விடுதலை 2 ட்ரெய்லர்.. தாக்கப்பட்டாரா விஜய்?.. வெடித்தது புது பஞ்சாயத்து.. அதிரவிடும் ஃபேன்ஸ்
சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், இளவரசு, ராஜீவ் மேனன், கௌதம் மேனன், சேத்தன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் விடுதலை 2. இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது உருவாகியிருக்கும் படத்தின் இரண்டாம் பாகத்துக்கும் சரியான எதிர்பார்ப்பு எழுந்திருக்கும் சூழலில்; நேற்று படத்தின் ட்ரெய்லர் வெளியானது. அதில் வரும் ஒரு வசனத்தை வைத்து புது பஞ்சாயத்து கிளம்பியிருக்கிறது.
இந்திய அளவில் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். அவர் இதுவரை இயக்கியிருக்கும் பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன், விடுதலை ஆகிய அனைத்து படங்களுமே ஹிட்டடித்தவை. ஹிட் என்பதோடு மட்டுமின்றி சமூகத்தில் பெரும் விவாதத்தை கிளப்பக்கூடியவை அவரது படைப்புகள்.உதாரணமாக அசுரன் படம் வந்த பிறகு பஞ்சமி நிலம் பற்றிய விவாதங்கள் சமூகத்தில் அதிகளவு எழுந்தன. அதேபோல் விசாரணை வந்தபோது காவல் துறையினரின் உண்மையான முகத்தை காட்டிவிட்டார் என்ற பேச்சுக்களும் எழுந்தன.

விடுதலை: அந்தவகையில் அவர் எடுத்த விடுதலை படமும் கவனம் ஈர்த்தது. எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற சிறுகதையை தழுவி விடுதலை படம் எடுக்கப்பட்டாலும்; அதில் அதிகளவு வெற்றிமாறனின் டச் இருந்தது. முக்கியமாக நக்சல் பாரி இயக்கத்தை சேர்ந்த புலவர் கலியபெருமாள் கேரக்டரில் விஜய் சேதுபதியை நடிக்க வைத்திருந்தார். சூரி கதையின் நாயகனாக நடித்திருந்தார். கடந்த வருடம் வெளியான இந்தப் படம் நல்ல வரவேற்பையே பெற்றது.
கொஞ்சம் விமர்சனமும் உண்டு: படம் நல்ல வரவேற்பை பெற்றாலும் விமர்சனத்தையும் சந்தித்தது. அதாவது காவல் துறையினர் அந்தப் படத்தில் இயக்கத்து ஆட்களை வேட்டையாடும் காட்சியை வெற்றிமாறன் தவிர்த்திருக்கலாம்; அதுமட்டுமின்றி அந்த சீனுக்கு இளையராஜா எதற்காக மாஸ் பிஜிஎம்மை போட்டார் என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன. மேலும் பாலமுருகன் எழுதிய சோளகர் தொட்டி நாவலிலிருந்தும் சில காட்சிகளை உருவிவிட்டார்கள் என்றும் சர்ச்சை எழுந்தது.
விடுதலை 2: சூழல் இப்படி இருக்க விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கியிருக்கிறார் வெற்றிமாறன். இதை வாத்தியாரின் (விஜய் சேதுபதி) வாழ்க்கையில் என்ன நடந்தது; அவர் ஏன் ஆயுத வழியை தேர்ந்தெடுத்தார் போன்ற விஷயங்களை வைத்தை உருவாக்கியிருக்கிறார் வெற்றிமாறன். முதல் பாகத்தில் பெற்ற விமர்சனத்தை இரண்டாம் பாகத்தில் பெற்றுவிடக்கூடாது என்பதில் இயக்குநர் தெளிவாக இருக்கிறார். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்திருக்கிறார்.
வெளியான ட்ரெய்லர்: படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. அடுத்த மாதம் 20ஆம் தேதி படம் வெளியாகவிருக்கும் சூழலில் நேற்று படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் வெற்றிமாறன், இளையராஜா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டார்கள். ட்ரெய்லருக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துவரும் சூழலில்; அதை வைத்து சமூக வலைதளங்களில் புதிய பஞ்சாயத்தும் ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கிறது.
என்ன பஞ்சாயத்து?: அதாவது அந்த ட்ரெய்லரில், 'தத்துவம் இல்லாத தலைவர்கள் ரசிகர்களை மட்டும்தான் உருவாக்குவாங்க.. அது முன்னேற்றத்துக்கு வழி வகுக்காது' என்ற வசனம் வருகிறது. இதனை கவனித்த ரசிகர்களில் சிலர், இந்த வசனத்தின் மூலம் சமீபத்தில் அரசியல் கட்சி ஆரம்பித்த விஜய்யைத்தான் தாக்கியிருக்கிறார்கள். ஏனெனில் அவர்தான் தனது முதல் மாநாட்டில் கடவுள் மறுப்பு எங்கள் கொள்கை இல்லை ஆனால் பெரியாரை பின்பற்றுவோம் என கூறினார். இதில் அவர் என்ன மாதிரியான தத்துவத்தை பின்பற்றுகிறார் என்றே தெரியவில்லை. அதேபோல் மாநாட்டு மேடையில் ஒருபக்கம் அம்பேத்கர் எழுதிய புத்தகமும் இருந்தது; மறுபக்கம் சனாதனத்தை வலியுறுத்தும் பகவத் கீதையும் இருந்தது. இதிலும் விஜய்யின் தத்துவம் என்னவென்று பலரும் குழம்பிப்போனார்கள்.
எனவே விஜய்க்கு சுத்தமாக அரசியல் தத்துவமே இல்லை. அதைத்தான் வெற்றிமாறன் மறைமுகமாக சாடியிருக்கிறார் என்று கூறுகிறார்கள். அதேசமயம் இன்னொரு தரப்பினரோ இந்த வசனத்தில் விஜய் மட்டும் தாக்கப்படவில்லை. எம்ஜிஆரும் தாக்கப்பட்டிருக்கிறார் என்றும் வாதங்கள் எழுந்திருக்கிறது. இது ஒருபக்கம் இருக்க இந்த வசனம் வந்ததற்கே காரணம், விஜய்யின் கடைசி படத்தை இயக்க தனக்கு வாய்ப்பு கிடைக்காததன் விரக்தியில்தான் வெற்றிமாறன் இப்படியான வசனத்தை வைத்திருக்கிறார் என்று விஜய் ரசிகர்கள் வாள் சுழற்ற ஆரம்பித்திருக்கிறார்கள். ஆகமொத்தம் புது பஞ்சாயத்து ஆரம்பித்துவிட்டது.


Click it and Unblock the Notifications











