நீங்கதான் எங்களோட கலங்கரை விளக்கம்.. நூறு சாமி ரிலீஸ் சிக்கல்.. விஜய் ஆண்டனியின் எமோஷனல் அறிக்கை!
சென்னை: இசையமைப்பாளர், நடிகர், இயக்குநர் எனப் பன்முகத்திறமை கொண்ட விஜய் ஆண்டனி நடிப்பில், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் 'நூறு சாமி' விநியோகச் சிக்கல்களைக் கடந்து இன்று திரையரங்குகளில் வெற்றிகரமாக வெளியாகியுள்ளது. இத்திரைப்படம் எந்தவிதத் தடையுமின்றி சுமூகமாக ரிலீஸாக உதவிய திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் அவர்களுக்கு நன்றி தெரிவித்து, விஜய் ஆண்டனி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
விஜய் ஆண்டனி: அன்புள்ள சுப்ரமணியம் ஐயா அவர்களுக்கு, கடந்த காலத்திலும் சரி, தற்போதும் சரி, நீங்கள் எனக்கு வழங்கிய நிபந்தனையற்ற உதவிகளுக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி. 'நூறு சாமி' படத்தின் வெற்றிக்குக் காரணமான முக்கிய அம்சங்களில், உங்கள் வழிகாட்டுதல், ஊக்கம் மற்றும் சரியான நேரத்தில் கிடைத்த உதவி ஆகியவை மிக முக்கியமானவை. உங்கள் அர்ப்பணிப்பு உணர்வு, தாராள குணம் மற்றும் இக்கட்டான தருணங்களில் மற்றவர்களுக்குத் துணையாக நிற்கும் பண்பு ஆகியவை நான் மிகவும் மதிக்கும் விஷயங்கள். சவாலான சூழல்களை எதிர்கொள்ளும் என்னைப் போன்றவர்களுக்கு, இத்துறையில் நீங்கள் ஆற்றிவரும் சேவை ஒரு வரப்பிரசாதமாகும். எங்களுக்கு மிகவும் தேவைப்படும் நேரங்களில் வழிகாட்டியாகவும் ஆதரவாகவும் இருந்து, ஒரு கலங்கரை விளக்கமாக நீங்கள் திகழ்கிறீர்கள். உங்கள் கனிவு, தாராள மனப்பான்மை மற்றும் உறுதியான ஆதரவிற்கு மீண்டும் ஒருமுறை நன்றி ஐயா. நான் என்றும் உங்களுக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன் என பதிவிட்டுள்ளார்.

'நூறு சாமி' படம்: விஜய் ஆண்டனியின் வழக்கமான பாணியில், சமூகக் கருத்துக்களுடன் கூடிய ஒரு கமர்ஷியல் எண்டர்டெய்னராக 'நூறு சாமி' படம் உருவாகியுள்ளது. இதில் விஜய் ஆண்டனி மிகவும் சவாலான, அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் பாடல்களும், ட்ரைலரும் ஏற்கனவே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், தியேட்டர்களில் இன்று முதல் காட்சியைப் பார்த்த ரசிகர்கள், படத்தின் திரைக்கதையையும் விஜய் ஆண்டனியின் எதார்த்தமான நடிப்பையும் பெரிதும் பாராட்டி வருகின்றனர். இப்படத்தில் சுவாசிகா விஜய், அஜய் திஷன், லிஜோமோல் ஜோஸ், கருணாஸ், காவ்யா அனில், பாலாஜி சக்திவேல் ஆகியோர் நடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications