Ajithkumar: வாத்தியாக மாறிய டிராவலர் அஜித்.. சிம்பிள் அண்ட் நீட்டாக பொலிட்டிகல் க்ளாஸ் எடுத்து மாஸ்
சென்னை: நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமா கதாநாயகர்களில் மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த இந்திய திரையுலக கதாநாயகர்களிலேயே மிகவும் வித்தியாசமானவர். பல நடிகர்கள் தங்களது படங்களில் வசூலுக்காக ஓடிக்கொண்டும் அதனால் தனது அடுத்த படத்தில் அதிக சம்பளம் வாங்கவேண்டும் என்ற எண்ணத்தில் ஓடிக்கொண்டு இருக்கும்போது, இவர் ஒருவர் மட்டும் நடிப்பு என்பது என்வேலை. ஆனால் என் வேலை மட்டும் என் வாழ்க்கை இல்லை என ஒரு வாழ்வை எப்படி வாழ வேண்டும் என பலருக்கும் கற்றுக்கொடுத்துக் கொண்டு உள்ளார்.
அஜித்தின் சினிமா வாழ்க்கையில் அவரைப் பார்த்து ரசிக்கத் தொடங்கியவர்கள் அவரைப் போல் அழகாக இருக்க வேண்டும் என நினைத்திருக்கலாம், அவரைப் போல் தைரியமாக பேசவேண்டும் என நினைத்திருக்கலாம். அவரது தனிப்பட்ட வாழ்க்கையைப் பார்த்து ரசிக்கத் தொடங்கியவர்கள் எத்தனை முறை வீழ்ந்தாலும் வீழ்த்தப்பட்டாலும் மீண்டும் எழுந்து முயற்சிக்கவேண்டும் என்பதைக் கற்றிருப்பார்கள். மேலும் வேலைக்கும் வாழ்க்கைக்கும் உள்ள இடைவெளி குறித்தும் புரிந்து வைத்திருப்பார்கள் எனலாம்.

தனது ரசிகர் மன்றத்தைக் களைத்தது மட்டும் இல்லாமல், தனது ரசிகர்களை நோக்கி எனக்கு போஸ்டர் ஒட்டுவது, கட்-அவுட் வைப்பது, பாலாபிஷேகம் செய்வதை எல்லாம் விட்டுவிட்டு குடும்பத்தை கவனியுங்கள் எனக் கூறியவர். தான் நடிக்கும் படங்களின் புரோமோசன்களில் ஒரு நாளும் கலந்து கொள்ளமாட்டார். சினிமா நிகழ்ச்சிகளில், விருது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மாட்டார். ஆனால், அப்படி இருக்கும்போதும்கூட அவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்துக் கொண்டு உள்ளது.
கார் ரேஸ்: பைக் மற்றும் கார் ரேஸில் அதிக ஆர்வம் உடையவர் நடிகர் அஜித்குமார். இதனால் படப்பிடிப்பு நேரம் மற்றும் குடும்பத்தினருடன் செலவு செய்யும் நேரம் தவிர பிற நேரங்களில் கார் ரேஸ்களுக்கு பயிற்சி செய்வது, கார் ரேஸிற்காக தயாரிக்கப்பட்ட கார்களை ஓட்டிப்பார்ப்பது என பல விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட விடாமுயற்சி படத்தில் நடிப்பதற்கு அஜர்பைஜான் செல்வதற்கு முன்னர் ஐக்கிய அமீரகத்திற்குச் சென்று, கார் ரேஸில் கலந்து கொள்ளும் கார் ரேஸ் பந்தையக்காரர்களுடன் கார் ஓட்டினார். இது தொடர்பான வீடியோக்களும் வெளியானது.

அஜித் வீடியோ: இந்நிலையில் தற்போது அஜித் பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாக உலா வருகின்றது. அதில், " அனைவரும் பயணப்படவேண்டும். இந்த உலகம் பல்வேறு கலாச்சாரங்களால் நிறைந்தது. பல்வேறு மக்களால் நிறைந்தது எனவே பயணப்பட்டால் மட்டும்தான் அவற்றை எல்லாம் பார்க்க முடியும். அதன் மூலம் பல விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடியும். பயணப்படுவது ஒரு கற்றல் முறை. பயணப்படுவது ஒரு மருத்துவம். சாதியும் மதமும் இதற்கு முன்னர் நீங்கள் சந்திக்காத மனிதர்களைக் கூட வெறுக்க வைக்கும். மேலும் இதனால் நீங்கள் இன்னொரு மனிதன் குறித்து முன்முடிவுக்கு வரக்கூடும். பல நாடுகளைக் கடந்து, பல கலாச்சாரங்களைக் கடந்து பயணப்படும்போது அது உங்களை நல்ல மனிதனாக மாற்றும்" என பேசியுள்ளார். இந்த வீடியோ விடாமுயற்சி படப்பிடிப்பு முன்னர் பைக்கில் லடாக் மற்றும் தாய்லாந்துக்கு அஜித் சென்றபோது எடுக்கப்பட்டதைப் போல் தெரிகின்றது.
கமெண்ட்: அஜித் இவ்வாறு பேசியுள்ள வீடியோவை அவரது ரசிகர்கள் இணையத்தில் வேகமாக பகிர்ந்து வருகின்றனர். இது மட்டும் இல்லாமல் பலரும் அஜித் சார் நீங்கள் படங்களில் கூட பொறுமையாக நடியுங்கள். ஆனால் அவ்வப்போது இதுபோன்ற வீடியோவை வெளியிடுங்கள். இல்லையென்றால் அவ்வபோது ஒரு பேட்டி கொடுங்கள். அது எங்களுக்கு மிகவும் உற்சாகத்தைக் கொடுக்கும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











