தவிக்க விட்டு சென்ற மகள்.. தீராத துயரத்தில் விஜய் ஆண்டனி.. இறுதிச்சடங்கு எப்போது!
சென்னை: 16 வயதே ஆன விஜய் ஆண்டனியின் மகள் மீராவின் இறுதிச்சடங்கு இன்று மாலை நடைபெறும் என்று தெரிகிறது.
இசையமைப்பாளர்,நடிகர்,பாடகர், இயக்குநர்,தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்ட விஜய் ஆண்டனி பாத்திமா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிகளுக்கு மீரா, லாரா என்ற 2 மகள்கள் இருந்த நிலையில், மூத்த மகள் மீரா இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மூத்த மகள் மீரா: சென்னையில் உள்ள சர்ச் பார்க் பள்ளியில் 12 ம் வகுப்பு படித்து வந்த மீரா இன்று அதிகாலை 3 மணியளவில், வீட்டில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மீரா மன அழுத்தத்தில் இருந்ததாவும், அதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெறிவந்துள்ளது.
உடற்கூறு ஆய்வு: காவேரி மருத்துவமனையில் அவர் உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியதை அடுத்து, உடற்கூறு ஆய்வுக்காக, ஓமந்தூரார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு உடற்கூறு பணிகள் காலை 7 மணியில் இருந்து நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிந்த பின் விஜய் ஆண்டனியிடம் மகளின் உடல் ஒப்படைக்கப்படும்.
இறுதிச்சடங்கு: இதையடுத்து, சென்னை டிடிகே சாலையில் உள்ள விஜய் ஆண்டனி வீட்டில் இன்று மாலை இறுதிச்சடங்கு நடைபெறும் என தெரிகிறது. மருத்துவமனைக்கு யாரும் வரவேண்டாம் என்றும், அனைவரும் வீட்டிற்கு வருமாறு விஜய் ஆண்டனி தரப்பில் இருந்த தகவல் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
தவிக்கவிட்டு சென்ற மகள்: தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் நண்பர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்களிடம் விசாரித்து வருகின்றனர். மேலும் செல் போனையும் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். ஆசை ஆசையாக வளர்த்த செல்ல மகளை பரிகொடுத்துவிட்டு சொல்லமுடியாத தீராத துயரத்தில் இருக்கும் விஜய் ஆண்டனிக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் பலரும் விஜய் ஆண்டனிக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம். வாழ்வதற்கு புது நம்பிக்கையை பெற தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104-க்கு தொடர்பு கொண்டு பேசலாம். சினேகா தொண்டு நிறுவனத்தின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications











