அடுத்தடுத்து வெளியாகும் விடுதலை பாடல்கள்.. ட்ரெண்டிங்கில் அருட்பெருஞ் ஜோதி லிரிக் வீடியோ
சென்னை: வடசென்னை படத்தில் இடம்பெற்றிருக்கும் அருட்பெருஞ் ஜோடி பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
இந்தியாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். இவரது முதல் படமான பொல்லாதவன் முதல் கடைசி படமான அசுரன்வரை அனைத்து படங்களுமே ஹிட்டானவை. குறிப்பாக அசுரன் திரைப்படம் சமூகத்தில் மிகப்பெரிய விவாதத்தையும் கிளப்பியது.

வெற்றிமாறனின் விடுதலை
வெற்றிமாறன் தற்போது விடுதலை படத்தை இயக்கியிருக்கிறார். ஜெயமோனைன் துணைவன் சிறுகதையை தழுவி உருவாகியிருப்பதாக கூறப்படும் இதில் விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இவ்வளவு நாள்களாக காமெடி நடிகராக வலம் வந்த சூரி இந்தப் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். மேலும் அவரது கதாபாத்திரம் இன்னும் பல காலத்துக்கு பேசப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது.

பாராட்டை பெற்ற விடுதலை ட்ரெய்லர்
விடுதலை படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா கடந்த 8ஆம் தேதி நடந்தது. படத்தின் ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் நிச்சயம் இந்தப் படமும் வழக்கமான வெற்றிமாறன் படங்கள் போலவே சமூகத்தில் பெரும் விவாதத்தை கிளப்பப்போகிறது என கூறிவருகின்றனர். அதுமட்டுமின்றி சூரியின் நடிப்பையும் வெகுவாக ரசித்து அவரையும் பாராட்டுகின்றனர். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்துள்ளது. இந்தப் படமானது மார்ச் 31ஆம் தேதி வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலையில் கவனம் ஈர்த்த இசை
இசைஞானி இளையராஜா விடுதலை படத்துக்கு இசையமைத்திருக்கிறார். முதல்முறையாக வெற்றிமாறனுடன் இளையராஜா இணைந்திருப்பதால் இசை மீதான எதிர்பார்ப்பும் பன்மடங்கு இருந்தது. அதனை பூர்த்தி செய்யும் விதமாக ட்ரெய்லரில் இளையராஜாவின் பின்னணி இசை அமைந்திருந்தது. எனவே படம் முழுவதும் இளையராஜா பின்னணி இசையில் நிச்சயம் மாயாஜாலம் நிகழ்த்தியிருப்பார் எனவும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கூறுகின்றனர்.

கவனம் ஈர்க்கும் விடுதலை படத்தின் லிரிக் வீடியோ
பின்னணி இசை போலவே பாடல்களிலும் இளையராஜாவின் டச் தெரிகிறது. முதலில் உன்னோடு நடந்தா என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி வரவேற்பைப் பெற்ற சூழலில் நேற்று 'காட்டுமல்லி' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி வரவேற்பைப் பெற்றது. அதேசமயம் இரண்டாவது பாடலான காட்டுமல்லி பாடலின் ஆரம்ப ட்யூன், என் மன வானில் படத்தில் இடம்பெற்ற என்ன சொல்லி பாடுவேனோ பாடலின் ஆரம்ப ட்யூனைப்போல் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

அருட்பெருஞ் ஜோதி லிரிக் வீடியோ
இந்நிலையில் விடுதலை படத்தில் இடம்பெற்றிருக்கும் அருட்பெருஞ் ஜோதி பாடலின் லிரிக் வீடியோ இன்று வெளியாகியுள்ளது. இந்தப் பாடலையும் இளையராஜாவே பாடியிருக்கிறார். மேலும் முதல் இரண்டு பாடல்களின் லிரிக் வீடியோ போல் இந்த லிரிக் வீடியோவிலும் வரிகள் தமிழிலேயே இடம்பெற்றிருக்கின்றன. தற்போது இந்தப் பாடலை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











