VidaaMuyarchi: “விரைவில் விடாமுயற்சி ஷூட்டிங்..” சந்திரமுகி 2 விழாவில் லைகா சுபாஸ்கரன் அதிரடி!
சென்னை: ராகவா லாரன்ஸ் நடித்துள்ள சந்திரமுகி 2 படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், லைகா சுபாஸ்கரனும் கலந்துகொண்டார்.
அப்போது ரசிகர்கள் அவரிடம் அஜித்தின் விடாமுயற்சி அப்டேட் கேட்டு ஆர்ப்பரித்தனர். இதனால் வேறு வழியே இல்லாமல் சந்திரமுகி 2 இசை வெளியீட்டு விழாவில் விடாமுயற்சி படத்தின் அப்டேட்டை அதிரடியாக அறிவித்தார்.

விரைவில் விடாமுயற்சி ஷூட்டிங் : கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான அஜித், தற்போது விடாமுயற்சி படத்தில் கமிட்டாகியுள்ளார். அஜித்தின் 62வது படமாக உருவாகவுள்ள இதனை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ஏகே 62 படத்தின் இயக்குநராக முதலில் விக்னேஷ் சிவன் கமிட்டாகியிருந்த நிலையில், அதன்பின்னர் மகிழ் திருமேனி அதில் கமிட்டானார். இதனால், மார்ச் மாதம் தொடங்க வேண்டிய ஏகே 62 ஷூட்டிங் தள்ளிப்போனது.
அஜித்துடன் இணையும் வாய்ப்பு திடீரென சர்ப்ரைஸ்ஸாக கிடைத்ததால், ஏகே 62 ஸ்கிரிப்ட்டை பக்காவாக செதுக்கத் தொடங்கினார் மகிழ் திருமேனி. அதுவரை சும்மா இருக்க முடியாது என அஜித் பைக் ட்ரிப் சென்றுவிட்டார். நேபாளம், பூடான், நார்வே என அஜித் கண்டம் விட்டு கண்டம் பைக் டூர் செல்ல, அவரது ரசிகர்கள் அப்டேட் கேட்டு லைகா நிறுவனத்தின் கேட்டை ஆட்டத் தொடங்கினர்.
அதற்கு பலனாக அஜித் பிறந்தநாளில் ஏகே 62 டைட்டில் 'விடாமுயற்சி' என்பதை மட்டும் படக்குழு அறிவித்தது. ஆனால், அதன்பின்னர் இந்தப் படம் குறித்த எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. இந்நிலையில், கடந்த சில நாட்களாக விடாமுயற்சி திரைப்படம் ட்ராப் ஆகவிருப்பதாக செய்திகள் வெளியாகின. லைகா நிறுவனத்திற்கு திடீர் கடன் நெருக்கடி என்றும், அதனால் அஜித்தின் விடாமுயற்சி இன்னொரு முன்னணி நிறுவனத்துக்கு கை மாறுவதாகவும் சொல்லப்பட்டது.

இதனால் கலக்கத்தில் இருந்த அஜித் ரசிகர்களுக்கு தற்போது நல்ல செய்தி கிடைத்துள்ளது. ராகவா லாரன்ஸ் நடித்துள்ள சந்திரமுகி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் செப்டம்பர் 15ம் தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில், சந்திரமுகி 2 இசை வெளியீட்டு விழாவில் லைகா சுபாஸ்கரனும் கலந்துகொண்டார். அப்போது மேடையேறிய அவரிடம் அஜித்தின் விடாமுயற்சி அப்டேட் கேட்டு ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.
இதனையடுத்து விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என அதிரடியாக அப்டேட் கொடுத்துள்ளார். விடாமுயற்சி திரைப்படம் லைகாவுக்கு மிக முக்கியமான ப்ராஜக்ட் என்பதால், அது இனிமேல் தாமதமாகாது என உறுதியாகக் கூறினார். மேலும், அந்தப் படம் ரசிகர்களுக்கு சூப்பரான ட்ரீட்டாக இருக்கும் என்றும் லைகா சுபாஸ்கரன் கூறினார். இதனால், அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்தனர்.


Click it and Unblock the Notifications











