Vetrimaaran: நடிகராக வெற்றிமாறனின் முதல் சம்பவம்.. விஜய் சேதுபதியின் ட்ரெய்ன் மூவியில் சர்ப்ரைஸ்
சென்னை: வெற்றிமாறன் தற்போது விடுதலை 2ம் பாகத்தை இயக்கி வருகிறார். இதுவரை இயக்குநராக மட்டுமே வலம் வரும் வெற்றிமாறன், மிஷ்கினின் ட்ரெய்ன் படத்தில் நடித்துள்ளாராம்.

நடிகராக அறிமுகமாகும் வெற்றிமாறன்
தனுஷ் ஹீரோவாக நடித்த பொல்லாதவன் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் வெற்றிமாறன். தொடர்ந்து ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன், விடுதலை முதல் பாகம் என தரமான படங்களை இயக்கியுள்ளார். தற்போது விடுதலை 2ம் பாகத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். இதனையடுத்து வாடிவாசல் படத்தை இயக்கவுள்ளார்.
சூர்யா ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இதுவரை இயக்குநராக மட்டுமே வலம் வந்த வெற்றிமாறன், அடுத்து நடிகராகவும் மாஸ் காட்டவுள்ளாராம். அதாவது விஜய் சேதுபதி நடிப்பில் ட்ரெய்ன் என்ற படத்தை இயக்கி வருகிறார் மிஷ்கின். கலைப்புலி எஸ் தாணு இந்தப் படத்தை தயாரித்து வருகிறார்.
ட்ரெய்ன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இரு தினங்களுக்கு முன்னர் படக்குழு வெளியிட்டது. அதேபோல், படப்பிடிப்புக்கு முந்தைய பூஜை விழாவின் புகைப்படங்களும் வெளியாகியிருந்தது. ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இந்தப் படத்தின் ஷூட்டிங் முழுவதும் ரயிலில் நடைபெறுகிறதாம். அதனால் தான் ட்ரெய்ன் என்ற டைட்டிலில் இந்தப் படம் உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு வில்லனாக ஜெயராம் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், ட்ரெய்ன் படத்தில் இயக்குநர் வெற்றிமாறன் நடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய் சேதுபதி, மிஷ்கின் இருவருக்காகவும் கேமியோ ரோலில் மட்டும் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம். ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் அவரது படத்தில் வெற்றிமாறனை வில்லனாக நடிக்க வைக்க வேண்டும் என அதிக ஆர்வத்துடன் இருந்தார். இதனை லியோ சக்சஸ் மீட்டிலும் கூறியிருந்தார்.
லோகேஷ் போல மேலும் சில இயக்குநர்களும் வெற்றிமாறனை தங்களது படங்களில் நடிக்க வைக்க முயற்சித்தனர். ஆனால் அது தற்போது விஜய் சேதுபதி - மிஷ்கின் கூட்டணியில் உருவாகும் ட்ரெய்ன் படத்தில் நிறைவேறியுள்ளது.


Click it and Unblock the Notifications











