மனைவியை இழந்து தள்ளாடிய கவுண்டமணி.. ஆரத்தழுவி ஆறுதல் கூறிய விஜய்.. கண்ணெல்லாம் கலங்கிடுச்சு!
சென்னை: 85 வயதாகும் நடிகர் கவுண்டமணி சமீபத்தில் பாரதிராஜவின் மகன் மனோஜ் பாரதிராஜா மறைவு செய்தி அறிந்து நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போதே அவர் மனதளவில் உடைந்துப் போயிருந்தார். ஆனால், நேற்று கவுண்டமணியின் மனைவி சாந்தி திடீரென உடல்நலக்குறைவு காரணமாக காலமானது அவரை ஒட்டுமொத்தமாக நிலைகுலைய செய்துவிட்டது. கவுண்டமணியின் மனைவியின் மறைவு செய்தி அறிந்து சோகத்தில் மூழ்கிய விஜய் உடனடியாக கவுண்டமணியின் இல்லத்துக்கு சென்று ஆறுதல் கூறினார்.
தமிழ் சினிமாவில் நாகேஷுக்குப் பிறகு ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனது நகைச்சுவையால் கட்டிப்போட்டு வைத்திருந்தவர் தான் காமெடி ஜாம்பவான் கவுண்டமணி. உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் நடிப்பதை தவிர்த்துவிட்டு தனது குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவழித்து வந்தார்.

கடைசியாக மீண்டும் ஒருமுறை அவரை ஹீரோவாக வைத்து ஒத்த ஓட்டு முத்தையா படத்தை எடுத்தனர். ஆனால், அந்த படமும் கவுண்டமணிக்கு பெரிதாக கம்பேக் எதையும் கொடுக்கவில்லை. இந்நிலையில், அவரது மனைவி சாந்தியின் மறைவு செய்தியை அறிந்த திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் என பலர் கவுண்டமணி இல்லத்துக்கு சென்று இறுதி மரியாதை செலுத்தினர்.
கவுண்டமணி மனைவி காலமானார்: தமிழ் சினிமாவின் தலை சிறந்த நகைச்சுவை நடிகரான ஜாம்பவான் கவுண்டமணியின் மனைவி சாந்தி நேற்று காலை 10.30 மணியளவில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள கவுண்டமணியின் இல்லத்தில் இறுதிச்சடங்குகள் நடைபெற்றன. கவுண்டமணியுடன் பல படங்களில் இணைந்து காமெடி செய்து தமிழ் சினிமா ரசிகர்களை பல காலங்கள் சிரிக்க வைத்த செந்தில் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும், இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், நடிகர் சத்யராஜ் என பல முன்னணி பிரபலங்கள் கவுண்டமணியின் மனைவி சாந்திக்கு இறுதி மரியாதையை செலுத்திவிட்டு கவுண்டமணிக்கு ஆறுதல் கூறினர்.
விஜய் நேரில் அஞ்சலி: நடிகரும் தவெக தலைவருமான விஜய் கொடைக்கானலில் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய நிலையில், கவுண்டமணியின் மனைவியின் மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக கவுண்டமணியின் வீட்டுக்குச் சென்று சாந்தி அம்மாளின் திருவுடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

கவுண்டமணியை ஆரத்தழுவி ஆறுதல்: வயது முதிர்வின் காரணமாகவும் மனைவியை இழந்த துக்கம் காரணமும் மொத்தமாக உடைந்து நின்ற கவுண்டமணியை ஆரத்தழுவி அண்ணா உங்களுக்காக நான் இருக்கேன் என ஆறுதல் கூறினார். மேலும், கவுண்டமணிக்கு செல்வி மற்றும் சுமித்ரா என இரு மகள்கள் உள்ளனர். அப்பாவை பத்திரமாக பார்த்துக்கோங்கம்மா என விஜய் மகள்களிடமும் ஆறுதல் கூறிவிட்டுச் சென்றார். கவுண்டமணிக்கு விஜய் ஆறுதல் கூறிய காட்சிகளை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.
இருவரும் இணைந்து: 1994ம் ஆண்டு வெளியான ரசிகன் படத்தில் விஜய் மற்றும் கவுண்டமணி இணைந்து நடித்தனர். அதன் பின்னர், 1996ம் ஆண்டு வெளியான கோயம்பத்தூர் மாப்பிள்ளை படத்தில் இடம்பெற்ற இருவரது கலாட்டா காமெடிகளை என்றைக்கும் ரசிகர்கள் மறக்கமாட்டனர். கவுண்டமணி அண்ணனுக்கு என்ன ஆறுதல் சொல்வதென்றே தெரியாமல் செந்தில் அழுத காட்சிகள் எல்லாம் ரசிகர்களை உருக வைத்தன.


Click it and Unblock the Notifications











