விரைவில் விஜய்யை இயக்குவேன்...நம்பிக்கையுடன் காத்திருக்கும் வெற்றிமாறன்
சென்னை : இந்திய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் டைரக்டராக மாறி விட்டார் வெற்றிமாறன். 5 படங்கள் மட்டுமே இயக்கி இருந்தாலும் ரசிகர்களின் மனம் கவர்ந்த இயக்குனராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளார்.
இவர் இயக்கிய அசுரன் படம் பாக்ஸ் ஆபீசில் வசூலை குவித்ததுடன், சமீபத்தில் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதினையும் பெற்றுள்ளது. வெற்றிமாறன் தற்போது சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் படம் உள்ளிட்ட பல படங்களில் பிஸியாக இருந்து வருகிறார்.

படங்களின் பட்டியல்
இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், விஜய் சேதுபதி நடிக்கும் படத்துடன் வாடிவாசல் படத்தையும் இயக்கி வருகிறேன். நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் சூர்யா நடிக்கிறார்.

விஜய்யை இயக்குவேன்
இதுவரை 3 உறுதி செய்யப்பட்ட படங்களை இயக்கி வருகிறேன். விஜய்யை வைத்தும் படம் இயக்குவேன் என நம்புகிறேன். தற்போது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள படங்களை முடித்த பிறகு, விஜய் சார் உடனான படம் பற்றிய தெளிவான அறிவிப்புக்கள் வெளியிடப்படும் என்றார்.
பிஸியான வெற்றிமாறன்
மேலும் அசுரன் படத்தின் ரிலீசுக்கு பிறகு விஜய்யை சந்தித்து, ஒரு படம் பற்றி பேசினேன். ஆனால் அந்த சமயத்தில் எதுவும் உறுதியாகவில்லை. தற்போதைய படங்களை முடித்த பிறகு விஜய்யிடம் இருந்து நல்ல பதில் வரும் என நம்புகிறேன். இதற்கிடையில் வட சென்னையை மையமாக வைத்து வெப் சீரிஸ் ஒன்றை இயக்க உள்ளேன்.

வெப் சீரிசாகும் வடசென்னை
இது வட சென்னை படத்தின் இரண்டாம் பாகம் இல்லை. அதற்கு முந்தைய கதை என தனது அடுத்தடுத்த படங்கள் குறித்து பட்டியலிட்டார் வெற்றிமாறன். இதன் மூலம் அடுத்த சில ஆண்டுகளுக்கு வெற்றிமாறன் பிஸியாக இருப்பார் என்பது மட்டும் உறுதியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











