Vidaamuyarchi - விடாமுயற்சி அப்டேட்.. இந்த முறையாவது சொல்வது நடக்குமா?.. ரசிகர்கள் எதிர்பார்ப்பு
சென்னை: Vidaamuyarchi (விடாமுயற்சி) விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்பது குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.
துணிவு படத்துக்கு பிறகு மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் அஜித். படத்துக்கு விடாமுயற்சி என பெயர் வைக்கப்ப்ட்டுள்ளது. வி செண்ட்டிமெண்ட்படி இந்தப் படத்தின் பெயர் வைக்கப்பட்டிருப்பதால் நிச்சயம் படம் ஹிட்டாகும் என்கின்றனர் ரசிகர்கள். அதுமட்டுமின்றி மகிழ் திருமேனியும் மிகச்சிறந்த இயக்குநர் என்பதால் நிச்சயம் ஒரு சூப்பர் ஹிட் படத்தை எதிர்பார்க்கலாம் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

உலக சுற்றுப்பயணம்: அஜித் தனது முதல்கட்ட வேர்ல்ட் டூரை அண்மையில் தொடங்கினார். நேபாளம், பூடான் உள்ளிட்ட பகுதிகளில் ரைட் செய்த அவர் சில மாதங்களுக்கு முன்பு பயணத்தை முடித்து சென்னை திரும்பினார். அதேபோல் அஜித் தனது அடுத்தக்கட்ட சுற்றுப்பயணத்தை நவம்பர் மாதம் தொடங்குவார் எனவும் சுரேஷ் சந்திரா தெரிவித்திருந்தார். இதற்கிடையே அஜித் சென்னை திரும்பிவிட்டதால் விடாமுயற்சி பணிகள் தொடங்கிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.
விடாமுயற்சியில் பிரச்னை: அதன்படி கடந்த மே மாதம் ஷூட்டிங் என கூறப்பட்டது. ஆனால் தொடங்கப்படவில்லை. இதனையடுத்து ஜூன் மாதம் என கூறப்பட்டது. லைகாவில் நடந்த அமலாக்கத் துறை சோதனை காரணமாக அஜித் லைகாவுக்கு பதில் வேறு ஒரு நிறுவனத்துக்கு விடாமுயற்சி படத்தில் நடிக்கலாம் என்ற யோசனையில் இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அதில் உண்மையில்லை என திரைத்துறை வட்டாரம் கூறுகிறது.
என்ன காரணம்?: படத்தின் ஷூட்டிங் தொடங்குவதில் ஏற்பட்டிருக்கும் தாமதத்திற்கு ஒரே காரணம் அஜித்தின் செயல்தான் என்ற முணுமுணுப்பு எழுந்தது. அதாவது இந்தப் படத்தை மிகச்சிறந்த படமாக கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம் அஜித். எனவே மகிழ் திருமேனியிடம் உங்களுக்கு கதை திருப்தி என்று எப்போது உணர்கிறீர்களோ அப்போது ஷூட்டிங் செல்லலாம் என கூறிவிட்டார்.அதனால்தான் படம் தொடங்க தாமதம் என சொல்லப்படுகிறது.

எப்போது ஷூட்டிங்?; இந்நிலையில் விடாமுயற்சி ஷூட்டிங் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி மலேசியா உள்ளிட்ட நாடுகளில் மகிழ் திருமேனி லொகேஷன் தேர்வில் இருக்கும் சூழலில் படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் 21ஆம் தேதி தொடங்கவிருக்கிறதாம். ஹைதரபாத்தில் ஷூட்டிங் தொடங்குகிறது என்றும் செட் போடும் பணிகள் இப்போது மும்முரமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தத் தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் இம்முறையாவது வெளியாகியிருக்கும் தகவலின்படி ஷூட்டிங் தொடங்குமா என கேள்வி எழுப்பிவருகின்றனர்.
வெளியேறினாரா த்ரிஷா?: இதற்கிடையே படத்தில் ஹீரோயினாக நடிக்க த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடந்து அவர் நடிப்பது உறுதியாகிவிட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், விடாமுயற்சி படம் தொடங்க தொடர்ந்து தாமதமாவதால் அந்தப் படத்துக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த டேட்டுகளையும் சேர்த்து கௌரவ் நாராயணன் இயக்கத்தில் வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகவிருக்கும் படத்துக்காக கொடுத்துவிட்டார் என கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











