலையில் நிலமெல்லாம் ரத்தம் என்ற தலைப்பை மையமா வைத்து பிரச்னை எழுந்துள்ளது. அதாவது எழுத்தாளர் பா.ராகவன் யாசர் அராஃபத் குறித்து தனியார் இதழுக்கு தொடராக எழுதினார். அந்தத் தொடருக்கு நிலமெல்லாம் ரத்தம் என்ற தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. பின்னர் அது நூலாகவும் வெளிவந்தது. இந்தச் சூழலில் நிலமெல்லாம் ரத்தம் என்ற தலைப்பை தன்னிடம் அனுமதி கேட்காமல் வெற்றிமாறன் பயன்படுத்துவதாக ராகவன் குரல் எழுப்பியிருக்கிறார்.

எழுத்தாளர் ராகவனின் பதிவு
எழுத்தாளர் பா.ராகவன் இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில், "வெற்றிமாறனின் அசோசியேட் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு பாலா என்று ஒருவர் பேசினார். நிலமெல்லாம் ரத்தம் என்ற தலைப்பில் புத்தகம் இருக்கிற விவரமே எங்கள் தரப்புக்கு தெரியாது என்றார். நல்லது ஐயா எனது பதிப்பாளர் பேசுவார் அவரிடம் இதுகுறித்து பேசிக்கொள்ளுங்கள் என்றேன்" என பதிவிட்டுள்ளார். முன்னதாக, நிலமெல்லாம் ரத்தம் என்ற படத்தின் அமீர் கதாநாயகனாக நடிக்கிறார் என்ற செய்தியை பகிர்ந்து, "இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை" என பா.ராகவன் குறிப்பிட்டிருந்தார்.

பதிப்பாளரிடம் பேசியதா வெற்றிமாறன் தரப்பு
பா.ராகவனிடம் பேசிய அதே பாலா என்பவர் நிலமெல்லாம் ரத்தம் புத்தகத்தை பதிப்பித்த பதிப்பகத்திடம் பேசியதாகவும், அங்கும் இதே பதிலைத்தான் கூறியதாகவும் சொல்லப்படுகிறது. நிலைமை இப்படி இருக்க வெற்றிமாறன் எழுத்தாளர் அனுமதி இல்லாமல் இந்த தலைப்பை வைத்தால் அது மிகவும் தவறான விஷயம் என பலரும் கூறிவருகின்றனர்.

வெற்றிமாறனுக்கு இதுகூடவா தெரியாது
அதுமட்டுமின்றி வெற்றிமாறன் தீவிர வாசிப்பாளர் என்று அனைவரும் அறிவர். அதனை அவரேக்கூட பொதுவெளியில் சொல்லியிருக்கிறார். அப்படிப்பட்ட வெற்றிமாறனும் புகழ்பெற்ற நிலமெல்லாம் ரத்தம் புத்தகம் இருப்பது தெரியாதா? எனவும் சமூக வலைதளங்களில் ஒரு தரப்பினர் கேள்வி எழுப்பிவருகின்றனர். இந்தச் ச்மபவம் கோலிவுட்டில் புதிய பரபரப்பி ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











