Vijay: விசில் கோலம் போட்டு.. பெரம்பூரில் வீடு வீடாக பிரசாரம் செய்யும் விஜய்.. மனுஷன் மிரட்டுறாப்ளயே!
பெரம்பூர்: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான நடிகர் விஜய் தான் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்து வருகிறார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026இல் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டி இடுகிறார். அப்படி இருக்கையில், பெரம்பூர் தொகுதியில் ஏப்ரல் 18ஆம் தேதி காலையில் வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்தார். குறிப்பாக விசில் கோலம் போட்டு மக்களின் குறைகளைக் கேட்டு பிரசாரம் செய்தார். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இந்த பிரசாரம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலில், “ பெரம்பூர் தொகுதியில் இன்று மக்களைச் சந்தித்து அவர்கள் குறைகளையும் தேவைகளையும் கேட்டறிந்தார் வெற்றித் தலைவர் அவர்கள். பின்னர், பெரம்பூர் தொகுதி தேர்தல் பணிமனை சென்று தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தினார். பிறகு, மக்களோடு தேர்தல் பணிமனையில் நமது வெற்றிச் சின்னமாம் விசில் கோலமிட்டு வெற்றிக் கொண்டாட்டத்தைத் தொடங்கி வைத்தார்" என்று குறிப்பிட்டுள்ளனர்.
தவெக நிலவரம்: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் 233 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 232 வேட்பாளர்கள் அக்கட்சியின் சார்பில் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர் இப்படி இருக்கையில் நடிகர் விஜய் இதுவரை சுமார் 6 முதல் 7 முறை மட்டும் தான் தேர்தல் அறிவித்த பின்னர் பிரசாரத்திற்கு வந்துள்ளார். அவை அவரது ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் வரவேற்றாலும், விஜய் பிரசாரத்திற்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் நடத்துவது என்பது அரசியலுக்கு உகந்ததாக இல்லை என்று விமர்சித்து வருகின்றனர்.
அறிவிப்பே இல்லாமல்: அதேபோல் மாலை 6 மணிக்கு மேல் அவர் பிரசாரம் செய்யாமல் எந்த பிரசாரத்தில் இருந்தாலும், அதை உடனே ரத்து செய்துவிட்டு, வீட்டிற்குச் செல்வது என்பது பலருக்கும் பல விதமான சந்தேகங்களை எழுப்பி வருகிறது. இப்படி இருக்கையில் நடிகர் விஜய் ஏப்ரல் 18ஆம் தேதி காலையில் தான் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டு, விசில் கோலம் போட்டு பிரசாரம் செய்தார். விஜய் வீடு வீடாக பிரசாரம் செய்கிறார் என்ற தகவல் முன் கூட்டியே தெரிவிக்கப்படாததால், ரசிகர்கள் அதிக அளவில் கூடவில்லை. ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல், ரசிகர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தாலும், காவலர்களும் விஜய்க்கு வரும் தனியார் பாதுகாவலர்களும் ரசிகர்கள் கூட்டத்தை கட்டுப் படுத்தினர்.


Click it and Unblock the Notifications