சூரியின் மாமன்.. ஃபுல் ஃபார்மில் இருக்காரே ப்பா.. நடந்த பூஜை.. குவியும் வாழ்த்து
சென்னை: நடிகர் சூரி காமெடி நடிகர் என்பதை தாண்டி இப்போது கதையின் நாயகன் என்ற இடத்துக்கு நகர்ந்திருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான கருடன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அடுத்ததாக டிசம்பர் 20ஆம் தேதி விடுதலை 2 ரிலீஸாகிறது. அதற்கான ப்ரோமோஷன் பணிகளில் படு பிஸியாக இருக்கிறார் அவர். சூழல் இப்படி இருக்க அவர் நடிக்கும் அடுத்த படத்துக்கு மாமன் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. ஐஸ்வர்யா லட்சுமி ஹீரோயினாக நடிக்கிரார்.
சினிமாவில் கிடைத்த வேலைகளை எல்லாம் இழுத்துப்போட்டு செய்தவர் சூரி. காதல் உள்ளிட்ட படங்களில் சில நொடிகள் தோன்றியும் மறைந்தார். அப்படிப்பட்ட சூரிக்கு வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மிகப்பெரிய வெளிச்சத்தை கொடுத்தது. அதில் இடம்பெற்ற புரோட்டா காமெடியில் சூரியின் நடிப்பு பெரிதாக பலரையும் கவர்ந்தது. அதனையடுத்து அவருக்கு வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்க ஆரம்பித்தன. அந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி சரசரவென்று முன்னேறினார் அவர்.

முன்னணி காமெடி நடிகர்: சந்தானமும் ஹீரோவாக, வடிவேலு இடையில் கொஞ்ச காலம் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருக்க; ஏற்பட்ட வெற்றிடத்தை சூரி நிரப்பினார். அதன்படி விஜய், அஜித், சூர்யா, ரஜினிகாந்த் என பலருடன் காமெடி ரோல் செய்தார் அவர். அவரது உடல்மொழியும், டயலாக் டெலிவிரியும் ரசிகர்களை ரொம்பவே ஈர்த்தது. அதேசமயம் சூரி காமெடி எல்லாம் சூர மொக்கை என்று ஒரு தரப்பினரும் சொல்லத்தான் செய்தார்கள். ஆனாலும் சூரியின் வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது.
கதையின் நாயகன்: சூழல் இப்படி இருக்க வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் கதையின் நாயகனாக நடித்தார் சூரி. அதில் அவரது நடிப்பு; ஆக்ஷன் காட்சிகள் என அனைத்துமே ரசிகர்கள் கட்டிப்போட்டது. சூரிக்குள் இப்படி ஒரு நடிகர் இருக்கிறாரா என்று ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர். அந்தப் படம் மெகா ஹிட்டாகி சூரிக்கு இன்னொரு பரிமாணத்தை கொடுத்தது. அதனையடுத்து தொடர்ந்து கதையின் நாயகனாகவே அவர் தொடர்ந்துகொண்டிருக்கிறார்.
கருடன், விடுதலை 2: அதன்படி விடுதலை படத்துக்கு பிறகு கருடன் திரைப்படத்தில் நடித்தார் அவர். துரை செந்தில்குமார் இயக்கியிருந்த அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போட்டது. அடுத்ததாக டிசம்பர் 20ஆம் தேதி விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகவிருக்கிறது. இந்தப் படமும் சூரியின் கரியரில் தி பெஸ்ட்டாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அந்தப் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் பிஸியாக இருக்கிறார்.
சூரியின் மாமன்: இந்நிலையில் சூரியின் அடுத்த பட பூஜை நடந்திருக்கிறது. அந்தப் படத்துக்கு மாமன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. Lark Studios சார்பில் K. குமார் தயாரிப்பில், விலங்கு வெப்சீரிஸை இயக்கி புகழடைந்த பிரசாந்த் பாண்டியராஜன் இயக்குகிறார். இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக முன்னணி நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார். நடிகர் ராஜ்கிரண் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் பூஜை இன்று நடந்ததை அடுத்து ஷூட்டிங்கும் மும்முரமாக நடக்கவிருக்கிறது.


Click it and Unblock the Notifications











