விடை பெற்றார் விஜய் ஆண்டனி மகள்.. கதறி அழும் பெற்றோர்.. கீழ்ப்பாக்கத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது
சென்னை: கீழ்ப்பாக்கத்தில் விஜய் ஆண்டனியின் மகள் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில், மீராவின் பெற்றோர்களான விஜய் ஆண்டனி மற்றும் பாத்திமா கதறியழுத காட்சிகள் அங்கிருந்தவர்களை உடைந்து போகச் செய்துள்ளது.
இசையமைப்பாளர், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என தமிழ் சினிமாவில் பன்முகத் தன்மையுடன் நல்ல மனிதராக வலம் வந்தவர் விஜய் ஆண்டனி.

தற்கொலை எண்ணமே யாருக்கும் வரக் கூடாது என்றும் தனக்கு 7 வயதாக இருக்கும் போதே அப்பா தற்கொலை செய்துக் கொண்ட வலி நிறையவே தெரியும் என பலருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த விஜய் ஆண்டனியின் வீட்டிலேயே இப்படியொரு துயர சம்பவம் நடைபெற்றுள்ளது ஒட்டுமொத்த தமிழக மக்களையும் சோகக் கடலில் மூழ்கச் செய்துள்ளது.
நல்லடக்கம்: நுங்கம்பாக்கத்தில் உள்ள தேவாலயத்தில் ஒரு மணி நேரம் திருப்பலி நடைபெற்ற நிலையில், அங்கிருந்து கீழ்ப்பாக்கத்தில் உள்ள கிறுஸ்துவ இடுகாட்டுக்கு கொண்டு வரப்பட்ட மீரா விஜய் ஆண்டனியின் உடல் அங்கே சற்றுமுன் நல்லடக்கம் செய்யப்பட்டது. வெறும் 16 வயதே ஆன 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி மீரா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டது அவரது பெற்றோர்களான விஜய் ஆண்டனி மற்றும் பாத்திமாவை எந்தளவுக்கு பாதித்து இருக்கும் என்பதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.
கதறியழுத விஜய் ஆண்டனி - பாத்திமா: கடைசியாக தனது மகளை பார்க்கப் போகிறோம் என்றதுமே கல்லறையில் விஜய் ஆண்டனி மற்றும் அவரது மனைவி பாத்திமா கதறி அழுதது பலரையும் தீரா சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. 2007ம் ஆண்டு விஜய் ஆண்டனிக்கும் பாத்திமாவுக்கும் மகளாக பிறந்த மீரா 2023க்குள் இப்படி மண்ணை விட்டு மறைவார் என்பதை இருவராலும் தாங்கிக் கொள்ள முடியாமல் பதறி துடித்த காட்சிகள் பலரது மனங்களையும் உலுக்கி உள்ளது.
கண்ணீர் அஞ்சலி செலுத்திய சொந்தங்கள்: விஜய் ஆண்டனியின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள், திரையுலக நண்பர்கள் என வெகு சிலர் மட்டுமே கடைசி நிமிடங்களில் கலந்து கொண்டனர். மீராவை சிறு வயதில் இருந்தே பார்த்து பூரித்து வந்த சொந்தக்காரர்கள் தற்போது மீராவின் உடல் புதைக்கப்படுவதை பார்த்து பதை பதைத்துப் போய் அழுது புலம்பியது எல்லாம் மன வேதனையை கொடுத்து வருகிறது.
மீரா இனி இல்லை: செப்டம்பர் 19ம் தேதி அதிகாலை 3 மணியளவில் சென்னை டிடிகே சாலையில் உள்ள விஜய் ஆண்டனியின் இல்லத்தில் அவரது மூத்த மகள் மீரா ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், காவேரி மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். அங்கே மீராவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக அறிவித்தனர். அதன் பின்னர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் மீராவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு விஜய் ஆண்டனியிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.
சினிமா பிரபலங்கள் பெருந்திரளாக விஜய் ஆண்டனியின் வீட்டை படையெடுத்து கண்ணீர் மல்க கனத்த இதயத்துடன் அஞ்சலி செய்தனர். இந்நிலையில், இன்று நுங்கம்பாக்கம் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனைக்கு பின்னர், கடும் போக்குவரத்து நெரிசலுக்கு பிறகு மீராவின் உடல் கீழ்ப்பாக்கத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. மீராவின் மறைவு விஜய் ஆண்டனி மற்றும் அவரது குடும்பத்தினரை மீளாத் துயரில் ஆழ்த்தி உள்ளது.
விஜய் ஆண்டனி மகளின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிரபலங்களின் புகைப்படங்கள்


Click it and Unblock the Notifications











