சில நேரம் அம்பி.. சில நேரம் அந்நியனாக மாறும் சுசித்ரா.. இசையமைப்பாளர் குற்றச்சாட்டு!
சென்னை: சர்ச்சைக்கு பெயர் போன பாடகி சுசித்ரா, "டைட்டானிக் சன்னி சன்னி" என்ற இசை ஆல்பத்தில் பாடிவிட்டு, அதன் ப்ரோமோஷனில் கலந்து கொள்ள மாட்டேன் என்று கூறிவிட்டதாக இசையமைப்பாளர் ஒருவர் குற்றம்சாட்டி உள்ளார். மேலும், பாடகி சுசித்ரா சில நேரம் அம்பியாகவும், சில நேரம் அந்நியனாக மாறுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இசையமைப்பாளரான சக்தி ஆர் செல்வா, நடிகர் கரண் நடித்த 'கந்தா' என்ற படத்திற்கு இசை அமைத்து இருந்தார். அதன் பின், அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், ஓய்வில் இருந்த அவர் தற்போது, மீண்டும் சினிமாவில், ரீ எண்ட்ரி கொடுக்கும் வகையில், "டைட்டானிக் சன்னி சன்னி" என்ற இந்த இசை ஆல்பத்தை தானே எழுதி, இசையமைத்துள்ளார். அதில் பாடகி சுசித்ராவுடன் இவர் இணைந்து டூயட் பாடி இருந்தார். ஆனால் பாடலின் பிரமோஷனில் எனது பெயரை பயன்படுத்தக் கூடாது என்றும், தனக்கு பெண்களிடம் மிகப்பெரிய மரியாதை இருப்பதாகவும், அந்தப் பெயரை நீங்கள் 'அறுவடை செய்யக்கூடாது' என்று கூறியுள்ளார் சுசித்ரா.

மன உளைச்சல்: இதனால், வேதனையில் இருக்கும் இசையமைப்பாளர் சக்தி ஆர் செல்வா, 'கவிஞர் வைரமுத்து, இயக்குனர் கே.பாலச்சந்தர், இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா என பல பிரபலங்களை சம்பந்தமே இல்லாமல், அவதூறாக பேசும் பாடகி சுசித்ரா, தான் பாடிய பாடலைப் பற்றி பேச மாட்டேன் என்று சொல்வதில் எந்த வகையிலும் நியாயமே இல்லை. கடந்த சில வருடங்களாக சுசித்ராவிற்கு சரியான வாய்ப்பு இல்லாத சூழ்நிலையில், நான் அவர் குரலின் மீது வைத்திருந்த நம்பிக்கையில், அவரை பாட வைத்தேன். ஆனால் அவர் தனது புகழை, நான் அறுவடை செய்யக்கூடாது என சொல்லி என்னை மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டார்.
சில நேரம் அம்பி: செல்வா மியூசிக் சேனல் சார்பில், எஸ்.கௌரி சிவக்குமார், எஸ்.பஞ்சு செல்வா தயாரிப்பில் “டைடானிக் சன்னி சன்னி” என்ற இசை ஆல்பத்தில் பாடலை பாடி கொடுத்த பாடகி சுசித்ரா, பாடலின் பிரமோஷனுக்கு எந்த வித ஒத்துழைப்பும் கொடுக்கவில்லை. கொடுக்கவும் முடியாது என்று தீர்மானமாக கூறிவிட்டார். பாடகி சுசித்ரா சில நேரங்களில் அம்பியாகவும், திடீரென அந்நியனாகவும் மாறுகிறார் என்று இசையமைப்பாளர் சக்தி ஆர் செல்வா குற்றம்சாட்டி உள்ளார்.


Click it and Unblock the Notifications











