Vijay: முதன்முறையாக விஜய்யை பாராட்டிய ப்ளூ சட்டை மாறன்... என்ன இப்படி கட்சி மாறிட்டாரு..?
சென்னை: விஜய் - லோகேஷ் கூட்டணியில் உருவான லியோ படத்தின் படப்பிடிப்பு நிறைவுப்பெற்றதாக சொல்லப்படுகிறது.
இதனிடையே நேற்று தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை நேரில் சந்தித்தார் விஜய்.
இந்நிலையில் வழக்கமாக விஜய்யை விமர்சித்து வரும் ப்ளூ சட்டை மாறன் திடீரென பாராட்டி ட்வீட் போட்டுள்ளார்.

விஜய், அவரது ரசிகர்கள், புஸ்ஸி ஆனந்த் என மக்கள் இயக்கத்தினர் அனைவரையும் ப்ளூ சட்டை மாறன் பாராட்டியது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
விஜய்யை பாராட்டிய ப்ளூ சட்டை மாறன்:சினிமா விமர்சகராக பிரபலமானவர் ப்ளூ சட்டை மாறன். ஆண்டி இண்டியன் என்ற படத்தையும் இயக்கிய ப்ளூ சட்டை, தொடர்ந்து சினிமா விமர்சனங்கள் செய்வதில் பிஸியாக காணப்படுகிறார். இவரது விமர்சனத்தைப் பார்த்துவிட்டு அதன் பின்னர் டிக்கெட் புக்கிங் செய்யும் ரசிகர்கள் கூட்டம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
முக்கியமாக சூப்பர் ஸ்டார் ரஜினி, உலகநாயகன் கமல், விஜய், அஜித் படங்கள் என்றால், விமர்சனம் என்ற பெயரில் வச்சு செய்துவிடுவார் ப்ளூ சட்டை மாறன். அதுமட்டும் இல்லாமல் அடிக்கடி விஜய்யிடம் வம்பிழுக்கும் ப்ளூ சட்டை, அவரது ரசிகர்களையும் விடாமல் துரத்தி துரத்தி அடிப்பார். அதேபோல், விஜய்யின் அரசியல் மூவ்களையும் பங்கமாக கலாய்த்து வருவார்.
இந்நிலையில், திடீரென விஜய்யையும் அவரது மக்கள் இயக்க நிர்வாகிகளையும் பாராட்டி ட்வீட் போட்டுள்ளார் ப்ளூ சட்டை. "அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்" என பாரதியின் கவிதையுடன் பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.
என்ன திடீர்ன்னு ப்ளூ சட்டை மாறன் கட்சி மாறிட்டாரே என நெட்டிசன்கள் குழம்பிவிட்டனர். ஆனால், இதற்கெல்லாம் காரணம் விஜய்யின் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கொடுத்துள்ள பேட்டிதான் என்பது தெரியவந்துள்ளது. அதாவது கடலூரில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இரவு நேர பாடசாலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனை தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்த உள்ளதாகவும், இதுகுறித்து விரைவில் விஜய் அறிவிப்பார் என்றும் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

இதனை குறிப்பிட்டு விஜய்யையும் அவரது மக்கள் இயக்க நிர்வாகிகளையும் பாராட்டியுள்ளார் ப்ளூ சட்டை மாறன். அவரது இந்த மாற்றத்தை கண்டு ஷாக்கான ரசிகர்கள், "உங்களின் இந்த அணுகுமுறை பிடித்துள்ளதாக" கமெண்ட்ஸ் செய்துள்ளனர். அதற்கு பதிலளித்துள்ள ப்ளூ சட்டை மாறன், "நல்ல விஷயங்களை யார் செய்தாலும் அதனை பாராட்டுவேன்" என வெளிப்படையாக கூறியுள்ளார்.
லியோ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்ட விஜய், நேற்று தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்திருந்தார். அப்போது தான் இரவு நேர பாடசாலை குறித்து மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்ததாக சொல்லப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் விரைவில் அரசியலில் களமிறங்குவது குறித்தும் முடிவெடுக்கவுள்ளாராம். இந்த சந்திப்பின் பின்னரே புஸ்ஸி ஆனந்த் பேட்டிக் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் டிவிட்டர் பதிவை விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











