Viduthalai Box Office - 50 கோடி ரூபாயை நெருங்கும் விடுதலை.. முழு பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் இதோ
சென்னை: Viduthalai Box Office (விடுதலை பாக்ஸ் ஆபிஸ்) விடுதலை படம் வெளியாகி 10 நாள்களை நிறைவு செய்திருக்கும் சூழலில் அதன் ஃபாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்தியாவின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன் நடிகர் விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்டோரை வைத்து விடுதலை படத்தை உருவாக்கியிருக்கிறார் . நக்சல் பாரி இயக்கங்கள் குறித்தும் தமிழரசன் மற்றும் புலவர் கலியபெருமாள் குறித்தும் படத்தில் பேசப்பட்டிருக்கிறது.. இப்படம் மொத்தம் இரண்டு பாகங்களாக உருவாகியிருக்கிறது. இதன் முதல் பாகம் மார்ச் 31ஆம் தேதி ரிலீஸானது. விஜய் சேதுபதி, சூரி தவிர்த்து கௌதம் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர்.

ரசிகர்கள் கொண்டாடும் விடுதலை: தனது படைப்புகள் மூலம் ஆரோக்கியமான உரையாடலை சமூகத்தில் கிளப்புபவர் வெற்றிமாறன். வெக்கை நாவலில் இருந்து அசுரன் உருவானாலும் அந்தப் படத்தின் மூலம் பஞ்சமி நிலம் குறித்த உரையாடலை தொடங்கிவைத்தார். அதேபோல்தான் விடுதலை படத்தின் மூலம் காவல் துறையின் கோர முகத்தை இன்னொருமுறை வெளிச்சப்படுத்தியிருக்கிறார் வெற்றி என்ற கருத்து எழுந்திருக்கிறது. படத்தை ரசிகர்கள் ஏகத்துக்கும் கொண்டாடிவருகின்றனர்.
ராஜா ராஜாதான்ப்பா: விடுதலையில் முதல்முறையாக இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார் வெற்றிமாறன். கதைக்களம் வித்தியாசமாக இருப்பதால் இளையராஜா எப்படிப்பட்ட இசையை கொடுக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்தது. இளையராஜாவின் இசை மெய் சிலிர்க்க வைப்பதாகவும், படத்தின் பாடல்களும் தாலாட்டும் உணர்வை கொடுப்பதாகவும் ரசிகர்கள் தெரிவித்தனர். அதேசமயம் சில இடஙக்ளில் அவர் தேவையில்லாத இசையை கொடுத்திருக்கிறார் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

டூப் போடாத சூரி: நகைச்சுவை நடிகராக வலம் வந்த சூரியை இந்தப் படத்தின் மூலமாக கதையின் நாயகனாக அறிமுகப்படுத்தியிருக்கிறார் வெற்றிமாறன். அதற்கு நியாயம் செய்யும் விதமாக சூரியும் குமரேசன் என்ற கதாபாத்திரத்தில் அட்டகாசமாக நடித்திருக்கிறார். நடிப்போடு மட்டுமின்றி ஆக்ஷன் காட்சிகளிலும் மிகப்பெரிய ரிஸ்க்கை அவர் எடுத்திருக்கிறார். இதனால் அவருக்கு பாராட்டு குவிந்துவருகிறது.
வசூல் நிலவரம்: இந்நிலையில் படம் வெளியாகி 11 நாள்களை நிறைவு செய்திருக்கிறது. இதனையடுத்து இதுவரை தமிழ்நாட்டில் அந்தப் படம் செய்திருக்கும் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது, இதுவரை அந்தப் படமானது தமிழ்நாட்டில் மட்டும் 33 கோடி ரூபாய்க்கும் அதிகம் வசூலித்திருப்பதாகவும், உலக அளவில் 40 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே அந்தப் படம் விரைவில் 50 கோடி ரூபாயை தொட்டுவிடுவது உறுதியாகியிருக்கிறது.

இரண்டாம் பாகம்: விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் இன்னும் சில மாதங்களில் ரிலீஸ் ஆகும் என கருதப்பட்டது. ஆனால் படத்தின் சில காட்சிகளை வெற்றிமாறன் ரீ ஷூட் செய்யவிருப்பதாகவும் இதன் காரணமாக டிசம்பர் மாதம்தான் விடுதலை 2 ரிலீஸாகும் என சமீபத்தில் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











