விடுதலை ஒரு பிளாஸ்டிக் அனுபவம்... இனி வெற்றிமாறன் படங்களை பார்க்க மாட்டேன்... விளாசிய பிரபலம்
சென்னை: வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை படத்தின் முதல் பாகம், மார்ச் 31ம் தேதி வெளியானது.
விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம், கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இந்நிலையில், விடுதலை முதல் பாகத்தை எழுத்தாளர் சாரு நிவேதிதா மிக கடுமையாக விமர்சித்துள்ளார்.

விடுதலை ஒரு பிளாஸ்டிக் அனுபவம் எனக் குறிப்பிட்டுள்ள அவர், வெற்றிமாறன், சூரி இருவரையும் விளாசியுள்ளார்.
விடுதலை ஒரு பிளாஸ்டிக் அனுபவம்
வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. இதன் முதல் பாகம் மார்ச் 31ம் தேதி வெளியானது. ரசிகர்களிடம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்ற விடுதலை முதல் பாகம், எழுத்தாளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில் கொஞ்சம் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாகவே வெற்றிமாறனின் படங்களுக்கு நல்ல விமர்சனங்கள் கிடைக்கும் நிலையில், விடுதலை மட்டும் விதிவிலக்காக அமைந்துள்ளது. இந்நிலையில், இந்தப் படம் குறித்து எழுத்தாளர் சாரு நிவேதிதா மிக காட்டமாக விமர்சித்துள்ளார். தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், விடுதலை ஒரு பிளாஸ்டிக் அனுபவம் நேரடியாக குறிப்பிட்டுள்ளார்.
அதில், வெற்றிமாறனின் படங்கள் பக்கா கமர்ஷியல் சினிமா தான் என்றாலும், அவற்றில் அவ்வப்போது தென்படும் கலை நுணுக்கங்கள் ரசிக்கக் கூடியவையாக இருக்கும். ஆனால் வெற்றிமாறனின் படங்களை பொழுதுபோக்கு சினிமாவாகப் பார்க்காமல் கலையாகக் காணும் ஆபத்தும் இருக்கிறது. அதற்குள் நான் செல்ல விரும்பவில்லை. ஆடுகளம், வட சென்னை, அசுரன் ஆகிய படங்களில் பொழுதுபோக்கு அம்சத்தை விட கலையம்சம் அதிகம்.
அதன் காரணமாகவும், படத்துக்கு வந்த அதீதமான வரவேற்பினாலும் மிகுந்த எதிர்பார்ப்புடனேயே விடுதலையைக் காணச் சென்றதாக குறிப்பிட்டுள்ள சாரு நிவேதிதா, ரயில் விபத்து காட்சியை கடுமையாக விமர்சித்துள்ளார். அமெச்சூரிஷ் என்ற வார்த்தையின் அர்த்தம் தான் அந்த ரயில் விபத்துக் காட்சி. அட்லீ, சுந்தர் சி படத்தில் கூட இதைவிட நன்றாகக் காண்பித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். ரயில் விபத்தை எத்தனை மட்டமாக, எத்தனை அமெச்சூரிஷாகக் காட்சிப்படுத்த முடியுமோ அத்தனை மட்டமாக எடுத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
விஸ்வரூபம் மாதிரியெல்லாம் படம் வந்த பிறகும் இப்படி ஒரு அபத்தமான, அரைவேக்காட்டுத்தனமான ரயில் விபத்துக் காட்சி வருகிறது என்றால், என்ன சொல்வது என்றே தெரியவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். கிராமத்துப் பள்ளிக்கூடங்களில் நடக்கும் டிராமாவைப் போலவே இருந்தது அந்தக் காட்சி. இதில் என்ன கொடுமை என்றால், இயக்குநருக்கே அந்தக் காட்சி உலகத் தரம் என்று தோன்றியிருக்கிறது போல, அதனால் எத்தனை நீட்ட முடியுமோ அத்தனை நேரம் நீட்டியிருப்பதால் படு கேவலமாக உள்ளதாக கூறியுள்ளார்.
அதேபோல், விடுதலையை விட அந்தப் படத்துக்கு வந்த பாராட்டுகள்தான் தனக்கு வேடிக்கையாக இருந்தன. அதை நம்பித்தான் நானும் படம் பார்க்கப் போனேன். சூரியின் நடிப்பைப் பாராட்டாதவர்களே இல்லை. ஆனால் படத்தின் ஆக மொக்கையான விஷயங்களில் முதல் இடத்தில் இருப்பது சூரியின் நடிப்பு தான். இப்படியா ஒருத்தர் பிளாஸ்டிக்கைப் போல் நின்று கொண்டிருப்பார், பேசுவார்? ஆனால், படத்தில் போராளிகளைப் பிடிக்கும் போது நன்கு போல் வால்ட், ஹை ஜம்ப், குட்டிக் கரணம் எல்லாம் செய்கிறார். அப்படியானால் நாம் "சூரி நன்றாகக் குட்டிக் கரணம் அடித்திருக்கிறார்" என்றுதான் சொல்ல வேண்டும் என விமர்சித்துள்ளார்.
மேலும், சேத்தன், கெளதம் மேனன் ஆகியோரின் நடிப்பையும் விமர்சித்துள்ளார் சாரு நிவேதிதா. போலீஸ் அதிகாரியாக வரும் சேத்தன் நடிப்பை பார்க்க எம்.ஜி. சுரேஷ் மாதிரி இருக்கிறார். நடிப்புக்கும் எம்.ஜி. சுரேஷின் எழுத்தைத்தான் உதாரணம் சொல்ல வேண்டும், படு மட்டமான நடிப்பு என்றுள்ளார். அதேபோல், கௌதம் மேனனின் நடிப்பு பள்ளிக்கூடங்களில் திருக்குறள் போட்டியில் குழந்தைகள் திருக்குறள் ஒப்பிப்பதை போல் இருந்ததாக கூறியுள்ளார்.

