7 விருதுகளை அள்ளிய வடசென்னை.. தனுஷ் - ஐஸ்வர்யா ராஜேஷ் செம ஹேப்பி.. 2ஆம் பாகத்தை எடுப்பாரா வெற்றி மாறன்?
சென்னை: சமூகச் சிந்தனைகளையும், நல்லுணர்வையும் பரப்பும் திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை நெடுந்தொடர்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் விருதுகளை வழங்கி வருகிறது. தற்போது, 2016 முதல் 2022 வரையிலான ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகளும், 2014 முதல் 2022 வரையிலான ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வரும் பிப்ரவரி 13ஆம் தேதி இந்த விருதுகளை வழங்கவுள்ளார். வடசென்னை படத்திற்கான சிறந்த நடிகர் மற்றும் சிறந்த நடிகை என தேர்வான தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.
திரைப்பட விருதுகள் பட்டியலில், சிறந்த நடிகர்களாக விஜய் சேதுபதி ('புரியாத புதிர்'), கார்த்தி ('தீரன் அதிகாரம் ஒன்று'), தனுஷ் ('வடசென்னை'), ஆர். பார்த்திபன் ('ஒத்த செருப்பு'), சூர்யா ('சூரரைப் போற்று'), ஆர்யா ('சார்பட்டா பரம்பரை'), விக்ரம் பிரபு ('டாணாக்காரன்') ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.
சிறந்த நடிகைகளாக கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜோதிகா, மஞ்சு வாரியர், அபர்ணா பாலமுரளி, லிஜோ மோல் ஜோஸ், சாய் பல்லவி ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். 'மாநகரம்', 'அறம்', 'பரியேறும் பெருமாள்', 'அசுரன்', 'கூழாங்கல்', 'ஜெய்பீம்', 'கார்கி' ஆகிய படங்கள் சிறந்த திரைப்பட விருதுகளைப் பெறுகின்றன.

சின்னத்திரை பிரிவில், எம். இராஜ்குமார், ஆர். பாண்டியராஜன், கெளசிக், கிருஷ்ணா, தலைவாசல் விஜய், வ. சஞ்சிவ், ஜெய் ஆகாஷ், கார்த்திக்ராஜ், சஞ்சீவ் ஆகியோர் சிறந்த கதாநாயகர்களாகவும்; ஆர். ராதிகா சரத்குமார், வாணி போஜன், நீலிமா ராணி, சங்கவி, ரேவதி, ரேஷ்மா, சபானா ஷாஜகான், கேபரல்லா செல்லஸ், சைத்ரா ஆகியோர் சிறந்த கதாநாயகிகளாகவும் தேர்வாகினர்.
அழகி, ரோமாபுரி பாண்டியன், இராமனுஜர், நந்தினி, பூவே பூச்சூடவா, செம்பருத்தி, இராசாத்தி, சுந்தரி, எதிர்நீச்சல் ஆகிய நெடுந்தொடர்கள் சிறந்த சின்னத்திரை தொடர்களாகத் தேர்வாகியுள்ளன. இந்நிலையில் வடசென்னை படத்திற்காக சிறந்த நடிகர் விருதுக்கு தேர்வாகி உள்ள தனுஷ் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், " வடசென்னை படத்திற்காக தனக்கு சிறந்த நடிகருக்கான விருதுக்கு தேர்ந்தெடுத்துள்ள தமிழ்நாடு அரசுக்கு நன்றி. இது மனநிறைவைக் கொடுக்கும் அங்கீகாரம். விருது பெறவுள்ள மற்ற நடிகர்களுக்கும் வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார். அதேபோல் வடசென்னை மற்றும் கனா என இரண்டு படங்களில் நாயகியாக நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் சிறந்த நடிகையாக ஸ்பெஷல் மென்ஷனில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இதுதொடர்பாக ஐஸ்வர்யா ராஜேஷ் கூறுகையில், " எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கனா படத்திற்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் வடசென்னை படத்திற்கு கிடைத்தது கூடுதல் மகிழ்ச்சியாக உள்ளது. காக்கா முட்டை படத்திற்கு ஐந்து விருதுகள் கிடைத்தது. ஆனால் அந்த படத்தில் எனக்கு சிறந்த நடிகை விருது கிடைக்கவில்லை என்ற வருத்தம் இருந்தாலும், படத்திற்கு சிறந்த நடிகர் விருது கிடைத்தது மகிழ்ச்சியைக் கொடுத்தது. தற்போது இரண்டு படத்திற்கு கொடுத்துள்ளது நிறைவாக உள்ளது. தமிழ்நாடு அரசுக்கு நன்றி" என்று தெரிவித்தார்.
ஏழுவிருதுகள்: படம் மொத்தம் ஏழு விருதுகளை அள்ளி உள்ளது. அதாவது, சிறந்த நடிகர் - தனுஷ், சிறந்த நடிகை - ஐஸ்வர்யா ராஜேஷ் , சிறந்த வில்லன் - சமுத்திரக்கனி, சிறந்த குணச்சித்திர நடிகர் - அமீர், சிறந்த இசையமைப்பாளர் - சந்தோஷ் நாராயணன், சிறந்த ஒளிப்பதிவாளர் - வேல்ராஜ், சிறந்த ஒலிப்பதிவாளர் - டி. உதயகுமார் என மொத்தம் படம் ஆறு விருதுகளை அள்ளி உள்ளது.


Click it and Unblock the Notifications











