வெற்றிமாறன், சீனு ராமசாமி படங்களுக்கு கிடைத்த அங்கீகாரம்.. தியேட்டருக்கே இன்னும் படம் வரலை அதுக்குள்ளயா?
சென்னை: தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குநர்கள் என்று புகழப்படுபவர்களில் வெற்றிமாறனும், சீனு ராமசாமியும் அடக்கம். இரண்டு பேருமே இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநர்களாக இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர்களது படத்துக்கு ஒரு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.
இந்தியாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். அவரது முதல் படமான பொல்லாதவன் கமர்ஷியல் படமாக உருவாகியிருந்தது. ஆனால் அதற்கு அடுத்ததாக அவர் இயக்கிய ஆடுகளம் ஐந்துக்கும் மேற்பட்ட தேசிஅய் விருதுகளை அள்ளியது. அந்தப் படத்திலிருந்து வெற்றிமாறன் தவிர்க்க முடியாத இயக்குநராகிவிட்டார்.

தவறாக சித்தரித்த வெற்றிமாறன்?: அதற்கு அடுத்ததாக அவர் இயக்கிய விசாரணை, வடசென்னை ஆகிய படங்கள் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றது. இருப்பினும் வடசென்னை படம் வட சென்னைவாசிகளை தவறாக சித்தரித்துவிட்டதென்று விமர்சனமும் எழுந்தது. ஆனால் அதெல்லாம் இல்லை சரியாகத்தான் பேசியிருக்கிறார் என்றும் வெற்றிமாறனின் ரசிகர்கள் ஒருபக்கம் பேசினர்.
விடுதலை: தொடர்ந்து அவர் இயக்கிய அசுரன் படமும் தேசிய விருதை பெற்றது. அதனையடுத்து விடுதலை படத்தை இயக்கினார். இதற்கிடையே வாடிவாசல் படத்தை தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் போட்ட ப்ளானில் மாற்றம் ஏற்பட விடுதலை படமானது இரண்டு பாகங்களாக உருவானது. இதன் முதல் பாகம் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.
விடுதலை 2: இந்தச் சூழலில் விடுதலை படத்தின் இரண்டாம் பாக ஷூட்டிங் ஏற்கனவே முடிந்தாலும் பாகம் ஒன்று பெற்ற விமர்சனம் இதில் வரக்கூடாது என்பதற்காக படத்தில் மேலும் சில காட்சிகளை படமாக்குகிறார் வெற்றி. அதற்கான வேலைகள் மும்முரமடைந்துள்ளன. இதில் விஜய் சேதுபதிக்கு மஞ்சு வாரியர் ஜோடியாக நடிக்கலாம் என கூறப்படுகிறது. படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் நடந்துவருகிறது. அடுத்ததாக வாடிவாசல், வடசென்னை 2 ஆகிய படங்களை இயக்குகிறார் வெற்றிமாறன்.
சீனு ராமசாமி: அதேபோல் சீனு ராமசாமியும் கோலிவுட்டின் முக்கியமான இயக்குநர்தான். கூடல்நகர் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சீனுராமசாமி. முதல் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த சீனுராமசாமி தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இயக்குநராக வருவார் என கணிக்கப்பட்டார். இந்தப் படத்துக்கு பிறகு தென்மேற்கு பருவக்காற்று படத்தை இயக்கினார் சீனுராமசாமி. இந்தப் படம்தான் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஹீரோவாக முதல் படம் ஆகும். படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், இந்தப் படத்துக்கு தேசிய விருதும் கிடைத்தது. இதனால் மேலும் கவனிக்கப்படும் இயக்குநர் ஆனார் சீனு ராமசாமி.
தென்மேற்கு பருவக்காற்று படத்துக்கு பிறகு சீனுராமசாமி நீர்ப்பறவை படத்தை இயக்கினார். படத்தின் காட்சிகளும், வசனங்களும் பெரிதும் ரசிகர்களை ஈர்த்தன. ஆனால் வசூல் ரீதியாக படம் சரியாக போகவில்லை. இருப்பினும் நீர்ப்பறவைக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கவே செய்கின்றனர். சீனு ராமசாமியின்
கரியரில் மிக முக்கியமான படமாக கருதப்படுவது தர்மதுரை. படத்தில் எமோஷனலும், காதலும் அவ்வளவு அருமையாக இருக்கும். கடைசியாக அவரது இயக்கத்தில் மாமனிதன் படம் வெளியானது.
அங்கீகாரம்: இந்நிலையில் வெற்றிமாறன் மற்றும் சீனு ராமசாமி ஆகியோரின் படங்களுக்கு சர்வதேச திரைப்பட விழாவில் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. அதாவது வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படமும், சீனு ராமசாமி ஜிவி பிரகாஷை வைத்து இயக்கியிருக்கு இடி முழக்கம் திரைப்படமும் புனேவில் நடைபெறவிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன.
இவற்றில் இடி முழக்கம் திரைப்படம் இன்னும் திரையரங்குகளில் வெளியாகவில்லை என்பது கவனிக்கத்தக்கது. புனே சர்வதே திரைபட விழாவானது கடந்த 22 வருடங்களாக நடந்துவருகிறது. அந்தவகையில் அடுத்த வருடம் ஜனவரி 18ஆம் தேதி முதல் 25ஆம் தேதிவரை இந்த விழா நடக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











