Ilayaraja: ஒன்றரை மணி நேர சிம்பொனி.. லண்டன் அதிர கைதட்டுகள்.. பாராட்டு மழையில் எமோஷனலான இளையராஜா!
லண்டன்: தமிழ் சினிமாவின் அடையாளமாக இருப்பவர் இசையமைப்பாளர் இளையராஜா. இவரை இசைஞானி, ராகதேவன், மேஸ்ட்ரோ என பல பட்ட பெயர்களால் அழைக்கும் அளவுக்கு இசையின் வடிவமாக உள்ளார். நேற்று அதாவது மார்ச் 8ஆம் தேதி லண்டனில் உள்ள அப்போலோ அரங்கத்தில் உலகின் தலைசிறந்த இசைக்குழுவான ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ராவுடன் இணைந்து தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றம் செய்தார். சிம்பொனி முடிந்த பின்னர் இளையராஜா எமோஷ்னலானார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இசைஞானி இளையராஜா லண்டனில் சிம்பொனி அரங்கேற்றம் செய்யப் போகிறேன் என்ற தகவலை அவரே அறிவித்தார். இது குறித்து தெரிந்து கொண்ட அவரது ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தார்கள். இது மட்டும் இல்லாமல் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் மற்றும் எம்.பி, திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, சினிமா நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் இளையராஜாவை நேரடியாக சந்தித்து, வாழ்த்து கூறினார்கள்.
எப்போது 8ஆம் தேதி வரும் என இளையராஜா ரசிகர்கள் காத்துக் கொண்டு இருந்தார்கள். இளையராஜா எப்போது லண்டனுக்கு கிளம்புவார் என ஆவலோடு காத்துக் கொண்டு இருந்தார்கள். இது மட்டும் இல்லாமல், இளையராஜாவுக்கு இப்போது, 81 வயது ஆகிறது. அப்படி இருக்கும்போது, இந்த வயதில் படங்களுக்கும் இசை அமைத்துக் கொண்டு எப்படி சிம்பொனியும் எழுதி முடித்தார் என்ற கேள்வி பலருக்கும் இருந்தது. இந்த சிம்பொனியை நாமும் பார்க்க வேண்டும் என இந்தியாவில் இருந்து குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து அவரது அதி தீவிரமான ரசிகர்கள் லண்டனுக்கு புறப்பட்டுச் சென்றார்கள்.

இசைஞானி: லண்டனில் இருந்த தமிழர்களும், இசைஞானி ரசிகர்களும் டிக்கெட்டுகளை புக் செய்தனர். நேற்று சிம்பொனியை அரங்கேற்றம் செய்தார் இசைஞானி இளையராஜா. இவரது சிம்பொனியை நேரில் பார்த்த ரசிகர்கள் அதை வீடியோ எடுத்து தங்களது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள். இதில் சில ரசிகர்கள் எல்லாம் சிம்பொனி தொடங்க பல மணி நேரங்களுக்கு முன்னரே சென்று, எங்கிருந்து புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்தார்கள்.
கைதட்டல்: இசைஞானி எழுதிய சிம்பொனியில் அவர் சினிமாக்களில் இசையமைத்த பாடல்கள் சிலவற்றின் மெட்டையும் சிம்பொனி இசைக்கு தகுந்தவாறு வடிவமைத்துள்ளார். சினிமா பாடல்களின் இசையை கேட்டதும் அரங்கில் இருந்த ரசிகர்கள் லண்டன் அதிர கைகளைத் தட்டினார்கள். குறிப்பாக ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்லை என்ற பாடலின் இசை சிம்பொனியில் இடம் பெற்ற போது ரசிகர்கள் கைதட்டலில் மிரட்டி விட்டார்கள்.

எமோஷ்னல்: இளையராஜா அருகில் நின்று கொண்டு இருந்த கண்டக்டர் இளையராஜாவை நோக்கி இந்த பாராட்டுகள் அனைத்தும் உங்களுக்கானது, இதனை ஏற்றுக் கொள்ளுங்கள் எனக் கூறுவதை போல, சைகை காட்டினார். அப்போது ரசிகர்களை நோக்கி நடந்து வந்த இளையராஜா ரொம்பவும் எமோஷனலாக ரசிகர்களுக்கு நன்றி கூறினார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும், கூட்டத்தில் இருந்த ரசிகர் ஒருவர் லவ் யூ என்று கத்த, உடனே இளையராஜாவும், லவ் யூ டூ என பதில் அளித்தார்.


Click it and Unblock the Notifications











