Vijay: ஜவான் நிகழ்ச்சியில் விஜய் புகழ் பாடிய அட்லீ... வெட்டி தூக்கிய சன் டிவி... அடுத்த சர்ச்சை!
சென்னை: ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் நடைபெற்றது.
சென்னை சாய்ராம் கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஜவான் உருவாக விஜய் தான் காரணம் என அட்லீ பேசியிருந்தார்.
இந்நிலையில் ஜவான் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியை சன் டிவி நேற்று (செப்.3) ஒளிபரப்பியது.
இதில் விஜய் குறித்து அட்லீ பேசியது எதுவும் ஒளிபரப்பாகவில்லை என செய்திகள் வெளியாகி கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் புகழ் பாடிய அட்லீ... வெட்டி தூக்கிய சன் டிவி ?: கோலிவுட்டின் மாஸ் ஹீரோவான விஜய், தற்போது தளபதி 68 படத்திற்காக அமெரிக்கா சென்றுள்ளார். முன்னதாக அவர் நடித்துள்ள லியோ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. மேலும், லியோ இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
இதனிடையே ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய அட்லீ, "ஜவான் உருவாக என்னோட அண்ணன், தளபதி விஜய் தான் காரணம்" என பெருமையாகக் கூறினார். அதுமட்டும் இல்லாமல் தன்னை கம்ஃபர்ட் ஜோனில் இருந்து வெளியே கொண்டு வந்ததே விஜய்ண்ணா தான் என தொடர்ந்து அவர் புகழ் பாடியிருந்தார்.

விஜய் குறித்து அட்லீ பேசியது ரசிகர்கள் மத்தியில் ரொம்பவே வைரலானது. இந்நிலையில், ஜவான் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி, நேற்று சன் டிவியில் ஒளிபரப்பானது. அப்போது விஜய் குறித்து அட்லீ பேசிய எதுவுமே இடம்பெறவில்லை என சொல்லப்படுகிறது. எந்த இடத்திலும் விஜய் பற்றி அட்லீ பேசியது இல்லை. அவையனைத்தும் எடிட் செய்யப்பட்ட பின்னரே சன் டிவியில் ஒளிபரப்பாகியுள்ளது.
இந்தச் சம்பவம் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சன் டிவி பேனரில் விஜய் நடித்து வரும் சூழலில், அவரை பற்றி அட்லீ பேசியதை ஏன் நீக்க வேண்டும் என கேள்வி எழுந்துள்ளது. முன்னதாக ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நெல்சனும், விஜய் குறித்து பெருமையாக குறிப்பிட்டார். அதேநேரம் ரஜினி - விஜய் இடையேயான சூப்பர் ஸ்டார் டைட்டில் பஞ்சாயத்தும் இன்னும் ஓய்ந்தபாடில்லை.

இதனால் தான் ஜவான் இசை வெளியீட்டு விழாவில், விஜய் பற்றி அட்லீ பேசியது நீக்கப்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது. ஆனால், சன் டிவி தரப்பில் இருந்து இதற்கு விளக்கம் கொடுக்கும் விதமாக ஒரு ட்வீட் போடப்பட்டுள்ளது. அதில், "ஜவான் இசை வெளியீட்டு விழாவை கொண்டாடினீர்களா?" எனக் கேட்டுள்ளதோடு, இந்நிகழ்ச்சியின் தயாரிப்பு, எடிட்டிங் கோகுலம் மூவிஸ் என குறிப்பிட்டுள்ளது.
இதன்மூலம் ஜவான் இசை வெளியீட்டு விழாவில், விஜய் பற்றி அட்லீ பேசியதை எடிட் செய்ததற்கும் சன் டிவிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என சொல்லாமல் சொன்னதாக தெரிகிறது. ஆனாலும், இந்த சர்ச்சையை ப்ளூ சட்டை மாறன் உள்ளிட்ட சோஷியல் மீடியா ட்ராக்கர்கள் டிவிட்டரில் ட்ரெண்ட் செய்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











