வெற்றிமாறன் செய்த செயல்.. நெகிழ்ந்துபோன உதவி இயக்குநர்கள்
சென்னை: வெற்றிமாறன் செய்த செயலை பார்த்த அவரது உதவி இயக்குநர்கள் நெகிழ்ந்துபோய் இருக்கின்றனர். மேலும் பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை ஆகிய படங்களை இயக்கி கவனம் ஈர்த்த வெற்றிமாறன் கடைசியாக அசுரன் படத்தை இயக்கினார். அந்தப் படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று பஞ்சமி நிலம் குறித்து விவாதத்தையும் கிளப்பியது. அடுத்ததாக அவர் விடுதலை படத்தை இயக்கியிருக்கிறார்.

வெற்றிமாறனின் விடுதலை
ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் விடுதலை படத்தில் விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். படம் மொத்தம் இரண்டு பாகங்களாக உருவாகியிருக்கிறது. இதன் முதல் பாகம் மார்ச் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இந்தியாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறனின் படம் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது.

கவனம் ஈர்த்த விடுதலை ட்ரெய்லர்
விடுதலை படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் பிரமாண்டமாக நடந்தது. அந்த விழாவில் இயக்குநர் வெற்றிமாறன், முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய் சேதுபதி, சூரி மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா, எழுத்தாளர் ஜெயமோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர். விடுதலை படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக ட்ரெய்லரில் இடம்பெற்றிருக்கும் வசனங்களும், காட்சிகளும் அசுரன் படம் போலவே நிச்சயம் இந்தப் படமும் சமூகத்தில் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பும் என்பதை உணர்த்துகிறது.

ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய மேக்கிங் வீடியோ
விடுதலை படத்தின் மேக்கிங் வீடியோ நேற்று முன் தினம் வெளியானது. அதில் சூரி செய்யும் ஆக்ஷன் காட்சிகளும்,கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோருக்கு வெற்றிமாறன் நடிப்பு சொல்லிக்கொடுக்கும் காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. ஆக்ஷன் காட்சிகளுக்காக சூரி அதிகமாகவே ரிஸ்க் எடுத்திருப்பது மேக்கிங் வீடியோவை பார்க்கும்போது தெரிகிறது. எனவே இந்தப் படம் சூரிக்கு பெரும் அங்கீகாரமாக அமையும் என நம்பப்படுகிறது.

உதவி இயக்குநர்களுக்கு வெற்றிமாறன் செய்த செயல்
இந்நிலையில் வெற்றிமாறன் தன்னிடம் பணியாற்றும் உதவி இயக்குநர்கள் உள்ளிட்ட 25 பேருக்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கும் உத்திரமேரூரில் ஆளுக்கு தலா ஒரு கிரவுண்ட் நிலம் வாங்கிக்கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. வெற்றிமாறனின் இந்த செயலால் அவரது உதவி இயக்குநர்கள் நெகிழ்ந்துபோய் உள்ளனர். மேலும் அவருக்கு திரைத்துறையை சேர்ந்தவர்கள் பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.

வெற்றிமாறன் படத்தில் இருக்கும் கெட்ட வார்த்தைகள்
முன்னதாக, விடுதலை படம் சென்சாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. படத்தை பார்த்த சென்சார் குழு மொத்தம் 12 வசனங்களுக்கு கட் கொடுத்துள்ளது. அவை அனைத்துமே கெட்ட வார்த்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படத்துக்கு ஏ சர்ட்டிஃபிக்கேட்டை சென்சார் கொடுத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











