விஜய் ஆண்டனியை கட்டிப்பிடித்து கதறி அழுத பெண்.. தியேட்டரையே உலுக்கிய நூறு சாமி.. தாயின் மறுமணக் கதை!
சென்னை: பிச்சைக்காரன் என்ற மாபெரும் காவியத்தைக் கொடுத்து, ஒட்டுமொத்த ரசிகர்களையும் உருகவைத்த சசி - விஜய் ஆண்டனி கூட்டணி மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் தான் நூறு சாமி. இந்தக் கூட்டணி சேர்ந்தாலே படம் நெஞ்சைத் தொடும் என்ற ரசிகர்களின் நம்பிக்கையை, இந்தத் திரைப்படமும் 100% நிஜமாக்கியுள்ளது. தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வெளிவரும் பெண்கள் அனைவரும் கண்கலங்கி, கதறி அழும் வீடியோக்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி, ஒட்டுமொத்த திரையுலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கணவனை இழந்த தாய்: 20 வயதிலேயே தன் கணவனை இழந்துவிடும் சுவாசிகா, தனது இரண்டு மகன்களையும் எத்தனையோ அவமானங்களையும் கஷ்டங்களையும் தாங்கித் தனியாக வளர்க்கிறார். மகன்கள் இருவரும் வளர்ந்து, படித்து, தங்களின் வாழ்க்கையில் ஒரு நல்ல நிலைக்கு முன்னேறுகின்றனர். இந்தச் சூழலில், பிள்ளைகளுக்காகவே தன் இளமை முழுவதையும் தியாகம் செய்த சுவாசிகாவுக்கு, தன் வயதான காலத்தில் தனக்கென ஒரு துணை வேண்டும், மறுதிருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிற ஆசை பிறக்கிறது.

படத்தின் கதை: தன் விருப்பத்தை ஆசையாக மகனிடம் தெரிவிக்கும்போது, அந்த மகன் தாயின் நிலையைப் புரிந்து கொள்ளாமல், அதற்குப் பயங்கரமாக எதிர்ப்பு தெரிவித்து, அவளை மிக அசிங்கமாகப் பேசி காயப்படுத்துகிறான். ஆனால், காலப்போக்கில் அந்தத் தாயின் தனிமையையும், அவளது மனநிலையையும் மகன்கள் எப்படிப் புரிந்து கொள்கிறார்கள்? அவளுக்குத் திருமணம் செய்து வைக்க எப்படித் துணையாக நிற்கிறார்கள்? என்பதுதான் 'நூறு சாமி' படத்தின் இதயத்தை உருக்கும் கதைக் களம்.
தியேட்டரில் கதறிய பெண்: பிள்ளைகளுக்காகத் தன் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் தொலைத்த ஒரு தாயின் தியாகத்தை, நடிகை சுவாசிகா தனது அபாரமான நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். இவருக்கு இந்தத் திரைப்படம் நிச்சயம் தேசிய விருதைப் பெற்றுத் தரும் எனப் படம் பார்த்தவர்கள் கூறி வருகின்றனர்.
வழக்கம்போல வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்யும் விஜய் ஆண்டனி, இதிலும் அசத்தியுள்ளார். அஜய் திஷன், சக்தி, காவ்யா அனில், கருணாஸ், முனிஸ்காந்த் எனப் பலர் இதில் நடித்துள்ளனர்.

நான் இரண்டாம் தாரம்: இப்படத்தைத் தியேட்டரில் பார்த்த பெண்,விம்மி விம்மி அழுது என் கணவர் எனக்கு வாழ்க்கை கொடுத்திருக்கிறார். நான் அவருக்கு இரண்டாம் தாரம். பல இடங்களில் நான் அதைச் சொல்லத் தயங்கி இருக்கிறேன். ஆனால் இந்தப் படத்தைப் பார்த்த பிறகு, நான் இரண்டாம் தாரம் என்று பெருமையாகச் சொல்வேன். என்னைப் போன்ற எத்தனையோ பெண்களுக்கு மறுவாழ்க்கை கிடைக்க வேண்டும் என கண்ணீர் மல்கப் பேசினார்.
கதறி அழுத பெண்: அதேபோல, மற்றொரு பெண்மணி தியேட்டருக்கு வந்திருந்த நடிகர் விஜய் ஆண்டனியை நேரில் பார்த்ததும், உணர்ச்சிவசப்பட்டு அவரைக் கட்டிப்பிடித்துக் கதறி அழுதார். நீங்க நல்லா இருக்கணும் ... கணவனை இழந்த பிறகு என் குழந்தைகளை வச்சுக்கிட்டு இந்தச் சமுதாயத்துல நான் பட்ட கஷ்டம் எனக்குத்தான் தெரியும். இந்தப் படத்தைப் பார்க்கும்போது என் அழுகையை என்னால அடக்கவே முடியல. இதே மாதிரி படங்களை நீங்க தொடர்ந்து எடுக்கணும் என உருகினார். உடனே விஜய் ஆண்டனி அந்தப் பெண்ணைத் தன் தாயைப் போலக் கட்டி அணைத்து ஆறுதல் கூறினார். தியேட்டரில் நடந்த இந்த நெகிழ்ச்சியான சம்பவங்களின் வீடியோக்கள் தற்போது இணையத்தில் செம ட்ரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications