வெற்றிச் செல்வன்.. இன்னொரு சேது ரேஞ்சுக்கு இருக்கும்!- இயக்குநர் நம்பிக்கை
அஜ்மல் நடிக்கும் வெற்றிச் செல்வன் படம் இன்னொரு சேது ரேஞ்சுக்கு இருக்கும் என படத்தின் இயக்குநர் ருத்ரன் நம்பிக்கை தெரிவித்தனர்.
நடிகர் அஜ்மல், பாடகர் மனோ, ஷெரிப் மூன்று பேரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய படம் 'வெற்றிச்செல்வன்'. இப்படத்தின் நாயகியாக ராதிகா ஆப்தே நடித்துள்ளார். மேலும், அழகம் பெருமாள், கஞ்சா கருப்பு, தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ருத்ரன். இவரே இப்படத்தை தயாரிக்கவும் செய்துள்ளார். மணி சர்மா இசையமைக்கிறார். லோகநாதன், ரமேஷ் ஆகியோர் ஒளிப்பதிவை கவனிக்கின்றனர்.

மனநிலை பாதிக்கப்பட்டவர்கள்
இப்படம் குறித்து இயக்குனர் ருத்ரன் கூறுகையில், இது மனநிலை பாதிக்கப்பட்டவர்களை பற்றிய படம். பொதுவாக மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று, அவர்கள் சகஜ நிலைக்கு வந்த பிறகும் அவர்களை மருத்துவமனையில் இருந்து பெரும்பாலானோர் அழைத்துச் செல்வதில்லை. அவர்களுடைய ரத்த உறவுகள் முயற்சி செய்தால் மட்டுமே இவர்களை அழைத்துச் செல்லமுடியும்.

பதிவு
இப்படி குணமாகி இன்னமும் மனநிலை மருத்துவமனைகளில் நிறைய பேர் வாழ்ந்து இருக்கின்றனர். இதில் சில வி.ஐ.பி.க்களின் உறவினர்களும் இருக்கிறார்கள். மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் சகஜ நிலைக்கு திரும்பி வரலாம் என்பதைத்தான் இப்படத்தில் பதிவு செய்திருக்கிறேன்.

யு ஏ சான்று
அது மட்டுமல்லாமல், காதல், நகைச்சுவை, சென்டிமெண்ட் என கமர்ஷியல் விஷயங்களிலும் குறை வைக்கவில்லை. படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

ராதிகா ஆப்தே
அஜ்மல் இந்த படத்தில் இரண்டு கெட்டப்பில் வருகிறார். ராதிகா ஆப்தே எதார்த்தமான நடிகை. மிகவும் கண்ணியத்தோடு நடித்து கொடுத்திருக்கிறார். ஒரு நல்ல விஷயத்தைப் பதிவு செய்திருக்கிறோம் என்ற நிறைவு உள்ளது. தரத்தில் இன்னொரு சேது என்று இந்தப் படத்தைப் பார்த்தவர்கள் கூறியது சந்தோஷமாக உள்ளது," என்றார்.
இப்படத்தை சிலிக்கான் பிரெஷ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பாக எம்.நாகராஜன் மற்றும் கே.சுரேஷ் பாபு இணைந்து வெளியிடுகிறார்கள்.


Click it and Unblock the Notifications











