Vidaamuyarchi shooting - விடாமுயற்சி ஷூட்டிங் எப்போது?.. ஒரு வழியா மலை இறங்க தயாரான தல அஜித்
சென்னை: விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கப்போகிறது என்ற தகவல் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
வாரிசு படத்துக்கு துணிவு படம் களமிறங்கியது. விஜய் படமும் அஜித் படமும் பல வருடங்களுக்கு பிறகு ஒரேநாளில் களமிறங்கியதால் அந்த ரேஸில் யார் வெல்வார் என்ற ஒட்டுமொத்த கோலிவுட்டும் எதிர்பார்த்தது. இதில் வசூல் ரீதியாக இரண்டு படங்களும் 300 கோடி ரூபாயை தாண்டிவிட்டது என கூறப்பட்டாலும் துணிவு படத்துக்கு கதை ரீதியாகவும், மேக்கிங் ரீதியாகவும் வாரிசைவிட கூடுதல் வரவேற்பு கிடைத்தது.

ஏகே 62வில் அஜித்: துணிவு படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே தனது 62ஆவது படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார் அஜித்குமார். துணிவு படத்தை வெளிநாடுகளில் ரிலீஸ் செய்த லைகா ஏகே 62வை தயாரிக்கிறது. விக்னேஷ் சிவன் படத்தை இயக்குவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர் சொன்ன கதையின் இரண்டாம் பாதியை மாற்ற சொன்னது லைகா. காம்ப்ரமைஸ் செய்துகொள்ள விரும்பாத விக்னேஷ் சிவன் படத்திலிருந்து வெளியேறினார்.

மகிழ் திருமேனி என்ட்ரி: இதனையடுத்து தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத்தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கி கவனம் ஈர்த்த மகிழ் திருமேனி படத்தை இயக்கவிருக்கிறார் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் படம் குறித்த எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படக்குழு வெளியிடாமல் இருந்தனர். இதன் காரணமாக வலிமை அப்டேட்டைவிட ஏகே 62 அப்டேட்டுக்கு ரசிகர்களின் காத்திருப்பு நீண்டிருந்தது.
வெளியான அறிவிப்பு: இப்படிப்பட்ட சூழலில் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த மே 1ஆம் தேதி படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டது. படத்துக்கு விடாமுயற்சி என்று பெயரிடப்பட்டிருக்கிறது. அஜித்தின் வி செண்ட்டிமெண்ட்டில் இந்தப் பெயர் வந்திருப்பதாகவும், படத்தின் பெயர் சுமாராக இருப்பதாகவும் சிலர் கூறினர். ஆனால், படத்தின் தலைப்புக்கும், கதைக்கும் நிச்சயம் சம்பந்தம் இருக்கும். குறிப்பாக மகிழ் திருமேனியின் மேக்கிங் அசரவைக்கும் என ஏகே ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

அஜித்தின் வேர்ல்ட் டூர்: இதற்கிடையே பைக்கில் உலக சுற்றுப்பயணத்தை முடிவு செய்திருந்த அஜித்குமார் தனது முதல்கட்ட பயணத்தை தொடங்கினார். அதன்படி அவர் நேபாளம், பூடான் உள்ளிட்ட பகுதிகளில் மும்முரமாக சுற்றிவருகிறார். இதனையடுத்து படத்தின் பெயர் வெளியாகிவிட்டது ஆனால் அஜித் வேர்ல்ட் டூரில் இருக்கிறாரே. ஷூட்டிங் எப்போது தொடங்கும் என அவரது ரசிகர்கள் அடுத்த கேள்வியை முன்வைக்க ஆரம்பித்தனர்.
எப்போது ஷூட்டிங்?: இந்நிலையில் விடாமுயற்சி ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி, படத்தின் ஷூட்டிங்கானது மே 22ஆம் தேதி சென்னையில் தொடங்கவிருக்கிறதாம். அதில் அஜித் நடிக்க வேண்டிய பகுதிகள் ஷூட் செய்யப்படவிருப்பதாகவும், மொத்தம் 40 நாட்கள் நடக்கும் எனவும் கூறப்படுகிறது. இதனையொட்டி பூடானில் பயணத்தை முடித்துவிட்டு அஜித்குமார் தமிழ்நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











