இந்த முறை நீட்டை விடக்கூடாது.. நீங்க இறங்கி நில்லுங்க.. நாங்க கூட நிற்கிறோம்.. வெற்றிமாறன் ஃபயர் ஸ்பீச்
சென்னை: டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வு முறைகேடு மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரத்தைக் கண்டித்து அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட கரப்பான் பூச்சி ஜனதா கட்சி இளைஞர்கள், மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்திய சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இயக்குநர் வெற்றிமாறனின் பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
நீலம் பண்பாட்டு மையம் மற்றும் நீலம் மாணவர் இயக்கம் சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நீட் தேர்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இயக்குநர்கள் பா. ரஞ்சித், வெற்றிமாறன், அமீர், லெனின் பாரதி, நடிகர் மன்சூர் அலிகான், நடிகர் கலையரசன், பாடகர் அறிவு, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், நடிகை ஆண்ட்ரியா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு நீட் தேர்வுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

அப்போது பேசிய இயக்குநர் வெற்றிமாறன், "ஒரு நாட்டில் இளைஞர்கள் போராட்டக் களத்திற்கு வருகிறார்கள் என்றால், அந்த நாட்டின் அமைப்புகள் சரியாக செயல்படவில்லை என்பதற்கே அது மிகப்பெரிய அடையாளம். இன்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம் என்பது மத்திய அரசின் தோல்வியை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
இந்த போராட்டம் வெறும் நீட் தேர்வில் நடந்த குளறுபடிகளை சரி செய்ய வேண்டும் என்பதற்காக மட்டும் இருக்கக் கூடாது. நீட் தேர்வையே தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையாக மாற வேண்டும். அதற்கான முன்னெடுப்புகளை நாம் அனைவரும் சேர்ந்து முன்னெடுக்க வேண்டும்.
மேலும், நீட் தேர்வு மூலம் நம்முடைய மருத்துவக் கல்வி, கல்வி உரிமை, அறிவு ஆகியவற்றை நம்மிடமிருந்து பறிக்கும் வேலை தொடர்ந்து நடக்கிறது. மீண்டும் அவர்களிடம் கைகட்டி நிற்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்க முயற்சி நடைபெறுகிறது. அதனால் நீட் எதிர்ப்பு என்பது ஒரு நாள் போராட்டமாக இருக்கக் கூடாது. இந்த முறை நாம் அதை அடையாளப் போராட்டமாக மட்டும் நடத்திவிட்டு விடக்கூடாது. அனைவரும் தீவிரமாக களத்தில் இறங்க வேண்டும்" என்று ஆவேசமாக பேசினார்.

தொடர்ந்து, "நீலம் மாணவர் அமைப்பு சார்பில் இனி எப்போது நீட் எதிர்ப்பு போராட்டம் நடந்தாலும், அதில் நான் கண்டிப்பாக கலந்து கொள்வேன். நீங்கள் இறங்கி நில்லுங்கள்... நாங்களும் உங்களோடு நிற்கிறோம். நீட்டை தடை செய்ய அனைவரும் ஒன்றிணைவோம்" என்று வெற்றிமாறன் பேசியது அங்கு திரண்டிருந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றது. மேலும் அவரது பேச்சு தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவியும் வருகிறது.
டெல்லியில் நடந்த தடியடி சம்பவம் ஏற்கனவே நாடு முழுவதும் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சென்னை ஆர்ப்பாட்டத்தில் வெற்றிமாறன் பேசிய இந்த உரையும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக, "இந்த முறை விடக்கூடாது... நீங்க இறங்கி நில்லுங்க... நாங்க கூட நிற்கிறோம்" என்ற அவரது வார்த்தைகளையே பலரும் பகிர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications