Rajinikanth Net Worth: ரிலீஸ் ஆன தலைவரின் வேட்டையன்.. எகிறிய சூப்பர் ஸ்டாரின் சொத்து மதிப்பு!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் உச்ச நடிகர் மட்டும் இல்லை மூத்த நடிகர்களில் ஒருவர். அடுத்த ஆண்டு வந்தால், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு தமிழ் சினிமாவில் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கி 50 ஆண்டுகள் ஆகப்போகின்றது. இவருக்குப் பின்னர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி கோலோச்சிய நடிகர்கள் இப்போது வரை தாக்குப்பிடித்துள்ளார்களா என்றால் இல்லை. ஆனால் இன்றைக்கும் சூப்பர் ஸ்டாராகவும், வசூல் மன்னனாகவும் திகழ்ந்து வருகின்றார். இவரது படம் ரிலீஸ் ஆகின்றது என்றாலே ரசிகர்களுக்கு திருவிழாதான். இவரது நடிப்பில் இன்று அதாவது அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ள படம் வேட்டையன். இந்நிலையில் இவரது சொத்து மதிப்பு குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
இன்றைக்கு சூப்பர் ஸ்டாராக அறியப்படுகின்ற ரஜினிகாந்த் கடந்த 1975ஆம் ஆண்டு இயக்குநர் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்தப் படத்தில் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பின்னர் தனது அயராத உழைப்பினால் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக மாறியது மட்டும் இல்லாமல், அந்த இடத்தில் இதுவரைக்கும் தொடர்ந்து நீடித்து வருகின்றார். இவரது படம் வெளியாகின்றது என்றாலே, ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் திருவிழாதான்.

தற்போது 73 வயதினை எட்டியுள்ள ரஜினி இன்னும் படங்களில் நடித்துக் கொண்டு உள்ளார். இவரது 170வது படமான வேட்டையன் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதேபோல் இவரது அடுத்த படமான கூலி படத்தின் படப்பிடிப்புகளிலும் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். அடுத்த ஆண்டு அவரது திரை வாழ்க்கையில் 50வது ஆண்டு என்பதால் கூலி மற்றும் ஜெயிலர் 2 ஆகிய படங்களை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருவதாக கூறப்படுகின்றது.
சம்பளம்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக உள்ளார். இவர் ஒரு படத்திற்கு குறைந்த பட்சம் ரூபாய் 150 கோடிகளில் இருந்து ரூபாய் 210 கோடிகள் வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகின்றது. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் படத்திற்கு ரூபாய் 110 கோடிகள் சம்பளம் வாங்கினார் என தகவல்கள் வெளியானது. இந்நிலையில் வேட்டையன் படத்திற்கு ரூபாய் 210 கோடிகள் சம்பளம் வாங்கினார் என கூறப்படுகின்றது.

சொத்து மதிப்பு: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள மிகவும் மதிப்பு மிக்க இடங்களில் ஒன்றாக இருக்கக் கூடிய போயஸ் கார்டனில் வீடுகட்டி பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றார். இப்போது அந்த வீட்டின் மதிப்பு ரூபாய் 35 கோடிகள் வரை இருக்கும் என கூறப்படுகின்றது. அதேபோல் சென்னையில் இவருக்குச் சொந்தமான மண்டபமும் உள்ளது. அதன் மதிப்பு ரூபாய் 20 கோடிகள் வரை இருக்கும் என கூறப்படுகின்றது. இதுமட்டும் இல்லாமால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு கார் லவ்வர். இவரது கார் கலெக்ஷன்கள் மிகவும் பெரியது என கூறப்படுகின்றது.

கார்கள்: இவர் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் பாண்டம் ஆகிய கார்களை வைத்துள்ளார். அதேபோல், BMW X5, Mercedes-Benz G Wagon, Lamborghini Urus மற்றும் Bentley Limousine ஆகியவை இவரது கார் கலெக்ஷன்களில் மிகவும் ஆடம்பர கார்கள் வரிசையில் உள்ளது. இதுமட்டும் இல்லாமல் டயோட்டா இன்னோவா கார், ஹோண்டா சிவிக், பழைய பத்மினி ப்ரீமியர் கார், ஹிந்துஸ்தான் மோட்டார்ஸின் புகழ் பெற்ற காரான அம்பாசிட்டர் ஆகிய கார்களையும் அவர் வைத்துள்ளார். இதில் பத்மினி ப்ரீமியர் மற்றும் அம்பாசிட்டர் கார்களை பொக்கிஷம்போல பாதுகாத்து வருகின்றாராம்.

குடும்ப சொத்து: மொத்தத்தில் இவரது சொத்து மதிப்பு என்பது குறைந்தது ரூபாய் 430 கோடிகளில் இருந்து ரூபாய் 500 கோடிகள் வரை இருக்கும் என கூறப்படுகின்றது. இது இல்லாமல் இவரது குடும்பத்தினர் வைத்திருக்கும் சொத்து மதிப்புகளைக் கணக்கிட்டால், மொத்த சொத்து மதிப்பு என்பது பலமடங்கு அதிகமாக இருக்கும் என கூறபடுகின்றது.


Click it and Unblock the Notifications