Vetrimaaran - தனுஷ்கிட்ட கேட்காம அதை பண்ண முடியாது - வெற்றிமாறன் ஓபன் டாக்
சென்னை: Vetrimaaran (வெற்றிமாறன்) நடிகர் தனுஷ் குறித்து இயக்குநர் வெற்றிமாறன் பேசியிருக்கும் விஷயம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய வெற்றிமாறன் பொல்லாதவன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதன் பிறகு அவர் இயக்கிய ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன், விடுதலை உள்ளிட்ட அனைத்து படங்களுமே மெகா ஹிட்டாகியுள்ளன. குறிப்பாக ஆடுகளம், அசுரன் ஆகிய படங்கள் வெற்றிமாறனுக்கு தேசிய விருதையும் பெற்றுக்கொடுத்தன.

தெளிவான வெற்றி: திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகும் ஒருவர் முதல் படத்தில் எப்படியும் வெற்றியை பதிவு செய்துவிட வேண்டும் என்பதில் தீவிரமாகவே இருப்பார்கள். ஆனால் முதல் படத்தை கொஞ்சம் வித்தியாசமாக செய்ய வேண்டும் என நினைத்து அதில் சறுக்கியவர்கள் உண்டு. வெற்றிமாறன் அப்படி இல்லை.முதல் படத்தில் தப்பிக்க வேண்டுமென்றால் அதில் நிச்சயம் கமர்ஷியல் சமாசாரங்கள் இருக்க வேண்டும் என முடிவு செய்து பொல்லாதவன் படத்தை உருவாக்கினார்.
மெகா ஹிட்டான பொல்லாதவன்: தனுஷ், திவ்யா ஸ்பந்தனா ஆகியோர் நடித்திருந்த அந்தப் படம் கடந்த 2007ஆம் ஆண்டு வெளியாகி மெகா ஹிட்டானது. ஒரு நடுத்தர இளைஞர் பைக் மீது ஆசைப்படுவது அனைவரது வாழ்க்கையில் நிகழ்வது. அதனை ஒன்லைனாக எடுத்துக்கொண்டு கமர்ஷியலாக அமைத்திருந்த திரைக்கதை ரசிகர்களை கவர்ந்தது.அதேபோல் ஜிவி பிரகாஷ் அமைத்திருந்த இசையும் இன்றுவரை பலரது பைக்குகளில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது.
தனுஷின் அசத்தல் நடிப்பு: படத்தில் அத்தனையும் சிறப்பாக இருந்தாலும் தனுஷின் நடிப்பு ஒரு படி மேல் படத்தை கொண்டு போய் நிறுத்தியது. நடுத்தர இளைஞனாக அப்பாவிடம் திட்டு வாங்குவது, காதலி பின்னால் சுற்றுவது, வேலை கிடைத்த பிறகு பொறுப்பாக மாறுவது, வண்டி திருடு போன பிறகு பதறிப்போய் துடிப்பது, வில்லன்களிடம் ஆர்ப்பாட்டம் இல்லாத ஆத்திரப்படுவது என தனுஷ் ஃப்ரேம் பை ஃப்ரேம் தனது நடிப்பில் மிரட்டியிருப்பார்.
பொல்லாதவன் டைட்டில் என்ன தெரியுமா?: இந்நிலையில் பொல்லாதவன் படத்துக்கு வெற்றிமாறன் வேறு ஒரு டைட்டில் வைத்ததாக தெரிவித்திருக்கிறார். சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "பொல்லாதவன் படத்துக்கு முதலில் இரும்புக்குதிரை என்ற தலைப்பைதான் சொன்னேன். அது எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய நாவலில் இருக்கும் தலைப்பு. ஆனால் நான் சொன்னது தயாரிப்பாளருக்கு பிடிக்கவில்லை.

வேறு டைட்டில்: தயாரிப்பாளரோ தம்பிக்கு எந்த ஊரு என்று கூறினார். எனக்கு பயங்கரமாக கோபம் வந்துவிட்டது. அந்தக் கோபத்தில் சார் இதுக்கு பேசாம பொல்லாதவன் அப்டி வெச்சிடலாம் என்றேன். உடனே அவர் இது நல்லா இருக்கே என்றார். அய்யய்யோ மாட்டிக்கிட்டோமே என நினைத்துக்கொண்டு தனுஷிடம் கேட்காமல் இதை வைக்க முடியாது என கூறிவிட்டு தனுஷிடம் பொல்லாதவன் என்று டைட்டில் வைக்க சொல்கிறார்கள் என்றேன்.
தனுஷுக்கு பிடித்திருந்தது: அவர் உடனே சார் இதை வைக்கணும்னா ரஜினி சாரிடம் அனுமதி வாங்கணும். ஆனால் என்னிடம் தனிப்பட்ட முறையில் கேட்டால் எனக்கு பொல்லாதவன் டைட்டில் ரொம்பவே பிடித்திருக்கிறது என அவரும் கூறிவிட்டார். அதன் பிறகு ரஜினி சார் பெர்மிஷன் கிடைத்ததும் பொல்லாதவன் என டைட்டில் வைத்தோம்" என்று கூறினார்.


Click it and Unblock the Notifications











