விடுதலை 2ம் பாகமும் ரெடி.. விருது விழாவில் 5 நிமிஷம் எழுந்து நின்று கைதட்டல்.. சூரி டபுள் ஹேப்பி!
சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான விடுதலை திரைப்படத்தில் சூரி கதையின் நாயகனாக நடித்திருந்தார். மேலும், முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி மிரட்டி இருந்தார். விடுதலை இரண்டாம் பாகம் உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட திரையிடல் நிகழ்ச்சியில் விடுதலை ஒன்று மற்றும் இரண்டு பாகங்கள் திரையிடப்பட்டு சர்வதேச ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை அள்ளியுள்ளது.
இயக்குநர் வெற்றிமாறன், நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் சூரி உள்ளிட்டோர் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட திரையிடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்கள் படத்துக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரத்தை பார்த்து சந்தோஷம் அடைந்த காட்சிகள் வெளியாகி உள்ளன.

வெற்றிமாறனின் விடுதலை: கடந்தாண்டு மார்ச் 31-ஆம் தேதி வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, கௌதம் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் விடுதலை. ஆரம்பத்தில் நடக்கும் ரயில் விபத்துக் காட்சிகளை ரசிகர்களை பிரமிக்க வைத்த நிலையில், படம் முழுக்க பெருமாள் வாத்தியார் என்பவரை தேடும் பணியில் நடத்தப்படும் ஒர்க்ஷாப் கொடூரங்களை காட்சிப்படுத்திய விதத்தில் ரசிகர்களை மிரள வைத்திருந்தார் வெற்றிமாறன்.
விடுதலை 2 ரெடி: விடுதலை பார்ட் 2 திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்தப் படத்தின் சூட்டிங் முடிந்து நெதர்லாந்தில் நடைபெற்று வரும் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தை ஈர்த்துள்ளது. விடுதலை 2 திரைப்படம் விரைவில் இந்த ஆண்டும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
5 நிமிடங்கள் தொடர்ந்து கைதட்டல்: நம்ம ஊரில் எல்லாம் கடைசி சீன் முடியும் முன்பே தியேட்டரை விட்டு ரசிகர்கள் எழுந்து கிளம்ப ஆரம்பித்து விடுவார்கள். ஆனால், இது போன்ற சர்வதேச திரைப்பட திரையிடல் நிகழ்ச்சிகளில் நல்ல படங்களுக்கு சில நிமிடங்கள் கைதட்டல் கொடுத்து கலைஞர்களை பாராட்டும் வழக்கம் உள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை 2 படத்தை பார்த்த சர்வதேச திரைப்பட ரசிகர்கள் இயக்கம் வெற்றிமாறன் என கடைசியாக 2ம் பாகம் முடியும் போது போடப்படும் டைட்டில் கார்டை பார்த்து விட்டு சுமார் 5 நிமிடங்கள் எழுந்து நின்று கை தட்டி படக்குழுவினரை சந்தோஷத்தில் ஆழ்த்தினர்.
சந்தோஷத்தில் வெற்றிமாறன் டீம்: வெற்றிமாறன், விஜய்சேதுபதி, சூரி உள்ளிட்ட படக்குழுவினர் தங்களுக்கு கிடைத்த 5 நிமிட கைதட்டல் பாராட்டுக்களை பார்த்து செம சந்தோஷமடைந்துள்ளனர். அங்கே எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர். வெற்றிமாறன் மற்றும் சூரி இருவரும் வேட்டி அணிந்துக் கொண்டு நெதர்லாந்தில் நடைபெற்ற ஸ்க்ரீனிங்கில் பங்கேற்றுள்ளனர்.
சூரி டபுள் ஹேப்பி: முன்னதாக இயக்குநர் ராம் இயக்கிய ஏழு கடல் ஏழு மலை படமும் ரோட்டர்டாமில் திரையிடப்பட்டது. நிவின் பாலி, சூரி, அஞ்சலி மற்றும் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உள்ளிட்டோர் அதில், கலந்து கொண்டனர். ஒரே நேரத்தில் சூரி நடித்த இரண்டு படங்கள் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டதால் அவர் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











