மதுரையில் இருந்து சம்பவத்தை தொடங்குகிறோம்.. அதிரடியாக அரசன் அப்டேட் கொடுத்த சிம்பு
சென்னை: நடிகர் சிம்பு நடிப்பில் அடுத்து உருவாகவுள்ள படம் அரசன். இந்த படத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்கவுள்ளார். படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். இவர்கள் மூவருடன் இணைந்து பணியாற்றவுள்ளார் இசையமைப்பாளர் அனிருத். படத்தின் டைட்டில் புரோமோசன் வீடியோ ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு எப்போது இருந்து தொடங்குகிறது என்ற அப்டேட்டை சிம்பு தெரிவித்துள்ளார்.
சிம்பு + வெற்றி மாறன்+ தாணு + அனிருத் = தரமான சம்பவம் என்று ரசிகர்களே கணக்கு போடும் அளவுக்கு பெரிய எதிர்பார்ப்பை இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தின் அறிவிப்பு வீடியோவுக்கு முன்னர் வரை வெற்றி மாறனை எங்கு சந்தித்தாலும், வட சென்னை பாகம் 2 அப்டேட் கேட்டுக் கொண்டு இருந்த ரசிகர்களை அரசன் அப்டேட் கேட்க வைத்துவிட்டார் வெற்றி மாறன். ஏற்கனவே வெற்றி மாறன் மற்றும் தாணு கூட்டணியில் ஏற்கனவே வெளியான அசுரன் படம் பெரிய வெற்றியைக் குவித்தது.

சிம்பு: அதேபோல் இவர்கள் கூட்டணி என்ற உடன் இருந்த எதிர்பார்ப்பை சிம்பு மேலும் பல மடங்கு உயர்த்தி விட்டார். இப்படி இருக்கும்போது, அரசன் படம் குறித்து அவ்வப்போது சில உறுதிப்படுத்தப்படாத பல தகவல்கள் உலா வந்த வண்ணம் இருந்தது. குறிப்பாக, நடிகை சாய் பல்லவி படத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. மேலும் இந்த படம் மத்தியச் சென்னையில் பிரபலமான மயிலை சிவக்குமாரின் வாழ்க்கை வரலாறு என்பதுதான் அந்த தகவல்.
அரசன் கதை: மயிலை சிவக்குமார் இறப்பதற்கு முன்னர், வெற்றிமாறனுடன் மிகவும் நெருக்கமான நட்பில் இருந்தார். மேலும் அவரது வாழ்க்கையில் நடைபெற்ற பல சம்பவங்களை வெற்றிமாறனிடம் தெள்ளத் தெளிவாகச் சொல்லி உள்ளார் என்றும், அவற்றை எல்லாம் தான் ரெக்கார்டு செய்து வைத்திருப்பதாகவும் வெற்றிமாறன் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். இப்படி இருக்கும்போது, இந்த படத்தில் சிம்புவின் கெட்-அப்பைக் பார்க்கும்போது அது மயிலை சிவக்குமாரின் வாழ்க்கையை மையப்படுத்திய கதையாகத்தான் இருக்கும் என்றும் பலரும் பேசி வருகிறார்கள்.

அரசன் அப்டேட்: இந்நிலையில் நடிகர் சிம்பு சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில், தான் அடுத்து அரசன் படத்தின் படப்பிடிப்பில் தான் கலந்து கொள்ளப் போவதாகவும். அந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 9ஆம் தேதி முதல் மதுரையில் நடைபெறவுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இதைக் கேட்ட ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











