Viduthalai 1: ரஜினி முன் இப்படி கூனிக் குறுகி உட்காரலாமா.. வெற்றிமாறனிடம் பொங்கிய நெட்டிசன்கள்!
சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகியுள்ள விடுதலை படத்தின் முதல் பாகத்தை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியிருந்தார்.
வெற்றிமாறன், சூரி, தயாரிப்பாளர் எல்ரெட் குமார் ஆகியோரை ரஜினி பாராட்டிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின.
அதில், ரஜினி முன்பு இயக்குநர் வெற்றிமாறன் கூனிக் குறுகி அமர்ந்திருந்ததை நெட்டிசன்கள் விமர்சிக்கத் தொடங்கினர்.

இன்னொரு பக்கம் வெற்றிமாறனுக்கு ஆதரவாகவும் அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வெற்றிமாறன் மீது விமர்சனம் : வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை படத்தின் முதல் பாகம் மார்ச் 31ம் தேதி வெளியானது. விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, சேத்தன், கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் இந்தப் படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், விடுதலை படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டினார்.
மேலும், தனது டிவிட்டரில் விடுதலை படம் குறித்து பதிவிட்ட ரஜினி, "விடுதலை இதுவரை தமிழ்த் திரையுலகம் பார்த்திராத கதைக்களம். இது ஒரு திரைக்காவியம்! சூரியின் நடிப்பு - பிரமிப்பு, இளையராஜா - இசையில் என்றும் ராஜா, வெற்றிமாறன் தமிழ்த் திரையுலகின் பெருமை, தயாரிப்பாளருக்கு என்னுடைய வாழ்த்துகள். இரண்டாவது பாகத்திற்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்" என குறிப்பிட்டு இருந்தார்.

ரஜினியை விடுதலை படக்குழுவினர் சந்தித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. அப்போது ரஜினி முன்பு நெகிழ்வாக அமர்ந்திருந்தார் வெற்றிமாறன். இதனையடுத்து ரஜினிக்கு அதீத மரியாதை கொடுப்பதாக நினைத்து, வெற்றிமாறன் கூனிக் குறுகி அமர்ந்திருப்பதாக நெட்டிசன்கள் விமர்சித்தினர். மேலும், ஜெய்பீம், விட்னஸ் போன்ற படங்களை பாராட்டாத ரஜினி, விடுதலை படத்தை மட்டும் எப்படி பாராட்டினார் என்றும் கேள்விகளை முன் வைத்தனர்.
முக்கியமாக இயக்குநர் வெற்றிமாறன் மீதான விமர்சனம் தனிநபர் தாக்குதலாக மாறியது. ரஜினி முன் கெத்தாக உட்கார முடியாமல் இப்படியா இருப்பது என விமர்சித்தனர். ஏற்கனவே விடுதலை படத்தில் கருத்தியல் ரீதியாக, வரலாற்று முரண்பாடுகள் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. உண்மையான வரலாற்றை வெற்றிமாறன் திரித்துவிட்டார் என பலரும் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில், இப்போது ரஜினியின் முன் இப்படியா அமருவார் வெற்றிமாறன் என, இஷ்டத்துக்கு விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது. நெட்டிசன்களின் இந்த விமர்சனங்களுக்கு வெற்றிமாறனின் ரசிகர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். எல்லாத் துறைகளிலுமே மேதைகள் இருப்பார்கள். வளர்ந்து வரும் கலைஞர்கள் அவர்களுக்கு மரியாதை கொடுத்து பேசுவது இயல்பு. இதெல்லாம் அவரவர் விருப்பம்.

தாங்கள் விரும்பியதைச் செய்வதற்கு இங்கே அனைவருக்கும் உரிமை உண்டு. இதைக் கேலி செய்வதற்கோ இழிவு செய்வதற்கோ யாருக்கும் உரிமை இல்லை. வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் அடுத்தவரது அரசியல் நிலைப்பாடு குறித்து மட்டுமே சிந்திப்பவர்கள் சக மனிதர்களின் அடிப்படை உரிமைகள் குறித்தும் சிந்திப்பது நல்லது என பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் அவரை நேரில் சந்தித்தவர்கள், வெற்றிமாறனின் இயல்பான உடல்மொழியே அப்படித்தான் இருக்கும். இதில் தனி நபர் தாக்குதல் தேவையில்லாதது எனக் குறிப்பிட்டுள்ளனர். அதேபோல், ரஜினிகாந்த் முன்பாக திமிராக உட்கார்ந்தாலும், அதை அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டார். அவ்வளவு மோசமாக பேசிய சத்தியராஜை கூட PS1 விழாவில் அவர் பெயரை குறிப்பிட்டு பேசினார் ரஜினிகாந்த் எனவும் சிலர் விளக்கம் கொடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











