VidaaMuyarchi: துபாய் சென்ற அஜித்.. சென்னை திரும்பிய த்ரிஷா.. விடாமுயற்சி ஷூட்டிங்கில் திடீர் பிரேக்
சென்னை: விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வந்த நிலையில், அஜித் மெடிக்கல் செக்கப் செய்ய துபாய் சென்றுள்ளதாக தெரிகிறது. அதேபோல் த்ரிஷாவும் அவசரமாக சென்னை திரும்பியுள்ளாராம்.
மெடிக்கல் செக்கப் சென்ற அஜித்
அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் ரொம்பவே தாமதமாக தான் தொடங்கியது. லைகா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கவிருந்த ஏகே 62 படத்தில், கடைசி நேரத்தில் மகிழ் திருமேனி கமிட்டானார். இதனால் தான் விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்குவதில் தாமதமானது. இதனையடுத்து சில வாரங்களுக்கு முன்னர் அஜர்பைஜான் நாட்டில் படப்பிடிப்பை தொடங்கினார் மகிழ் திருமேனி.

அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகின்றனர். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார். முதல் ஷெட்யூலில் 40 நாட்கள் வரை விடாமுயற்சி ஷூட்டிங் நடைபெற்றது. அதன்பின்னர் அஜித், த்ரிஷா ஆகியோர் சென்னை திரும்பினர். சில நாட்கள் ஓய்வுக்குப் பின்னர் மீண்டும் அஜர்பைஜான் சென்ற அஜித், கடந்த ஒரு வாரமாக படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.
அதேபோல் த்ரிஷாவும் சென்னையில் இருந்தே அஜித்துடன் அஜர்பைஜான் சென்றிருந்தார். இரண்டாவது ஷெட்யூலில் அஜித், த்ரிஷாவுடன் அர்ஜுன், ஆரவ், ரெஜினா ஆகியோரும் கலந்துகொண்டனர். அவர்களை அஜித் தனது கேமராவில் ஸ்டைலிஷாக எடுத்த போட்டோஸ் சில தினங்களுக்கு முன்பு வைரலானது. அதேபோல் அஜித் சிக்கன் கிரேவி செய்த போட்டோவும் ட்ரெண்டானது.
இந்நிலையில், விடாமுயற்சி ஷூட்டிங்கில் இருந்து அவசரமாக சென்னை திரும்பியுள்ளார் த்ரிஷா. இன்னொரு பக்கம் அஜித்தும் அஜர்பைஜானில் இருந்து துபாய் பறந்துள்ளார். இதுகுறித்து சமீபத்தில் கிடைத்த தகவலின் படி, த்ரிஷா மலையாளத்தில் டொவினோ தாமஸுடன் ஐடென்ட்டி என்ற படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். அதன் படப்பிடிப்புக்காகவே சென்னை திரும்பியதாகவும், ஜனவரியில் மீண்டும் அஜர்பைஜான் சென்றுவிடுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல் அஜித்தும் அஜர்பைஜானில் இருந்து துபாய் சென்றுவிட்டாராம். அதாவது விடாமுயற்சி ஷூட்டிங் விடுமுறை இல்லாமல் வாரம் முழுவதும் நடைபெற்றுள்ளது. ஆனால், அஜர்பைஜானில் வாரம் 5 நாட்கள் மட்டுமே வேலை தினம் என்பதால், ஷூட்டிங்கில் பணிபுரியும் உள்ளூர் பணியாளர்கள், படகுழுவிடம் வாரம் இரண்டு நாட்கள் லீவு கேட்டுள்ளனர். அப்படி கொடுக்க முடியாது என்பதால், இரண்டு வாரங்களுக்கு சேர்த்து மொத்தமாக 4 முதல் 5 நாட்கள் வரை ஷூட்டிங் பிரேக் விடப்பட்டுள்ளதாம்.
இதனையடுத்து அஜர்பைஜானில் இருந்து துபாய் பறந்த அஜித், அங்கு ஜென்ரலாக ஒரு மெடிக்கல் செக்கப் செய்து வருகிறாராம். அதன்பின்னர் அவர் மீண்டும் விடாமுயற்சி படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அசுர வேகத்தில் நடைபெற்று வரும் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங், பிப்ரவரி மாதத்திற்குள் முடிந்துவிடும் என சொல்லப்படுகிறது. அதேபோல் படமும் மே 1ம் தேதி அஜித் பிறந்தநாளில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications