விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்து உருவாகும் படம் 'லாயர்'.. இயக்குநர் யாரு தெரியுமா?
சென்னை: விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் தயாரிப்பில் உருவாகும் 'லாயர்' திரைப்படத்தை 'ஜென்டில்வுமன்' படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன் இயக்குகிறார். நீதிமன்ற பின்னணியில் ஒரு வித்தியாசமான வழக்கை மையமாக வைத்து, இப்படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன்.
இதுவரை திரையில் காட்டியிராத, நீதிமன்றத்தையும், அதன் நடைமுறைகளையும், தத்ரூபமாகத் திரையில் பிரதிபலிக்கும் திரைப்படமாக இப்படம் இருக்கும் என்கின்றனர். விஜய் ஆண்டனியுடன் இப்படத்தில் அவருக்கு இணையான எதிர் கதாப்பாத்திரத்தில், இந்தியளவில் புகழ் பெற்ற ஒரு நடிகையும் இப்படத்தில் இணையவுள்ளாராம்.

இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், படக்குழு இப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் துவங்கவுள்ளது. இப்படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர், நடிகையர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் இப்படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்கின்றனர்.
லாயராக மாறிய விஜய் ஆண்டனி: சமீபத்தில் இந்தியளவில் நீதிமன்றங்கள் தொடர்பான கதையம்சம் கொண்ட படங்கள் வெற்றியடைந்து வருகின்றன. நானி தயாரிப்பில் தெலுங்கில் வெளியான கோர்ட் திரைப்படம் வெற்றியை ஈட்டியது. அதே போல அக்ஷய் குமார், மாதவன் நடிப்பில் இந்தியில் வெளியான கேசரி சாப்டர் 2 படமும் 100 கோடி வசூலை கடந்தது. நடிகர் சூர்யா, த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் சூர்யா 45 படத்திலும் சூர்யா வழக்கறிஞராக நடித்து வருகிறார். இந்நிலையில், விஜய் ஆண்டனியும் லாயராக மாறியுள்ளார்.

ஜென்டில்வுமன் படம்: லிஜோமோல் ஜோஸ் மற்றும் லாஸ்லியா நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ஜென்டில்வுமன்' படத்தை ஜோஷ்வா சேதுராமன் தான் இயக்கியிருந்தார். தன்னை ஏமாற்றிவிட்டு தனது தோழியுடன் தவறாக பழக நினைத்த கணவரை துண்டு துண்டாக வெட்டி நாய்க்கு இரையாக்கிய மனைவி மற்றும் காதலனை தேடி கண்டுபிடித்துத் தரச்சொல்லி காவல் துறையிடம் செல்ல அங்கே ஒரு போலீஸ் ஆபிசர் தவறாக நடக்க அந்த பெண் அந்த காவலரை என்ன செய்கிறாள் என்பதை திக் திக் திரைக்கதையாக மாற்றி படமாக கொடுத்திருந்தார் ஜோஷ்வா சேதுராமன். இந்நிலையில், அவரது இயக்கத்தில் உருவாகும் படத்தில் விஜய் ஆண்டனி வழக்கறிஞராக நடித்து வருகிறார். விஜய் ஆண்டனி நடிப்பில் பல படங்கள் ரிலீஸ் ஆகாமல் காத்துக் கொண்டிருக்க புதிய படத்தையும் தொடங்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications











