Viduthalai 2: மீண்டும் வெற்றிமாறனுடன் இணையும் அசுரன் நாயகி... விடுதலை 2-வில் அடுத்த சர்ப்ரைஸ்!
சென்னை: வெற்றிமாறனின் விடுதலை திரைப்படம் கடந்த மார்ச் மாதம் வெளியானது.
இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு, தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், விடுதலை 2ம் பாகத்தில் அசுரன் நாயகியான மஞ்சு வாரியர் இணைந்துள்ளாராம்.
மஞ்சு வாரியர் மட்டுமின்றி வெற்றிமாறனின் இன்னொரு ஃபேவரைட் நடிகரும் விடுதலை 2வில் இணைந்துள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலை 2வில் இணைந்த பிரபலங்கள்: சூரி ஹீரோவாகவும், விஜய் சேதுபதி லீட் ரோலிலும் நடித்தத் திரைப்படம் விடுதலை. வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தின் முதல் பாகம், கடந்த மார்ச் மாதம் வெளியானது. தமிழ்நாட்டில் நடந்த உண்மைச் சம்பவத்தை பின்னணியாக வைத்து உருவான இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனாலும், சில வரலாற்றுப் பிழைகள் இருப்பதாக நெகட்டிவான விமர்சனங்களும் கிடைத்தன.
முன்னதாக விடுதலை திரைப்படம் 2 பாகங்களாக வெளியாகும் என வெற்றிமாறன் ஏற்கனவே கூறியிருந்தார். அதுமட்டும் இல்லாமல், இரண்டு பாகங்களுக்கும் சேர்த்து ஒரேடியாக படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் சொல்லப்பட்டது. அதாவது விடுதலை முதல் பாகம் வெளியாகும் போதே, இரண்டாவது பாகத்திற்கான ஷூட்டிங்கும் முடிந்துவிட்டதாகவும், போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மட்டுமே உள்ளதாக கூறப்பட்டது.
ஆனால், முதல் பாகத்திற்கு சில நெகட்டிவான விமர்சனங்கள் கிடைத்ததால், 2ம் பாகத்தில் கொஞ்சம் மாற்றங்களை செய்து வருகிறாராம் வெற்றிமாறன். இதனால், விடுதலை 2வில் சில காட்சிகளை மாற்றியமைத்து ரீ-ஷூட் செய்து வருகிறார் வெற்றிமாறன். இதனால், இந்தாண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட விடுதலை 2, அடுத்தாண்டு தான் ரிலீஸாகவுள்ளது.

இதனையடுத்து விஜய் சேதுபதி, சூரி ஆகியோரும் விடுதலை 2 படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளனர். இதனிடையே மேலும் இரு முக்கியமான நட்சத்திரங்கள், விடுதலை 2வில் இணைந்துள்ளது உறுதியாகியுள்ளது. இயக்குநர் வெற்றிமாறனை மஞ்சு வாரியர், அட்ட கத்தி தினேஷ் இருவரும் சமீபத்தில் சந்தித்துள்ளனர். விடுதலை 2ம் பாகத்திற்காக தான் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. அதன்படி, மஞ்சு வாரியரும் தினேஷும், விடுதலை 2வில் முக்கியமான கேரக்டரில் நடிக்கவுள்ளார்களாம்.
வெற்றிமாறனின் விசாரணை படத்தில் லீட் ரோலில் நடித்திருந்தார் தினேஷ். அதேபோல், அசுரனில் தனுஷின் மனைவியாக நடித்திருந்தார் மஞ்சு வாரியர். இந்த இருவரையும் விடுதலை 2வில் வெற்றிமாறன் நடிக்க வைப்பது, படம் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இந்நிலையில், இயக்குநர் வெற்றிமாறனுடன் மஞ்சு வாரியரும் தினேஷும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











