Viduthalai 2 Day 4 BO: திங்கட்கிழமை கடும் சரிவு.. விடுதலை 2 வசூல் 4 நாட்களில் இத்தனை கோடி தானா?
சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், ராஜீவ் மேனன், கெளதம் மேனன், இளவரசு, சேத்தன், தமிழ், பவானி ஸ்ரீ, கிஷோர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான விடுதலை 2 திரைப்படம் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தினமும் 7 கோடி ரூபாய் வசூலை இந்தியளவில் ஈட்டி வந்தது. திங்கட்கிழமையான நேற்று திடீரென அதன் வசூல் அப்படியே பல மடங்கு குறைந்து விட்டதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
மற்ற மொழிகளில் வெளியாகும் பார்ட் 2 படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வரும் நிலையில், தமிழ் சினிமாவில் பொன்னியின் செல்வன் 2ம் பாகத்துக்கே ரசிகர்கள் பெரிதாக அக்கறை செலுத்தவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மையாக உள்ளது.

பில்லா 2, சாமி 2, சண்டக்கோழி 2, இந்தியன் 2 என பல படங்கள் பெரிதாக வசூல் சாதனையை படைக்க முடியாமல் சொதப்பி வருகின்றன. அந்த வரிசையில் விடுதலை 2 சேர்ந்துவிடுமோ என்கிற அச்சம் தற்போது படக்குழுவினருக்கு ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
வெற்றிமாறனின் வீக்கான படம்: இதுவரை வெற்றிமாறன் எடுத்த படங்களிலேயே ரொம்ப வீக்கான படம் என்றால் அது விடுதலை 2 தான் என்கின்றனர். அதிகமாக எடுத்து வைத்த ரீல்களை வீணடிக்காமல் அதை ஒரு படமாக இயக்குநர்கள் மாற்றி வியாபாரம் செய்வதால் தான் பார்ட் 2 படங்கள் பெரிதாக ரசிகர்களை கவர்வதில்லை என்றும் கூறுகின்றனர். இந்த வாத்தி ரொம்ப பேசுறான் டா என அதிகமான அரசியல் வசனங்களை எழுதிக் கொடுத்த வெற்றிமாறனே ஷூட்டிங் ஸ்பாட்டில் சொன்னதாக விஜய் சேதுபதி பேட்டி ஒன்றில் கூறிய நிலையில், ரசிகர்களுக்கும் அதே குழப்பம் தான் படத்தை ரசிக்க முடியாமல் செய்ய காரணம் என்கின்றனர்.
அதிரடியாக குறைந்த வசூல்: பொதுவாக வெள்ளிக்கிழமை வெளியாகும் படங்களின் வசூல் சனி மற்றும் ஞாயிறு அதிகரிக்க வேண்டும். அப்படி அதிகரிக்கவில்லை என்றால் வார நாட்களான திங்கள் முதல் வியாழன் வரை வசூல் குறையத் தொடங்கிவிடும். திங்கட்கிழமையான நேற்று மட்டுமே விடுதலை 2 திரைப்படம் வெறும் 2.15 கோடி ரூபாய் வசூலை மட்டுமே பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒட்டுமொத்தமாக இதுவரை உலகளவில் 27 கோடி ரூபாய் வசூலை இந்த படம் ஈட்டியிருக்கும் என கணிப்புகள் வெளியாகி உள்ளன.

கிறிஸ்துமஸ் இருக்கு: செவ்வாய்க்கிழமையான இன்றும் விடுதலை 2 படத்தின் வசூல் பெரிதாக உயர வாய்ப்பில்லை என்றாலும், கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில், விடுமுறை நாளில் விடுதலை 2 படத்துக்கான வசூல் மேலும், அதிகரிக்கும் என்றும் பட்ஜெட்டை விட அதிக வசூலை இந்த படம் அள்ளும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாரம் தமிழில் பெரிய படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், 2வது வாரத்திலும் விடுதலை 2 வெற்றிநடை போடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பு: விடுதலை 2 படத்தின் தயாரிப்பு நிறுவனங்கள் இதுவரை வசூல் தொடர்பான எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சாக்னிக் உள்ளிட்ட பாக்ஸ் ஆபிஸ் வெப்சைட்கள் வெளியிட்ட தகவல்கள் தான் இவை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











