இந்த அடிப்படையில்தான் படங்களை இயக்குகிறேன்.. இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் வெற்றிமாறன் பேச்சு
சென்னை: International Film Festival Of India (இந்திய சர்வதேச திரைப்பட விழா) கோவாவில் நடந்துவரும் 54ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் வெற்றிமாறன் பேசியது கவனத்தை ஈர்த்திருக்கிறது.
மத்திய அரசின் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் மற்றும் தேசிய திரைப்பட மேம்பாட்டுக்கழகம் சார்பில் ஆண்டுதோறும் இந்திய சர்வதேச திரைப்பட விழா ஆகும். சர்வதேச படைப்பாளிகள் ஒன்றுகூடும் இந்த விழாவில் சிறந்த படங்கள் திரையிடப்படுகின்றன இந்த வருடத்துக்கான இந்திய சர்வதேச திரைப்பட விழா (54ஆவது விழா) கோவாவில் நவம்பர் 21ஆம் தேதி தொடங்கியது. நவம்பர் 28வரை இந்த விழா நடைபெறவிருக்கிறது.

நான்கு இடங்களில் விழா: நான்கு இடங்களில் மொத்தம் 9 நாட்கள் இந்த விழாவானது நடைபெறவிருக்கிறது. மொத்தம் 89 இந்திய திரைப்படங்கள், 62 ஆசிய திரைப்படங்கள், 10 சர்வதேச திரைப்படங்கள், திரையிடப்படவிருக்கின்றன. மேலும் இதில் ஹாலிவுட் நடிகர் மைக்கேல் டக்ளஸுக்கு சத்யஜித் ரே சிறந்த வாழ்நாள் விருது வழங்கப்படவிருக்கிறது. அதேபோல் விழா தொடங்கியவுடன் மாதுரி தீட்சித்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டது.
திரையிடப்படும் தமிழ் படங்கள்: இந்த விழாவில் தமிழிலிருந்து வெற்றிமாறன் இயக்கிய விடுதலை, ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கிய காதல் என்பது பொதுவுடைமை, சம்யுக்தா விஜயன் இயக்கிய நீல நிற சூரியன், மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ஆகிய படங்கள் திரையிடப்படுகின்றன.
விடுதலை குழு: இந்த சூழலில் நேற்று விடுதலை திரைப்பட குழுவினர் திரைப்பட விழாவில் கலந்துரையாடினர். இதில் இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் சூரி, ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், தயாரிப்பாளர் எல்ரெட் குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது தான் எதன் அடிப்படையில் படங்களை உருவாக்குவேன் என்பதை வெற்றிமாறன் பகிர்ந்துகொண்டார்.
வெற்றிமாறன் பேச்சு: அவர் பேசுகையில், "நான் எப்போதுமே உள்ளூர் கலாசாரம், மொழி, நிலத்தின் அடிப்படையில்தான் திரைப்படங்களை உருவாக்குவேன். கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு ஒரு சிறிய படம் எடுக்க விரும்பினேன். 30 நாட்களில் படத்தை முடிக்க திட்டமிட்டேன். எழுத்தாளர் ஜெயமோகன் 1998ஆம் ஆண்டு எழுதிய துணைவன் என்ற சிறுகதையை தழுவி அதனோடு நான் எழுதிய ஒரு பகுதி மற்றும் செய்த ஆராய்ச்சிகளை மையமாகக் கொண்டு விடுதலையை எடுத்தேன்.
குமரேசன் கதாபாத்திரத்தில் சூரி சிறப்பாக நடித்தார். அவர் அந்த கதாபாத்திரத்துடன் ஒன்றிவிட்டார்" என்றார். அவரைத் தொடர்ந்து பேசிய சூரி, 'இதுவரை 160 படங்களில் காமெடி நடிகராக நடித்திருந்தாலும் வெற்றிமாறன் இயக்கத்தில் முதன்முறையாக ஹீரோவாக நடித்தது மகிழ்ச்சியாக இருந்தது' என குறிப்பிட்டார்.
காந்தி டாக்ஸ்: முன்னதாக இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் விஜய் சேதுபதி, அதிதி, அரவிந்த் சாமி உள்ளிட்டோர் நடித்திருக்கும் காந்தி டாக்ஸ் படம் திரையிடப்பட்டது. அப்போது படக்குழுவினர் விழாவில் கலந்துகொண்டனர். அந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். நேற்று இந்திய பனோரமா பிரிவில் மலையாள திரைப்படமான ஆட்டம் திரைப்படம் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஆவணப் பட பிரிவில் மணிப்புரி ஆவண படமான ஆண்ட்ரோ ட்ரீம்ஸ் திரையிடப்பட்டது.


Click it and Unblock the Notifications











