பாலுமகேந்திராவின் கழிவுகளைக்கூட சுத்தம் செய்தான்.. சூரி பட இயக்குநர் பற்றி வெற்றிமாறன் நெகிழ்ச்சி
சென்னை: சூரி இப்போது கருடன் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். மே 31ஆம் தேதி படம் ரிலீஸாகிறது. சசிக்குமார் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்தப் படத்தை பாலுமகேந்திரா, வெற்றிமாறன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக இருந்த துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் கலந்துகொண்ட வெற்றிமாறன் துரை செந்தில்குமார் குறித்து ஏகப்பட்ட விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.
எதிர்நீச்சல், கொடி உள்ளிட்ட படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இப்போது இயக்கியிருக்கும் திரைப்படம் கருடன். சூரி, சசிக்குமார் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். விடுதலை படத்தின் மூலம் கதையின் நாயகனாக அவதாரம் எடுத்த சூரி இதிலும் அதே அவதாரம் எடுத்திருக்கிறார். சசிக்குமாருக்கு அழுத்தமான கதாபாத்திரம். மே 31ஆம் தேதி படம் ரிலீஸாகவிருக்கும் சூழலில் நேற்று படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. ட்ரெய்லரும் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தது.

வெற்றிமாறன் பேச்சு: நேற்று சென்னையில் நடந்த ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் வெற்றிமாறன் கலந்துகொண்டு பேசுகையில், "துரை செந்தில்குமாரும், சூரியும் இணைந்து பணியாற்றும்போது கருடன் படம் நன்றாக வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அது ஒரு கனாக்காலம் படத்தின் ஷூட்டிங்கின்போது இயக்குநர் பாலுமகேந்திராவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது.
அனைத்தும் செய்தான்: அந்த சிக்கலான காலகட்டத்தில் பாலு மகேந்திரா சாருடன் 60 நாட்கள் துரை செந்தில்குமார் தங்கி பாலு மகேந்திராவின் உடல் நலத்தை பராமரித்தான். அவரை டாய்லெட் கூட்டி செல்வது, அவரின் கழிவுகளை சுத்தம் செய்வது உள்ளிட்ட அத்தனையையும் துரைதான் செய்தான். அப்போது அவனிடம் நான், 'இது எப்படி உன்னால் முடிந்தது' என்று கேட்டேன். அதற்கு அவனோ, 'நமது வீட்டில் நமது தந்தைக்கு இப்படி ஏற்பட்டால் என்ன செய்வோமோ அதைத்தான் செய்தேன்' என்று சொன்னான். இதுதான் துரை செந்தில்குமார்.
அன்புதான் எல்லாமே: ஷூட்டிங் ஸ்பாட்டில் எந்த சிக்கலையும் உருவாக்காமல் இயல்பாகவும், அன்பாகவும் பழகக்கூடியவன் அவன். விடுதலை படத்துக்கு முன்னர் இரண்டு, மூன்று முறை சூரியை சந்தித்து பேசியிருக்கிறேன். விடுதலை படத்தின் பணிகள் தொடங்கும்போதுதான் அவருடன் நெருங்கி பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதற்கு பிறகு என்னிடம் தயாரிப்பாளர் குமாரை அறிமுகப்படுத்தி, இவர் கருடன் என்ற படத்தை தயாரிப்பதாகவும் துரை செந்தில் இயக்குகிறார் என்று சொன்னபோது மகிழ்ச்சியாக இருந்தது.
ஆலோசனை சொன்னேன்: துரை செந்தில்குமார் என்னை சந்தித்து இப்படி ஒரு கதாபாத்திரம், இப்படி ஒரு கதை என்று இந்தப் படத்தை பற்றி நிறைய விஷயங்களை சொல்லிக்கொண்டே இருப்பான். கதை விவாதத்தின்போது ஆலோசனை எப்படி சொல்வோமோ அதுபோல் இதை இப்படி செய்யலாம், அதை அப்படி செய்யலாம் என்று நானும் ஆலோசனை சொன்னேன்.
மனசு வேண்டும்: பிறகு ஆதி கதாபாத்திரத்துக்கு சசிக்குமாரை நடிக்க வைக்க திட்டம் என்று அவன் சொன்னபோது, சசி இதற்கு ஒத்துக்கொள்வாரா என்றுதான் கேட்டேன். ஆனால் அவர் நடிக்க ஒத்துக்கொண்டார் என்று தெரியவந்தது. அது எனக்கு ஆச்சரியம்தான் தந்தது. அப்போதும் அவர் சூரிக்காகத்தான் இதில் நடிக்க ஒத்துக்கொண்டார். இப்படியெல்லாம் செய்ய பெரிய மனசு வேண்டும். அது சசிக்குமாருக்கு இருக்கிறது" என்றார்.


Click it and Unblock the Notifications











