இது ரொம்ப நாளாவே நடக்குது.. ஸ்ரீகாந்த் போதைப் பொருள் விவகாரம்.. விஜய் ஆண்டனி ஓபனா உடைச்சிட்டாரே!
சென்னை: லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள 'மார்கன்' திரைப்படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது. அதுதொடர்பாக நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் ஸ்ரீகாந்த் கைது தொடர்பாக கேள்விகள் கேட்கப்பட, அதை வேண்டாம் என மறுக்காமல் விஜய் ஆண்டனி பதில் அளித்துள்ளார்.
இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ஹீரோவாகவும், எடிட்டராகவும், தயாரிப்பாளராகவும் பன்முகத் திறமைகளோடு வலம் வரும் விஜய் ஆண்டனி தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து படங்களில் நடித்து வருகிறார்.

இந்த ஆண்டு நடிகர் தனுஷ் தனது அக்கா மகன் பவிஷை ஹீரோவாக்கி 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தை எடுத்தது போல, விஜய் ஆண்டனியும் தனது தங்கை மகனை 'மார்கன்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகப்படுத்துகிறார்.
மாமனுக்கு வில்லன்: எடிட்டராக பல படங்களுக்கு வேலை பார்த்து வந்த லியோ ஜான் பால் சொன்ன கதை தனக்கு ரொம்பவே பிடித்துப் போக, இந்த படத்தை பண்ணியுள்ளதாக விஜய் ஆண்டனி கூறினார். மேலும், தனது தங்கை மகன் அஜய் தீஷன் இந்த படத்தில் வில்லனாக சைக்கோ கதாபாத்திரத்தில் மிரட்டியுள்ளார். கண்டிப்பாக ரசிகர்களுக்கு பிடிக்கும் என்றும் சீக்கிரமே அவரும் ஹீரோவாக நடிப்பார் என்றும் கூறியுள்ளார். மருமகனே மாமனுக்கு வில்லனாக நடிக்கிறாரே என ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
போதைப் பொருள் புழக்கம்: கோலிவுட்டில் போதைப் பொருள் புழக்கம் தொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறதே என்றும் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் சிக்கி வருவது குறித்து உங்களது பதில் என்ன என்கிற கேள்வியை எதிர்கொண்ட விஜய் ஆண்டனி, இந்த பிரச்னை ரொம்ப வருஷமாகவே இருந்து வருகிறது என்றும் சிகரெட் பிடிப்பதே ஒரு போதை தான் என்றும் தவறான செயல்களில் அதிகம் ஈடுபடாமல் இருப்பது தான் உடலுக்கு ஆரோக்கியத்தை வரவழைக்கும் என்று கூறியுள்ளார்.
ஸ்ரீகாந்த் பற்றி: கோக்கைன் போதைப் பொருள் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நடிகர் ஸ்ரீகாந்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்த விஜய் ஆண்டனி, அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு இருக்கிறது, விசாரணை நடைபெற்று வருகிறது. அதுதொடர்பாக நீதிமன்றம் தான் பதில் சொல்ல வேண்டும் என்றும் சினிமா துறையில் காலங்காலமாக போதைப் பொருள் புழக்கம் இருந்துக் கொண்டு தான் இருக்கிறது என்றும் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
கிராமத்து சப்ஜெக்ட்: விஜய் ஆண்டனி தொடர்ந்து கொலை, கொள்ளை என வன்முறை கதைகளையே அதிகம் தேர்வு செய்து நடித்து வருகிறார் என்கிற குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வரும் நிலையில், கிராமத்து சப்ஜெக்ட் மற்றும் ஃபீல் குட் படங்கள் எல்லாம் பண்ண மாட்டீர்களா? என்கிற கேள்விக்கு, தனது அடுத்த படமே பிரம்மாண்டமான கிராமத்து சப்ஜெக்ட் படம் தான் என்றும் அதன் டைட்டிலை இப்போ சொல்லமாட்டேன், சீக்கிரமே அறிவிப்பு வரும். மதுரையை சார்ந்த நல்ல கதைகளுடன் நிச்சயம் இயக்குநர்கள் அணுகினால், கண்டிப்பாக படம் பண்ண தான் தயாராக இருப்பதாகவும் தனது விருப்பத்தையும் வெளிப்படையாக பேசியிருக்கிறார் விஜய் ஆண்டனி. வரும் ஜூன் 27ம் தேதி திரையரங்குகளில் 'மார்கன்' திரைப்படம் வெளியாகிறது.


Click it and Unblock the Notifications











