பிகிலுக்கு அடுத்து வர்ற விஜய் படமும்.. தர்பாரும் ஒரே நாளில் நேருக்கு நேர்.. என்னாகப் போகுதோ!
சென்னை: பிகில் படத்தை அடுத்து, விஜய் நடிக்க இருக்கும் படமும், ரஜினியின் தர்பார் படமும் ஒரே நாளில் வெளியாகி மோத இருக்கிறது.
விஜய்யின் 63-வது திரைப்படத்தை அட்லி இயக்கி வருகிறார். இந்த படத்தின் பணிகள் விரைவில் முடிவடைய உள்ளன. தற்காலிகமாக தளபதி 63 என அழைக்கப்பட்டு வந்த இப்படத்தின் பெயர், விஜயின் பிறந்தநாளன்று வெளியிடப்பட்டது.
பிகில் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் தமிழ்நாடு மகளிர் கால்பந்து குழுவின் பயிற்சியாளராக விஜய் நடித்துள்ளார்.

நயன்தாரா -இந்துஜா
நயன்தாரா கதாநாயகியாகவும், ‘மேயாத மான்'இந்துஜா கால்பந்து வீராங்கனையாகவும், கதிர் விஜயின் நண்பராகவும், விவேக், ரெபா மோனிகா, யோகி பாபு, உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து, மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கிறார்.

அடுத்த படம்
விஜய்யின் 64-வது படமான இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் செப்டம்பர் முதல் தொடங்க இருக்கிறது. இந்தப் படத்தை 2020-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் தர்பார் படத்தையும் அதே பொங்கல் தினத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். எனவே வரும் பொங்கலுக்கு ரஜினி- விஜய் படங்கள் மோதும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

விஜய் - ரஜினி மோதல்
2019-ம் ஆண்டு பொங்கலுக்கு அஜித்தின் விஸ்வாசம் திரைப்படமும், ரஜினியின் பேட்ட திரைப்படமும் நேரடியாக மோதின. முதன்முறையாக ரஜினி மற்றும் அஜித் படங்கள் நேரடியாக மோதினாலும் ஒரு படத்தின் வசூல் மற்ற படத்தை பாதிக்கவில்லை. இரு படங்களுமே விநியோகஸ்தர்களுக்கு நல்ல லாபத்தை ஈட்டி தந்தன.

காசு மழை
இதே போன்று அடுத்த ஆண்டு விஜய், ரஜினியின் படங்கள் மோதினால் மீண்டும் லாபத்துடன் ஆண்டை தொடங்கலாம் என்ற எதிர்பார்ப்பு விநியோகஸ்தர்களிடையே எழுந்துள்ளது. விஜயின் பைரவா திரைப்படம்தான் விஜய் நடித்து கடைசியாக பொங்கலுக்கு வெளியானது. பைரவா படம் பெரிதாக ஓடவில்லை என்பதால் அந்த ராசி விஜய் ரசிகர்களை கவலைக்குள்ளாக்கியுள்ளதாம். ஆனாலும் தர்பார் வசூலை காலிசெய்து நாங்கதான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்பதைக் காட்ட இப்பவே ஆயத்தமாகி வருகிறார்களாம்.


Click it and Unblock the Notifications











