ஷாருக்கான்-விஜய்.. பிரம்மாண்ட இயக்குநரின் அடுத்த அதிரடி.. தரமான சம்பவம் லோடிங்!
சென்னை : பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் விஜய் மற்றும் ஷாருகானை வைத்து படம் இயக்கப்போவதாக தகவல் வெளியாகி சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் ஷங்கர் தற்போது இந்தியன் 2, ஆர்சி 15 படங்களை கையில் வைத்துக்கொண்டு படுபிஸியாக இருக்கிறார்.
இதில் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் சென்னை, திருப்பதி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வந்த நிலையில், படக்குழுவினர் முக்கிய காட்சிகளை படமாக்குவதற்காக தென்னாப்பிரிக்கா செல்ல உள்ளார்.

ராம்சரணின் RC15
இதையடுத்து, இயக்குநர் ஷங்கர் தனது அடுத்தப்படமான RC15 படப்பிடிப்பில் இணைந்துள்ளார். ஹைதராபாத்தில் உள்ள சார்மினாரில் ஆரம்பித்துள்ளதாக இயக்குநர் ஷங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இப்படத்தை தெலுங்கு பட உலகின் மிகப்பெரிய தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷனின் தில் ராஜூ தயாரித்துள்ளார். மேலும், இதில் கியாரா அத்வானி,அஞ்சலி, சுரேஷ் கோபி, ரஹ்மான் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

பிரம்மாண்ட இயக்குநரின் அடுத்த அதிரடி
இவ்விரு படங்களையும் முடித்து விட்டு பல கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக ஒரு படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. நீருக்கடியில் அறிவியல் புனைக்கதையைக் கொண்ட இப்படத்தில் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் மற்றும் தளபதி விஜய்யை நடிக்க வைக்க, ஷங்கர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், இரண்டு பிரபலமான தயாரிப்பு நிறுவனங்கள் இந்த மெகா பட்ஜெட் படத்தைத் தயாரிக்க முன்வந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஷாருக்கானின் ஜவான்
ஷாருக்கான் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோனே , விஜய் சேதுபதி, யோகி பாபு ஆகியோர் நடித்து வருகின்றனர். படம் ஜூன் 2ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஜவான் படத்தில் ஷாருக்கான் இரட்டைவேடத்தில் நடித்து வருகிறார்.

லியோ படப்பிடிப்பில் விஜய்
அதே போல, தளபதி விஜய்யும் லோகேஷ் கனகராஜுடன் லியோ படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இதில்,திரிஷா,பிரியா ஆனந்த், ஆக்ஷன் கிங் அர்ஜுன், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர் ஆகியோர் நடித்து வருகின்றனர். லியோ படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகி படத்தின் மீதான ஹைப்பை ஏகத்திற்கும் எகிற வைத்துள்ளது. இப்படம் ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது.

இரு ஜாம்பவான்கள்
ஷாருக்கான் ஜவான் படத்திலும், விஜய் லியோ படத்திலும் பிஸியாக இருப்பதால், ஷங்கர் தனது அடுத்தப்படம் குறித்து இவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நீண்ட நாட்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் ஷாருக்கான் மற்றும் விஜய் என இரண்டு ஜாம்பவானும் இணைந்து நடித்தால் சும்மா தரமான சம்பவமாக இருக்கும் என்று ரசிகர்கள் இப்போதே படம் குறித்து பேசத் தொடங்கிவிட்டனர். அட்லீ இயக்கி வரும் ஜவான் படத்தில் தளபதி விஜய் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