விடுதலை படத்தில் ராஜாவின் பின்னணி இசை தவிர வேறு எதுவுமே நன்றாக இல்லை. அதிலும் ராஜா பாட்டுப் பாடுகிறேன் பேர்வழி என்று சொல்லி நம் முதுகில் பிரண்டையை வைத்துத் தேய்ப்பது கொடூரமாக உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், உலகில் அதிகபட்ச கொடூரம் என்பது பெண்களை நிர்வாணப்படுத்தி அடிப்பதுதான். ஆனால் படத்தில் அந்தக் காட்சி சப்பையாக, பிளாஸ்டிக்காக, எந்த உணர்வலைகளையும் எழுப்பாத வண்ணம் டப்பாவாக வந்திருக்கிறது. காரணம், படம் மொத்தமும் பிளாஸ்டிக்கை மெல்வது போல்தான் இருக்கிறது என்பதால், நம் அடிவயிற்றைக் கலக்கியிருக்க வேண்டிய அந்தக் காட்சியும் பிளாஸ்டிக்காகவே வந்து போகிறது என்றுள்ளார்.

மேலும், படம் பார்த்துவிட்டு வந்த அன்று இரவு சூரி பாத்திரத்தில் சிவகார்த்திகேயனும், விஜய் சேதுபதியின் பாத்திரத்தில் டி. ராஜேந்தரும் நடித்திருப்பதைப் போல் கனவு வந்தது. சூரி, விஜய் சேதுபதியை விட அந்த இருவரும் நன்றாகவே நடித்திருப்பதாகத் தோன்றியது. சரத்குமார் நடித்த நாடோடி மன்னன் படம் போல அவ்வளவு த்ராபையான ஒரு படத்தை வெற்றிமாறன் எடுப்பார் என்று நான் கனவிலும் கண்டதில்லை. ஆதிவாசிப் பெண்ணாக நடித்திருப்பவர் நன்றாக நடித்திருந்தார்; ஆனாலும் இத்தனை மட்டமான படத்தில் அதெல்லாம் ஒன்றும் எடுபடவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
இறுதியாக இனிமேல் வெற்றிமாறன் படங்களுக்கு அத்தனை ஆர்வமாகப் போக மாட்டேன் என்று நினைக்கிறேன் எனக் சாரு நிவேதிதா குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த விமர்சன பதிவு வெற்றிமாறன் ரசிகர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











