கணக்குப் போட்டு கண்ணாமூச்சு ஆடிய வித்யா பாலன்... கண்டபடி கலாய்த்த ரசிகர்கள்
மும்பை: தான் நடிக்கும் படத்தின் ரிலீஸ் தேதியை, கணக்குப் போட்டு விளக்கிய வித்யா பாலனை ரசிகர்கள் கலாய்த்துள்ளனர்.
பெங்களூரைச் சேர்ந்தவர் சகுந்தலா தேவி, முறையான கல்வி பெறாமல், தானாகக் கணக்குகளைத் தீர்க்கப் பழகியவர். கஷ்டமான கணக்குகளுக்கு கூட சில நொடிகளில் மனக்கணக்கில் தீர்வுகாண்பதில் வல்லவர். இதற்காக கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம்பிடித்தவர். 2013 ஆண்டு தனது 83 வயதில் மரணமடைந்தார்.

உலகின் வேகமான மனிதக் கணினி என்று அழைக்கப்படும் இவரது கதை சினிமாவாகிறது. சகுந்தலா தேவியாக, வித்யாபாலன் நடிக்கிறார். அனுமேனன் இயக்குகிறார். ரோனி ஸ்குருவாலா தயாரிக்கிறார்.
இந்த படத்தின் வித்யா பாலனின் பர்ஸ்ட் லுக் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. சகுந்தலா தேவியை போல முடியை, குட்டையாக வெட்டி தோன்றினார் வித்யா பாலன்.

இந்நிலையில் இந்தப் படம் எப்போது வெளியாகும் என்று வீடியோ ஒன்றைத் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கிறார் வித்யாபாலன். அதில் அஞ்சையும் மூனையும் கூட்டினால் எட்டு... பிறகு.. என ஆரம்பித்து கணக்கு போடுகிறார் வித்யா. பிறகு ஐந்துவிரல்கள் மற்றும் மூன்று விரல்களையும் காட்டி, மே என்பதற்காக ஆடு ஒன்றையும் ஸ்பீக்கர் ஒன்றையும் இணைத்துக் காட்டுகிறார்.
சகுந்தலா தேவி, கணக்கில் வல்லவர் என்பதால் இப்படி கணக்கு போட்டு வீடியோ, வெளியிட்டுள்ளனர். இதைப் பார்த்த ரசிகர்கள், 'நாங்களே கணக்குல வீக்... நீங்க வேற?' என்று அவரைக் கலாய்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











