வடசென்னை 2 வர வாய்ப்பே இல்லை.. அடுத்து இந்த படம் தான்.. வெளிப்படையாக பேசிய வெற்றிமாறன்!
சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், கெளதம் மேனன், ராஜீவ் மேனன், பவானி ஸ்ரீ, சேத்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள விடுதலை 2 திரைப்படம் டிசம்பர் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. சமீபத்தில் நடைபெற்ற ஃபேன்ஸ் மீட் நிகழ்ச்சியில் வெற்றிமாறனிடம் வடசென்னை 2 படம் எப்போ வரும் என ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு இப்போதைக்கு பிளான் இல்லை என வெளிப்படையாக வெற்றிமாறன் கூறியுள்ளார்.
வடசென்னை திரைப்படம் தனுஷ், சமுத்திரகனி, அமீர், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியானது. அந்த படத்தில் வடசென்னை மக்களை தவறாக சித்தரித்து விட்டார் வெற்றிமாறன் என கடுமையான சர்ச்சைகள் கிளம்பின. அதன் பின்னர், ஆண்ட்ரியா அரை நிர்வாணமாக நடித்த காட்சிகளுக்கும் எதிர்ப்புக் கிளம்ப அந்த காட்சியில் அதிரடியாக நீக்கப்பட்டது.

இப்படி ஏகப்பட்ட சர்ச்சைகளில் அந்த படம் சிக்கிய நிலையில், அதன் 2ம் பாகத்தை எடுக்காமல் தனுஷுடன் இணைந்து அசுரன் படத்தை இயக்கிய வெற்றிமாறன் அதன் பின்னர் விடுதலை 1 மற்றும் விடுதலை 2 படங்களை இயக்கியுள்ளார்.
அடுத்த படம் வாடிவாசல் தான்: சூர்யாவுடன் இணைந்து வாடிவாசல் படத்தை வெற்றிமாறன் இயக்கப் போவதாக சில ஆண்டுகள் முன்னதாக டைட்டில் அறிவிப்புடன் வெளியானது. ஆனால், இதுவரை அந்த படம் ஆரம்பிக்கவே இல்லை. சூர்யா கங்குவா, சூர்யா 44 மற்றும் சூர்யா 45 என அடுத்தடுத்து நடித்து வருகிறார். அடுத்ததாக அமல் நீரத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், விடுதலை 2 படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், அடுத்ததாக வாடிவாசல் படம் தான் பண்ணப் போகிறேன் என உறுதியாக வெற்றிமாறன் கூறியுள்ளார். வாடிவாசல் படத்தில் அமீர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
வடசென்னை 2 இப்போதைக்கு இல்லை: ரசிகர் ஒருவர் தொடர்ந்து வெற்றிமாறனிடம் வடசென்னை 2 வருமா? இப்போ இல்லை என்றாலும் எந்த ஆண்டு வரும் என்றெல்லாம் சட்டையை பிடித்துக் கேட்பது போல கேட்டுக் கொண்டே இருந்தார். அதான் சொல்லிட்டேனேப்பா இப்போதைக்கு பிளான் இல்லை, எதிர்காலத்தில் பிளான் பண்ணா வரும் என சற்றே டென்ஷன் ஆகிவிட்டார் வெற்றிமாறன்.
விடுதலை 2 வெற்றி பெறுமா?: தமிழ் சினிமாவின் 2ம் பாகம் சாபத்தை முறியடித்து விடுதலை 2 நாளை வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறும் என பலரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். படத்தின் நீளம் 2.45 மணி நேரம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், ஏகப்பட்ட ஆபாச வசனங்களும் முதல் பாகத்தில் இருந்தது போல நிர்வாணக் காட்சிகளும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சூரியா? விஜய் சேதுபதியா?: விடுதலை 2வில் சூரிக்கு அதிக முக்கியத்துவம் இருக்குமா? அல்லது விஜய் சேதுபதிக்கு அதிக முக்கியத்துவம் இருக்குமா? என கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். விடுதலை படத்தில் எப்போது சூரியை தாண்டி விஜய் சேதுபதி உள்ளே நுழைந்தாரோ அப்போதே அது அவருடைய படமாக மாறிவிட்டது என்றும் இருவரை விட இது வெற்றிமாறன் படமாகவே இருக்கும் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











