Vetrimaaran - வாழ்க்கையில் மறக்க முடியாத நபர் அவர்தான்.. நடு இரவில் வெற்றிமாறனுக்கு உதவியவர் யார் தெரியுமா?
சென்னை: இந்திய திரையுலகில் முக்கியத்துவம் வாய்ந்த இயக்குநராக இருக்கிறார் வெற்றிமாறன். பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்த அவர் இதுவரை ஆறு படங்கள் இயக்கியிருக்கிறார். ஆறு படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருக்கின்றன. மேலும் இரண்டு படங்களுக்கு தேசிய விருதையும் பெற்றிருக்கிறார். தற்போது அவரது இயக்கத்தில் விடுதலை 2 உருவாகிவருகிறது. அடுத்ததாக வாடிவாசல் உருவாகவிருக்கிறது.
இந்தியாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். அவரது முதல் படமான பொல்லாதவன் கமர்ஷியல் படமாக உருவாகியிருந்தது. ஆனால் அதற்கு அடுத்ததாக அவர் இயக்கிய ஆடுகளம் ஐந்துக்கும் மேற்பட்ட தேசிய விருதுகளை அள்ளியது. அந்தப் படத்திலிருந்து வெற்றிமாறன் தவிர்க்க முடியாத இயக்குநராகிவிட்டார். குறிப்பாக தான் இயக்கும் ஒவ்வொரு படத்தின் மூலமும் சமூகத்தில் பெரும் விவாதத்தை கிளப்பும் என்பது குறிப்பிடத்தக்கது. அசுரன் படம் பஞ்சமி நிலம் பற்றிய விவாதத்தை கிளப்பியது.

தவறாக சித்தரித்த வெற்றிமாறன்?: அதற்கு அடுத்ததாக அவர் இயக்கிய விசாரணை, வடசென்னை ஆகிய படங்கள் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றது. இருப்பினும் வடசென்னை படம் வட சென்னைவாசிகளை தவறாக சித்தரித்துவிட்டதென்று விமர்சனமும் எழுந்தது. ஆனால் அதெல்லாம் இல்லை சரியாகத்தான் பேசியிருக்கிறார் என்றும் வெற்றிமாறனின் ரசிகர்கள் ஒருபக்கம் பேசினர்.
விடுதலை: தொடர்ந்து அவர் இயக்கிய அசுரன் படமும் தேசிய விருதை பெற்றது. அதனையடுத்து விடுதலை படத்தை இயக்கினார். இதற்கிடையே வாடிவாசல் படத்தை தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் போட்ட ப்ளானில் மாற்றம் ஏற்பட விடுதலை படமானது இரண்டு பாகங்களாக உருவானது. இதன் முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.
விடுதலை 2: இந்தச் சூழலில் விடுதலை படத்தின் இரண்டாம் பாக ஷூட்டிங் ஏற்கனவே முடிந்தாலும் பாகம் ஒன்று பெற்ற விமர்சனம் இதில் வரக்கூடாது என்பதற்காக படத்தில் மேலும் சில காட்சிகளை படமாக்குகிறார் வெற்றி. அதற்கான வேலைகள் மும்முரமடைந்துள்ளன. இதில் விஜய் சேதுபதிக்கு மஞ்சு வாரியர் ஜோடியாக நடிக்கலாம் என கூறப்படுகிறது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்துவருகின்றன. அடுத்ததாக வாடிவாசல், வடசென்னை 2 ஆகிய படங்களை இயக்குகிறார் வெற்றிமாறன்.
மறக்க முடியாத நபர்: இந்நிலையில் வெற்றிமாறன் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அதில் பேசிய அவர், "எனது வாழ்க்கையில் மறக்க முடியாத நபர் ஒருவர் இருக்கிறார். அப்போது நாங்கள் கல்லூரி இறுதி ஆண்டு படித்தோம். நானும் எனது நண்பர்கள் இரண்டு பேரும் ஒரு ஆவண படம் எடுப்பதற்காக திருக்கோவிலூர் சென்றிருந்தோம். நாங்கள் அங்கு சென்று இறங்குவதற்கு நள்ளிரவு ஆகிவிட்டது. ஏதோ திருவிழா சமயம் போல.
உதவினார்: மூன்று லாட்ஜ்கள் இருந்தன. ஆனால் அனைத்துமே ஃபுல் ஆகிவிட்டது.இதனால் நாங்கள் எங்கு தங்குவது என்று தெரியாமல் நின்றிருந்தோம். அப்போது யார் என்றே தெரியாத ஒருவர் என்ன ஏது என்று விசாரித்தார். பிறகு சரி வாங்க எனது ரூம் இருக்கு. அங்க நைட் தங்கிக்கங்க என்று அழைத்து சென்றுவிட்டார். அங்கு சென்று அன்றைய இரவு நாங்கள் தங்கினோம்.
சாப்பாடு வாங்கிக்கொடுத்தார்: மறுநாள் காலை நாங்கள் எழுந்து பார்த்தபோது அவரை அறையில் காணவில்லை. உடனே நாங்கள் கொண்டு வந்த பொருட்கள் எல்லாம் இருக்கிறதா என்று பதறியடித்து தேடினோம். அவை அனைத்துமே இருந்தது. அந்தச் சமயத்தில் கையில் சில பார்சல்களுடன் வந்த அவர் எங்களிடம் கொடுத்து இந்தாங்க இதை சாப்பிடுங்க என்று கொடுத்தார். அப்போது அவர் எங்களிடம், 'எனது தங்கச்சி சென்னையில்தான் படிக்குது. நான் இங்க உங்களுக்கு உதவுன மாதிரி அங்கே என் தங்கச்சி ஏதாவது சிக்கலில் இருந்தால் யார் என்றே தெரியாது உதவுவார்கள்' என்று கூறினார். அது எனக்கு அவ்வளவு ஆச்சரியமாக இருந்தது. அவர்தான் எனது வாழ்க்கையில் மறக்கவே முடியாதவர்" என்றார்.


Click it and Unblock the Notifications











