தாத்தாவை போலவே தற்கொலை செய்து கொண்ட பேத்தி.. விஜய் ஆண்டனி வாழ்க்கையில் தொடரும் சோகம்
சென்னை: இந்த உலகத்தில் யாருமே தற்கொலை செய்துக் கொள்ளக் கூடாது என பல மேடைகளில் உருக்கமாக பேசி வந்த விஜய் ஆண்டனியின் மகள் மீரா வெறும் 16 வயதில் தற்கொலை செய்து கொண்டு மரணித்து இருப்பது ஒட்டுமொத்த தமிழக மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
நடிகர் விஜய் ஆண்டனியின் தந்தையும் தற்கொலை செய்துக் கொண்டு தான் இறந்தார் என விஜய் ஆண்டனி பேசிய வீடியோவை தற்போது ரசிகர்கள் ஷேர் செய்து விஜய் ஆண்டனி வாழ்க்கை முழுவதும் ஏன் இப்படி பல சோகங்களை கொடுத்தாய் இறைவா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சமீபத்தில், பிச்சைக்காரன் 2 படத்தின் ஷூட்டிங் சமயத்தில் விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டு அவர் மறுபிறவி எடுத்து வந்த நிலையில், தற்போது அவரது மூத்த மகளின் மரணம் அவரை ஒட்டுமொத்தமாக நிலை குலைய செய்துள்ளது என்கின்றனர்.
7 வயதிலேயே அப்பாவை இழந்த விஜய் ஆண்டனி: நாகர்கோயிலில் 1975ம் ஆண்டு ஜூலை 24ம் தேதி பிறந்தவர் விஜய் ஆண்டனி. விஜய் நடித்த சுக்ரன் படத்தில் தான் இசையமைப்பாளராக அறிமுகமானார். ஆண்டனி எனும் பெயரை அக்னி என மாற்றிக் கொண்டு சினிமா துறையில் நுழைந்தவரை எஸ்.ஏ. சந்திரசேகர் தான் விஜய் மற்றும் ஆண்டனி என பெயரை வைத்து விஜய் ஆண்டனி என அறிமுகப்படுத்தினார்.
தனக்கு 7 வயதாக இருக்கும் போதே தனது அப்பா தற்கொலை செய்துக் கொண்டு இறந்து விட்டதாகவும், அவர் என்ன காரணத்திற்காக இறந்தார் என்றெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால், என் அம்மா எங்களை அப்பா இல்லாமல் வளர்க்க பட்ட கஷ்டங்கள் எல்லாமே எனக்குத் தெரியும் தற்கொலை செய்துக் கொண்டு சென்று விட்டால், அவர்களுக்கு அந்த பிரச்சனை சரியாகி விடும். ஆனால், அவர்களை நம்பி இருப்பவர்கள் கடைசி வரை அனுபவிக்கும் வேதனையும் வலியும் அவர்களுக்கு புரியாது என பேசிய வீடியோவையும் ரசிகர்கள் தற்போது பகிர்ந்து வருகின்றனர்.
யாரும் தற்கொலை செய்யக் கூடாது: தற்கொலை எண்ணமே ரொம்ப கொடுமையானது. அப்பாவின் தற்கொலை என்னை எந்தளவுக்கு பாதித்தது என்பது எனக்குத்தான் தெரியும். யாரும் தற்கொலை செய்யவே கூடாது என பலருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பேச்சுக்களை பேசிய விஜய் ஆண்டனியின் மகளே தற்போது தாத்தாவை போலவே தற்கொலை செய்துக் கொண்டு மரணித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும், இந்த பெருந்துயரில் இருந்து விஜய் ஆண்டனி மீண்டு வர தேவையான சக்தியையும் மன வலிமையையும் அவருக்கு கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.
தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கையை பெற தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கு தொடர்பு கொண்டு பேசலாம். சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications











