Vijay - Ajith: கை கோர்த்த அஜித் விஜய் ரசிகர்கள்.. தியேட்டரில் Goosebumps சம்பவம்.. குவியும் பாராட்டு
சென்னை: நடிகர் அஜித் நடிப்பில் நேற்று ரிலீஸ் ஆன படம் விடாமுயற்சி. இந்தப் படம் தமிழ் நாடு முழுவதும் சுமார் 1000 க்கும் அதிகமான திரைகளில் ரிலீஸ் செய்யப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் அஜித் படம் ரிலீஸ் ஆனதால், ரசிகர்கள் பெரும் ஆவலோடும் ஆரவாரத்தோடும் படத்தை வரவேற்றார்கள். படம் வசூலில் எப்படியும் ஹிட் அடித்து விடும் என்பதால், படக்குழுவினர் நிம்மதியில் உள்ளனர். இப்படியான நிலையில், சென்னை, திருவொற்றியூரில், உள்ள திரையரங்கில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் இணைந்து செய்த செயல் மக்கள் மத்தியில் பாராட்டுகளை குவித்துள்ளது.
அஜித், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி நேற்று ரிலீஸ் ஆன படம் விடாமுயற்சி. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும், விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. மேலும் படம் வழக்கமான அஜித் படங்கள் போல் இல்லை என்பதால், ரசிகர்களில் சிலர் பெரும் வருத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். லைகா தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படம் முதல் நாளில் உலகம் முழுவதும் சுமார் 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

விடாமுயற்சி படம், அஜித்துக்கு மிகவும் பிடித்துப்போனதால், மகிழ் திருமேனியுடன் இணைந்து இன்னொரு படம் செய்ய அஜித் விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அஜித்துக்கு சினிமாவில் போட்டியான நடிகர் என்றால் அது, விஜய் தான். இருவருக்கும் இடையில் தொழில் போட்டி இருந்தாலும், இருவரும் நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர். இதனால் இவர்களது ரசிகர்கள் சில நேரங்களில் இணைந்து பல அட்டகாசமான சம்பவங்களைச் செய்கிறார்கள். சில நேரங்களில் எதிரெதிரே நின்று கொண்டு சண்டை போடுவார்கள்.

அஜித் விஜய்: இப்படியான நிலையில்தான், சென்னை திருவொற்றியூரில் உள்ள பிரபலமான தியேட்டரான எம்.எஸ்.எம் திரையரங்கில் அஜித்தின் விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆனது. அங்கு அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் இணைந்து பிறந்து 6 மாதங்களே ஆன குழந்தையின் உயிரைக் காப்பாற்ற பலரும் பாராட்டும் ஒரு செயலை செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மதியழகன் - சௌந்தர்யா தம்பதியரின் 6 மாத குழந்தை, முதுகில் தசை நார் பிரச்னை காரணமாக பாதிப்படைந்துள்ளது. குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தையை இந்த பிரச்னையில் இருந்து மீட்க, வெளிநாட்டில் தான் மருத்துவ வசதி உள்ளது. அதற்கு எப்படியும் ரூபாய் 16 கோடிகள் செலவாகும் என தெரிவித்துள்ளனர்.

மருத்துவ செலவு: இதனால் குழந்தையின் பெற்றோர்கள், மக்களிடம் பணம் திரட்டி, தங்களது குழந்தைக்கான பிரச்னையை சரி செய்ய முடிவெடுத்தனர். அவர்களின் பிரச்னையைத் தெரிந்து கொண்ட அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள், திருவொற்றியூர் எம்.எஸ்.எம் தியேட்டர் வாசலில், குழந்தைக்கான மருத்துவச் செலவிற்கு நிதி திரட்ட க்யூ.ஆர் கோடினை வைத்தனர்.

நிதி உதவி: மேலும் ரசிகர்களுக்கு விநியோகிக்கப்பட்ட டிக்கெட்டிலும் க்யூ. ஆர் கோடினை அச்சடித்துக் கொடுத்டுள்ளனர். ரசிகர்களின் இந்தச் செயலால், குழந்தையின் மருத்துவ செலவிற்கு கணிசமான அளவிற்கு பணம் திரட்டியுள்ளனர். பச்சிளம் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற, அஜித் மற்றும் விஜய் ரசிகர்களின் செயலைக் கேள்விப்பட்டவர்கள், அவர்களைப் பாராட்டி வருகின்றனர். விபரத்தைக் கேள்விப்பட்ட பொதுமக்கள் குழந்தையின் மருத்துவச் செலவுக்கு தங்களால் ஆன உதவியைச் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











