விஜய் ஆண்டனியின் அக்கா மகனா இவரு?.. ராட்சசன் ஸ்டைலில் மிரட்டுறாரே.. மார்கன் டிரைலர் விமர்சனம்!
சென்னை: இசையமைப்பாளராக ஒரு காலத்தில் "அட்ரா அட்ரா நாக்க மூக்கா", "என் உச்சி மண்டையில சுர்ருங்குதே" என ஆட்டம் போட வைத்த விஜய் ஆண்டனி 12 ஆண்டுகளுக்கு முன்பாக இசையமைத்த மத கஜ ராஜா படம் கூட இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகி 'சிக்கு புக்கு ரயில் வண்டி' என ரசிகர்களை குத்தாட்டம் போட வைத்தது.
இசையமைப்பாளரை தாண்டி ஹீரோவாக அறிமுகமான விஜய் ஆண்டனி ஆரம்பத்தில் வெற்றிப் படங்களை கொடுத்து வந்த நிலையில், பிச்சைக்காரன் படம் எல்லாம் பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை தேடித் தந்தது. ஆனால், சமீப ஆண்டுகளாக விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகும் படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரிதாக அவருக்கு கை கொடுக்கவில்லை.

இந்நிலையில், எப்படியாவது ஹிட் கொடுக்க வேண்டும் என அடுத்ததாக அவர் களமிறக்கவுள்ள 'மார்கன்' படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி ரசிகர்களை மிரட்டியுள்ளது. அந்த டிரைலர் எப்படி இருக்கிறது என்பது குறித்தும் இந்த படம் விஜய் ஆண்டனிக்கு மீண்டும் கம்பேக் கொடுக்குமா? என்பது குறித்து இங்கே பார்க்கலாம் வாங்க..
மார்கன் டிரைலர்: லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அஜய் தீஷன், சமுத்திரகனி, பிரிகிடா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள மார்கன் படத்தின் மிரட்டலான டிரைலரை சற்றுமுன் விஜய் ஆண்டனி தனது சமூக வலைதள பக்கங்கள் மூலமாக வெளியிட்டுள்ளார். ஒரு பக்கம் முழுவதும் கருப்பு நிற பெயின்ட் அடித்துக் கொண்டு விஜய் ஆண்டனி இந்த படத்தில் நடித்திருக்கிறார். அதற்கான காரணத்தை தெள்ளத் தெளிவாக டிரைலர் காட்டியிருப்பது சிறப்பான விஷயமாக உள்ளது. வரும் ஜூன் 27ம் தேதி திரையரங்குகளில் இந்த படம் வெளியாகிறது.

யாரு இந்த அஜய் தீஷன்?: இந்த ஆண்டு ஏகப்பட்ட வாரிசுகள் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி வருகின்றனர். பொங்கலுக்கு வெளியான நேசிப்பாயா படத்தின் மூலம் அதர்வா முரளியின் சகோதரர் ஆகாஷ் முரளி ஹீரோவாக அறிமுகமானார். அதன் பின்னர், நடிகர் தனுஷின் அக்கா மகன் பவிஷ், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்நிலையில், விஜய் ஆண்டனி தனது அக்கா மகன் அஜய் தீஷனை இந்த படத்தின் மூலமாக சைக்கோ வில்லனாக களமிறக்கியுள்ளார். ஆரம்பத்தில் ககன மார்கன் என வைக்கப்பட்ட டைட்டில் கடைசி நேரத்தில் மார்கன் என மாற்றப்பட்டுள்ளது.
டிரைலர் எப்படி இருக்கு?: இரவின் நிழல் உள்ளிட்ட படங்களில் நடித்த நம்ம பவி டீச்சர் பிரகிடா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். விஜய் ஆண்டனி, சமுத்திரகனி உள்ளிட்டோரும் இந்த படத்தில் போலீஸ் அதிகாரிகள் தான். நகரத்தில் திடீரென ராட்சசன் பாணியில் இளம் பெண்கள் கொடூரமாக கொல்லப்படும் காட்சிகள் டிரைலரில் இடம்பெற்றுள்ளன. விஷ ஊசியை போட்டு இளம் பெண்களை அஜய் தீஷன் கொடூரமாக கொல்கிறான். விஜய் ஆண்டனிக்கும் ஒருமுறை அப்படி போட அதில் இருந்து அவர் தப்பித்தாலும் உடம்பில் ஒரு பாதி கருப்பு நிறமாகவே மாறிவிடுகிறது. சைக்கோ வில்லனை பிடித்து விசாரிக்கும் விஜய் ஆண்டனி இதையெல்லாம் அஜய் தீஷன் எதற்காக செய்தார் என்பதே படத்தின் கதையாக இருக்கும் என்பதை டிரைலரில் தெளிவாக காட்டியுள்ளனர். டிரைலரை பொறுத்தவரையில் செம க்ரிப்பாக உள்ளது அஜய் தீஷனின் சைக்கோத்தனமான நடிப்பு மலையாள இளம் நடிகர்கள் நடிப்பது போல நேர்த்தியாக உள்ளது. இந்த படம் விஜய் ஆண்டனிக்கு கம்பேக்காக அமைய அதிக வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications











