விடுதலை - வழி நெடுக காட்டுமல்லி எனக்கா பூத்தது காட்டுக்குள்ள.. வெளியானது லிரிக் வீடியோ
சென்னை: விடுதலை படத்தில் இடம்பெற்றிருக்கும் காட்டுமல்லி பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி ட்ரெண்டாகியுள்ளது.
பொல்லாதவன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான வெற்றிமாறன் ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் ஆகிய ஐந்து படங்களை இயக்கியிருக்கிறார். இவர் இயக்கிய அனைத்து படங்களும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றவை. இந்தியாவின் முக்கியமான இயக்குநர்களில் வெற்றிமாறனும் ஒருவர் என திரையுலகை சேர்ந்தவர்களும் பாராட்டுகின்றனர்.

இயக்குநர் வெற்றிமாறனின் விடுதலை
வெற்றிமாறன் தற்போது விடுதலை படத்தை இயக்கியிருக்கிறார். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற சிறுகதையை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தை அவர் இயக்கியுள்ளார். இதில் விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்டோர் ந்டித்திருக்கின்றனர். இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். அசுரன் படத்துக்கு வெற்றிமாறன் இயக்கும் படம் விடுதலை என்பதால் ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்க எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

விடுதலை ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீடு
இரண்டு பாகங்களாக விடுதலை படம் உருவாகிறது. படத்தின் முதல் பாகம் மார்ச் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. ஏற்கனவே இந்தப் படத்தின் முதல் பாடலான உன்னோடு நடந்தா என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்தப் பாடலை சுகா எழுதியிருந்தார். இந்தச் சூழலில் நேற்று விடுதலை படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடந்தது.

வெளியானது காட்டுமல்லி லிரிக் வீடியோ
இந்நிலையில் விடுதலை படத்தில் இடம்பெற்றிருக்கும் காட்டுமல்லி பாடலின் லிரிக் வீடியோ இன்று வெளியாகியிருக்கிறது. முதல் பாடல் போலவே இந்தப் பாடலின் லிரிக் வீடியோவிலும் வரிகள் தமிழிலேயே கொடுக்கப்பட்டுள்ளன. பாடலை இளையராஜாவே எழுதி பாடியிருக்கிறார். அவருடன் அநன்யா பஃட் பாடியிருக்கிறார். பக்கா மெலோடியாக உருவாகியிருக்கும் இந்தப் பாடலானது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

விடுதலை ஆடியோ ரிலீஸில் இளையராஜா பேசியது என்ன?
முன்னதாக நேற்று சென்னையில் நடைபெற்ற விடுதலை படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய இளையராஜா, "வெற்றிமாறன் மிகச்சிறந்த இயக்குநர். நான் இதுவரை 1500 படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கிறேன். அப்படி என்றால் 1500 இயக்குநர்களூடன் பணி புரிந்திருக்கிறேன் என்று அர்த்தம். அந்த அனுபவத்தில் சொல்கிறேன் வெற்றிமாறன் நிச்சயம் அற்புதமான இயக்குநர்.
நிகழாத படம்; கேட்காத சவுண்ட்
விடுதலை படம் இதுவரை நிகழாத கதைக்களத்தில் உருவாகியிருக்கிறது. எனவே இதுவரை கேட்காத சவுண்டை நீங்கள் இந்தப் படத்தில் கேட்கலாம்" என பேசியிருந்தார். இளையராஜா இதுவரை எந்த இயக்குநரையும், ஒரு திரைப்படத்தையும் இவ்வளவு புகழ்ந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











