தனுஷ், ஜூனியர் என்.டி.ஆருடன் இணையும் வெற்றிமாறன்.. அப்போ வடசென்னை 2 அவ்வளவுதானா?
சென்னை: இயக்குநர் வெற்றிமாறன் தனுஷ் மற்றும் ஜூனியர் என்.டி.ஆரை வைத்து புதிய படத்தை இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து வடசென்னை 2 படத்தின் நிலை என்ன ஆயிற்று என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது.
பொல்லாதவன் படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி கவனம் ஈர்த்தவர் வெற்றிமாறன். தனுஷ், கிஷோர், டேனியல் பாலாஜி, திவ்யா உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. படம் கமர்ஷியலாக அமைந்தாலும் அதற்குள் எவ்வளவு டீட்டெயிலிங் வைக்க முடியுமோ அவ்வளவை வைத்திருந்தார் வெற்றி.

தேசிய அளவில் கவனம் பெற்ற வெற்றிமாறன்
இதனையடுத்து தனது இரண்டாவது படத்தையும் தனுஷை வைத்து இயக்கினார். சேவல் சண்டைகளையும், மனிதர்களுக்குள் எழும் ஈகோவையும் வைத்து உருவாக்கப்பட்டிருந்த அந்தப் படம் 5க்கும் மேற்பட்ட தேசிய விருதுகளை பெற்று அசத்தியது. இதனால் தேசிய அளவில் அனைவரும் அறியப்படும் இயக்குநராக மாறினார் வெற்றிமாறன். அதுமட்டுமின்றி வெற்றி - தனுஷ் கூட்டணிக்கு என்றே தனி ரசிகர் பட்டாளமும் உருவானது.

இந்தியாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன்
முதல் இரண்டு படங்களும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றதை அடுத்து லாக்கப் நாவலை விசாரணை என்ற பெயரில் படமாக எடுத்தார். போலி வழக்குகள் போட்டு அப்பாவிகளை சித்ரவதை செய்யும் காவல் துறையின் முகத்திரையை கிழிக்கும்படி படத்தை உருவாக்கியிருந்தார். இந்தப் படம் சர்வதேச அளவில் கவனம் பெற்றது. தொடர்ந்து இந்தியாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக உருவெடுத்தார் வெற்றிமாறன். மேலும், வெற்றிமாறன் படத்துக்கு நம்பி போகலாம் என்ற நம்பிக்கையையும் ரசிகர்களிடையே அவர் விதைத்தார். தொடர்ந்து அவர் இயக்கிய வடசென்னை, அசுரன் படங்களும் பெரும் வெற்றி பெற்றன.

விடுதலை படத்தை இயக்கும் வெற்றிமாறன்
வெற்றிமாறன் தற்போது விடுதலை படத்தை இயக்கியிருக்கிறார். விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்டோர் நடித்திருக்கும் விடுதலை படத்துக்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். படத்தின் ஆடியோவும், ட்ரெய்லரும் இன்று வெளியாகவுள்ளது. இரண்டு பாகங்களாக படம் உருவாகியிருக்கிறது. ஜெயமோகன் எழுதியிருக்கும் சிறுகதையை வைத்து வெற்றிமாறன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். முதல்முறையாக ஜெயமோகனுடன் கூட்டணி வைத்திருப்பதால் விடுதலையை எப்படி வெற்றி உருவாக்கியிருப்பார் என்பதை காண்பதற்கு ரசிகர்கள் ஆவலோடு இருக்கின்றனர்.

தனுஷ், ஜூனியர் என்.டிஆரை இயக்கும் வெற்றிமாறன்?
இந்நிலையில் வெற்றிமாறனின் புதிய படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி வெற்றிமாறனின் புதிய படத்தில் தனுஷும், ஜூனியர் என்.டி.ஆரும் நடிக்கவிருப்பதாகவும், படத்தை எல்ரெட் குமார் தயாரிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்தப் படமும் இரண்டு பாகங்களாக வெளியாகவிருக்கிறதாம். விடுதலை படத்தை முடித்துவிட்டு வெற்றிமாறன் அடுத்ததாக வாடிவாசல் படத்தை ஆரம்பிக்கவிருக்கிறார். எனவே வாடிவாசலை முடித்துவிட்டு புதிய படத்துக்கான பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடசென்னை 2தான் இதுவா?
முன்னதாக நேற்று முன்தினம், பா.இரஞ்சித்தின் இயக்கத்தில் சார்பட்டா படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும் நீண்ட காலமாக எதிர்பார்த்திருக்கும் வடசென்னை 2 படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்று நேற்று ட்விட்டரில் Vadachennai 2 என்ற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் ட்ரெண்டாக்கினர். இந்தச் சூழலில் வெற்றிமாறனின் புதிய படம் அறிவிப்பு வெளியாகியிருப்பதால், ஒருவேளை தனுஷையும், ஜூனியர் என்.டி.ஆரையும் வைத்து வெற்றி இயக்கும் படம் வடசென்னை 2வாக இருக்குமோ என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அதேசமயம் இந்தப் படம் வடசென்னை 2வாக இருக்காது. ஏனெனில் வடசென்னை 2வில் ஜூனியர் என்.டி.ஆரை வெற்றிமாறன் நடிக்க வைக்க வாய்ப்பே இல்லை எனவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எது எப்படியோ வெற்றிமாறன் புதிய படத்தை இயக்கவிருக்கிறார். ஆக, வடசென்னை 2 படத்தின் நிலை என்ன ஆனது என்பதுதான் ரசிகர்களிடம் மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications











